தமிழகத்தில், ஓராண்டு பணி முடித்த, இளைஞர் காவல் படையினருக்கு, போலீஸ் வேலை வழங்க அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.கடந்த, 2012 அக்டோபர், 29ல், சட்டசபையில், 110வது விதியின் கீழ், முதல்வர் ஜெயலலிதா, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், 'தமிழக போலீசாருக்கு
உதவி செய்ய, தமிழ்நாடு சிறப்பு காவல் படை உருவாக்கப்படும். இந்தப் படைக்கு, மாதம், 7,500 ரூபாய் சம்பளத்தில், 10 ஆயிரத்து, 500 பேர் தேர்வு செய்யப்படுவர்; ஓராண்டு பணிக்கு பின், உரிய தேர்வு நடத்தி, போலீசாக பணி அமர்த்தப்படுவர்' என, தெரிவித்தார். இதையடுத்து, சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மூலமாக, எழுத்து, உடல்தகுதி தேர்வு நடத்தப்பட்டது.
மருத்துவப் பரிசோதனைக்கு பின், 9,022 பேர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்களுக்கு, போலீஸ் போன்றே பயிற்சி அளித்து, லிப்ட் ஆப்பரேட்டர், கணினி உதவியாளர், ஓட்டுனர் உள்ளிட்ட பணிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டன.
காவல் நிலையங்களிலும் பணி அமர்த்தப்பட்டனர். அதிக வேலை பளு காரணமாக, இவர்களில் சிலர் வேறு பணிக்கு சென்று விட்டனர். மீதமுள்ளோர், தங்களை போலீசாக அறிவிக்கக் கோரி, ஒரு நாள், வேலைக்கு செல்லா போராட்டம் நடத்தினர்.இந்நிலையில், இளைஞர் படையில் சேர்ந்து ஓராண்டு பணி முடித்தவர்களை, தமிழ்நாடு சிறப்பு காவல் படையில் சேர்த்துக் கொள்ள, இம்மாதம், 20ம் தேதி அரசாணை வெளி
யிடப்பட்டு உள்ளது.முதலில், 8,500 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பொது அறிவு பாடப்பிரிவில், 60; போலீஸ் துறை சார்ந்த அடிப்படை அறிவு குறித்து, 40 என, 100 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்க உள்ளது. அதில், குறைந்தபட்சம், 35 மதிப்பெண் எடுக்க வேண்டும்; காலிப் பணியிடங்களுக்கு ஏற்ப பணி அமர்த்தப்படுவர் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.