Skip to main content

பள்ளியில் மாணவர்கள் மோதல்; 17 பேர் காயம்; சாலை மறியல்- போலீஸ் தடியடி

கடலூர் அருகே அரசுப் பள்ளியில் திங்கள்கிழமை மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலில், இரு ஆசிரியர்கள் உள்பட 17 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களை போலீஸார்
தடியடி நடத்திக் கலைத்தனர்.
கடலூர் அருகே உள்ள திருவந்திபுரத்தில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை இப்பள்ளியில் இரு தரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் 5 பேர் காயமடைந்தனர்.

இந்நிலையில், திங்கள்கிழமை வழக்கம் போல் பள்ளிக்கு வந்த மாணவர்களை, ஒரு தரப்பு மாணவர்களும், அவர்களுக்கு ஆதரவாக அதே கிராமத்தைச் சேர்ந்த சிலரும் சேர்ந்து தாக்கத் தொடங்கினர். அப்போது, மாணவர்களை சமாதானம் செய்ய முயன்ற பள்ளியின் உதவி தலைமை ஆசிரியை க.சித்ராவை (54) சிலர் கீழே தள்ளி விட்டதில், அவர் காயமடைந்தார். இச்சம்பவத்தைப் பார்த்துக் கொண்டிருந்த தலைமை ஆசிரியர் சீ.சுப்பிரமணியன் (57) மயக்கமடைந்தார்.


 தகவலறிந்த திருப்பாதிரிபுலியூர் காவல் ஆய்வாளர் ந.சரவணன், போலீஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மோதலை கட்டுப்படுத்தினர். மோதலில் காயமடைந்திருந்த 15 மாணவர்கள், 2 ஆசிரியர்களை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
 சாலை மறியல்; தடியடி: இதற்கிடையில், மாணவர்களைத் தாக்கியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, திருவந்திபுரத்தைச் சேர்ந்தவர்கள் கடலூர்-பாலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடம் காவல்துறை துணைக் கண்காணிப்பாளர் சி.லோகநாதன், கடலூர் வட்டாட்சியர் எஸ்.சிவா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மோதலில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 12 மாணவர்களை போலீஸார் கைது செய்து வாகனத்தில் ஏற்றினர். ஆனால், அவர்களை விடுவிக்க வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூச்சலிட்டதால் போலீஸார் லேசான தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அப்போது, சிலர் போலீஸாரின் வாகனம் மீது கல்வீசினர்.
 இந்நிலையில், பில்லாலித்தொட்டி காலனி பகுதியினர், தங்கள் பகுதி மாணவர்கள் தாக்கப்பட்டதைக் கண்டிப்பதாகக் கூறி, மறியலில் ஈடுபட்டனர். அவர்களிடமும் வட்டாட்சியர் பேச்சுவார்த்தை நடத்தினார்.
 சம்பவ இடத்தில் முதன்மைக் கல்வி அலுவலர் ர.பாலமுரளி நேரில் சென்று விசாரணை நடத்தினார். பிரச்னையில் ஈடுபட்ட மாணவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததோடு, பள்ளிக்கு செவ்வாய்க்கிழமை வரை விடுமுறை அளித்தும் உத்தரவிட்டார். இந்த மோதலைத் தொடர்ந்து இரு தரப்பினரிடமும் மாவட்ட நிர்வாகம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. மேலும். இரு கிராமங்களிலும் பாதுகாப்புக்காக போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்