Skip to main content

உயர் கல்வியை கேள்விக்குறியாக்கும் உத்தேச வர்த்தக ஒப்பந்தம்

நைரோபியில் செவ்வாய்க்கிழமை (டிச.15) முதல் நடைபெற உள்ள உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில், சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கையில் (WTO-​GA​TS) இந்தியா கையொப்பமிட்டால் உயர் கல்வி முற்றிலும் வணிகமயமாகிவிடும், கல்வியின் நோக்கமே சிதைந்து விடும் என்று கல்வியாளர்கள் எச்சரித்துள்ளனர்.



 உலகமயமாக்கலின் விளைவுகள் இந்திய மருத்துவ உயர் கல்வித் துறையை தொடர்ந்து குறிவைத்துள்ளன. கல்வி சேவையை வணிக மயமாக்கும் முயற்சி, 160 நாடுகள் உறுப்பினர்களாக உள்ள உலக வர்த்தக அமைப்பின் தோகா மாநாட்டில் (2001) தொடங்கியது.


 இதன் தொடர்ச்சியாக 2005-இல் உயர் கல்வியில் உலக வர்த்தக அமைப்புக்கு சந்தை வாய்ப்பை வழங்கும் ஒப்புதலை, உறுப்பு நாடான இந்தியாவும் ஆமோதித்தது. ஆனால், இதற்கான பேச்சுவார்த்தை இதுவரை நிறைவடையவில்லை. கென்யத் தலைநகர் நைரோபியில் வரும் 15-ஆம் முதல் 18-ஆம் தேதி வரை நடைபெறும் 10-ஆவது அமைச்சர்கள் நிலையிலான மாநாட்டில் இது இறுதி செய்யப்பட உள்ளது.

 இந்த ஒப்பந்தம் கையெழுத்தானால் இந்திய உயர் கல்வியில் வெளிநாடுகளின் ஆதிக்கம் அதிகரிக்கும். ஜனநாயக ரீதியில் செயல்படும் உயர் கல்வி அமைப்பு முற்றிலும் வலுவிழக்கும் என்கிறார் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அமைப்பின் பொதுச் செயலர் பிரின்ஸ் கஜேந்திரபாபு.

 இந்திய கல்வித் துறையில் ஏற்கெனவே தனியாரின் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இதன் விளைவுகளையே தாங்க முடியாத நிலையில் இருக்கும் எளிய, நடுத்தர மக்கள், இப்போது உயர் கல்வியில் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பதால் மேலும் பாதிக்கப்படுவர்.
 வெளிநாடுகளுடன் ஆசிரியர்கள், மாணவர்கள், தொழில்நுட்பங்களை பரிமாறிக் கொள்வதில் தவறில்லை. ஆனால், நிறைவேற உள்ள இந்த ஒப்பந்தம் அதுபோன்றது அல்ல. 

 இது, மாணவர்களை நுகர்வோர் என்றும், கல்வி நிறுவனங்களை "சர்வீஸ் புரொவைடர்' என்றும், கல்வியை "கமாடிட்டி' (வர்த்தகப் பொருள்) என்றும் அழைக்கிறது. இதன் மூலம் கல்வியானது சேவை என்ற நிலையில் இருந்து சந்தைப் பொருள் என்ற நிலைக்கு மாறுகிறது.

 சந்தையில் கிடைக்கும் சரக்குகளில் ஒன்றாக கல்வி மாறுவதால், உலக வர்த்தக அமைப்பின் 160 நாடுகளும் இந்திய கல்வித் துறையில் வர்த்தகம் செய்ய இயல்பாகவே அனுமதி கிடைத்துவிடும். வெளிநாட்டு நிறுவனங்கள் இங்கு கல்வி வணிகம் செய்ய வரும்போது அவர்களின் பாடத் திட்டங்கள், ஆசிரியர்களின் தரம் போன்றவற்றை ஒழுங்குபடுத்த இங்குள்ள கல்வி அமைப்புகளால் முடியாது.

 ஏனெனில், பல்கலைக்கழக மானியக் குழு, தொழில்நுட்பக் கல்விக் குழு, மருத்துவ கவுன்சில் போன்ற அமைப்புகளைக் கலைத்துவிட்டு அவற்றுக்குப் பதிலாக பிற சேவைகளில் ஏற்கெனவே இருப்பதைப் போன்ற தற்சார்பு ஒழுங்குமுறை ஆணையங்கள் அமைக்கப்பட்டுவிடும்.

 இது, பொதுநலனின்றி தற்சார்புத் தன்மை கொண்டதாகவும், வெளிநாட்டு மூலதனத்துக்கு சாதகமாகவும் இருக்கும். மேலும், இடஒதுக்கீடு, கல்வி உதவி, உள்ளூர் மொழிகள் போன்றவற்றுக்கும் பாதிப்பு இருக்கும். அத்துடன், மாணவர்களின் கல்வி உதவித் தொகை, சிறுபான்மை நிறுவனங்களுக்கான மானியங்களும்கூட கேள்விக்குறியாகும் என்கிறார் பிரின்ஸ்.

 இந்திய கல்வி நிறுவனங்களின் தரம் மேலும் பாதிக்கப்படும்: அன்னிய கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் சேவை செய்ய வேண்டும் என்று எந்தக் கட்டாயமும் இல்லை. அவர்களின் நோக்கம் கல்வி வணிகம் செய்வது மட்டுமே. 

 உள்ளூர் கல்வி நிறுவனங்களை விழுங்கிவிடக் கூடிய வெளிநாட்டு கல்வி நிறுவனங்களை அனுமதிப்பது தவறு என்கிறார் அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் இ.பாலகுருசாமி.

 இந்தியாவில் உள்ளூர் தொழில்களின் வளர்ச்சிக்குத் தேவையான கல்வித் திட்டம் உள்ளது. ஆனால், அன்னிய நிறுவனங்கள் அவர்களது கல்வித் திட்டத்தின்படி பயிற்றுவித்து, நமது மாணவர்களை அவர்களின் நிறுவனங்களில் பணியாற்ற அழைத்துச் செல்லும் வாய்ப்புள்ளது.
 மேலும், அன்னிய கல்வி நிறுவனங்களால் இந்தியாவில் கல்விக் கட்டணம் உயரும். அதேபோல, இந்திய கல்வி நிறுவனங்களில் ஆசிரியர்களின் தரம் கவலை அளிக்கும் விதமாக உள்ளது. அன்னிய நிறுவனங்கள் காலூன்றினால், இங்கு சொற்ப அளவில் உள்ள தரமான ஆசிரியர்களையும் கூடுதல் ஊதியம் என்ற ஆசையைக் காட்டி இழுத்துக் கொள்ளும் நிலை உருவாகும்.
 இதனால், இந்திய கல்வி நிறுவனங்களின் தரம் மேலும் பாதிக்கப்படும். தரமான கல்விக்கு முதலாவது காரணம் ஆசிரியர்கள். அடுத்ததுதான் அடிப்படைக் கட்டுமானங்கள். ஆனால், அன்னிய நிறுவனங்கள் கட்டுமானங்களைக் காட்டி மாணவர்களை ஈர்க்க முயற்சிப்பார்கள். இந்திய கல்வி முறைக்கு எதிரான ஒப்பந்தத்தை மத்திய அரசு புறக்கணிக்க வேண்டும் என்றார் அவர்.

 அரசுக் கல்லூரிகளில் கட்டணம் உயரும்: கல்வியை சேவை வர்த்தகத்தில் சேர்ப்பது மாபெரும் தவறு என்கிறார் ஈரோடு கலைக் கல்லூரியின் பொருளாதாரத் துறைத் தலைவர் என்.மணி.

 சேவை வர்த்தகப் பொருளாக்கப்பட்ட பிறகு கல்வி, முற்றிலும் சந்தை விதிகளின் அடிப்படையில் இருக்கும். எனவே, இது லாப - நஷ்ட கணக்கையே பார்க்கும். 
 இதனால் அறிவியல், தொழில்நுட்பம், மருத்துவக் கல்விகள் இனி இங்கு முற்றிலும் வணிகமாக மாறும் என்பது மிக ஆபத்தானது. இந்தியாவில் இப்போது உள்ள பல பொறியியல் கல்லூரிகள் உள்ளூர் போட்டியையே சமாளிக்க முடியாமல் திணறுகின்றன. 
 வெளிநாட்டு பல்கலைக்கழகங்களால் அவை மூடப்படும் அபாயமும் உள்ளது. இந்த ஒப்பந்தத்தால் உலகமயமாக்கலுக்குப் பிறகு, லாபத்தை எதிர்பார்த்து தொடங்கப்பட்ட புதிய நிறுவனங்களே இந்தியாவில் கடை விரிக்கும். அவற்றிடம் தரத்தை எதிர்பார்க்க முடியாது.
 அதேபோல, வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களுடனான பிரச்னைகளை உள்ளூர் நீதிமன்றத்தின் மூலம் தீர்வு காண முடியாது. அதற்காக அமைக்கப்படும் உலக வர்த்தக அமைப்பின் தீர்ப்பாயத்துக்கே செல்ல முடியும். மொத்தத்தில் சேவைத் துறையில் வர்த்தகம் பற்றிய பொது உடன்படிக்கை என்பது போராடி வெளியேற்றிய ஏகாதிபத்தியத்தை மீண்டும் வரவேற்பதற்கு ஒப்பானது என்கிறார் அவர்.
 பெரிய அளவில் தாக்கம் இருக்காது: அதேநேரம் அன்னிய பல்கலைக்கழகங்கள் வருவதால் நமக்கு பெரிய அளவிலான தாக்கம் இருக்காது என்கிறார் தமிழ்நாடு பல்கலைக்கழக ஆசிரியர்கள் சங்க முன்னாள் பொதுச் செயலர் பேராசிரியர் சி.பிச்சாண்டி.
 இந்த ஒப்பந்தம் நிறைவேறினால் உயர் கல்வியானது பெரு முதலாளிகளுக்குச் சாதகமானதாக இருக்கும் என்றாலும், அன்னிய பல்கலைக்கழகங்களால் இந்தியாவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிட முடியாது. ஏனெனில், லாபத்தை குறிக்கோளாகக் கொண்டிருக்கும் அவர்கள், வரும்போதே ஆசிரியர்கள், கல்வித் திட்டம், கட்டுமான வசதிகளைக் கொண்டிருக்கமாட்டார்கள். 
 எனவே, முதலில் அவர்கள் நமது ஆசிரியர்களையே சார்ந்திருக்க வேண்டும். ஆசிரியர்கள், கட்டுமானங்கள் போன்றவற்றை கருத்தில் கொண்டு, முதல் கட்டமாக இங்குள்ள தனியார் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படவே திட்டமிடுவார்கள்.
 வெளிநாட்டு நிறுவனங்கள் உள்ளூர் சூழலை சார்ந்து, கலை, கலாசாரத்தை அடிப்படையாகக் கொண்டு செயல்படும் கல்வித் திட்டத்தை மாற்றி, உலகளாவிய, வர்த்தகத்தை அடிப்படையாகக் கொண்ட பாடங்களைக் கொண்டு வர முயற்சிப்பார்கள். 
 இது அரசு கல்வி நிறுவனங்களுக்கும், பாரம்பரிய இந்திய கல்வி முறைக்கும் எதிரானதாகவே இருக்கும். எனவே, வரும்முன் காத்துக் கொள்ளவும் விழித்துக் கொள்ளவும் சரியான நேரம் இதுவே என்றார் அவர்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்