2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் - பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு
''அரசு பள்ளிகளில், 2,000 தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர்,'' என, பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், செங்கோட்டையன் தெரிவி
த்துள்ளார்.
சென்னையில், தனியார் பள்ளி நிகழ்ச்சி ஒன்றில் அவர் கூறியதாவது:தமிழகத்தில், ஆசிரியர் பணி நியமனத்திற்கு, 'டெட்' தேர்வு, போட்டித் தேர்வு என, இரண்டு தேர்வுகள் நடத்தப்பட உள்ளன. 'டெட்' தேர்வை பொறுத்தவரை, ஆசிரியர் பணிக்கான தகுதித் தேர்வு என்ற அடிப்படையில் நடத்தப்படுகிறது.
அந்த தேர்வு, ஆசிரியர் நியமனத்திற்கான தேர்வு அல்ல. டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, அரசு வேலைக்கான நியமனத் தேர்வு தனியாக நடத்தப்படும். இதற்கான அறிவிப்பு, சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.
இந்த நியமனத் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் ஆகியுள்ளது. இந்த வழக்கை, சட்ட ரீதியாக எதிர்கொண்ட பின், நியமனத் தேர்வை நடத்தும் பணிகள் துவங்கப்படும்.அதுவரை, அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களுக்கு, டெட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை, தற்காலிகமாக நியமனம் செய்ய, அரசு முடிவு செய்துள்ளது. மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், 2,000 ஆசிரியர்கள் தற்காலிகமாக நியமிக்கப்பட உள்ளனர். மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு, இதற்கான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு உள்ளது.மத்திய அரசின் நுழைவுத் தேர்வுகளை, ஆங்கிலம் மற்றும் ஹிந்தியுடன், தமிழிலும் எழுத, வாய்ப்பு தர வேண்டும். இது குறித்து, தமிழக அரசின் சார்பில், மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்.இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
Comments
Post a Comment