சான்றிதழ்கள் சேமிப்பு மையம் துவக்கி மத்திய அரசு புதுமை: இதனால் வேலை தேடுவோர், வேலை தருவோர் பயனடைவர்
இணையவழி சான்றிதழ் சேமிப்பு மையத்தை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் துவக்கி உள்ளது; இதனால், அமைச்சகத்தால் நட
த்தப்படும் தொழில் பயிற்சி நிறுவனங்களில் படித்த மாணவர்களின் சான்றிதழ் விவரங்களை எல்லாம், அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்கள், எளிதாக பார்த்துக் கொள்ளலாம்; அத்துடன், போலி சான்றிதழ் பிரச்னைகளுக்கும் தீர்வு காணப்படும்.
கடந்த 2011ம் ஆண்டில், டில்லி பல்கலைக் கழகத் தில், போலி சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, மோசடி நடந்தது கண்டு பிடிக்கப்பட்டது. அதே போல், 2012ல், இந்திய தொழில்நுட்ப நிறுவனங்கள், இதேபோன்ற பிரச்னையைச் சந்தித்தன. பிற்படுத்தப்பட்டோருக்கான இடஒதுக்கீட்டின் பலன்களைப் பெற, விண்ணப்பதாரர்கள் பலர், போலி சான்றிதழ்கள் சமர்ப்பித்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டன.
போலி சான்றிதழ்கள்:
கடந்த 2014ல், ஆய்வு நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில், 'கல்வி தொடர்பான பிரச்னை களில், 66 சதவீதம் போலி சான்றிதழ்கள் தொடர்பானவை' என, தெரிவித்து உள்ளது. இதுபோன்ற போலி சான்றிதழ் மோசடிகளை தவிர்க்கவும், போலி சான்றிதழ்கள் கொடுத்து வேலையில் சேருவதை தடுக்கவும், நல்ல பயிற்சி பெற்ற நபர்கள் வேலை தரும் நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கவும், இணையவழி சான்றிதழ் சேமிப்பு மையத்தை, மத்திய தொழிலாளர் நல அமைச்சகம் துவக்கி உள்ளது. இதன்மூலம், இந்த அமைச்சகத்தால் நடத்தப்படும் திறன் மேம்பாட்டு மையங்களில், பயிற்சி மற்றும் பட்டம் பெற்ற மாணவர்களின் விவரங்களை, அவர்களுக்கு வேலை தரும் நிறுவனங்களே, நேரடியாக பரிசோதித்துக் கொள்ளலாம். இந்த சான்றிதழ் சேமிப்பு மையம், நான்கு ஆண்டுகள் தாமதமாக இயங்கத் துவங்கினாலும், இந்தியாவிலுள்ள, 11 ஆயிரம் தொழில் பயிற்சி நிறுவனங்களிலும், இதர கல்வி மையங்களிலும், தொழிற்கல்வி பயிற்சி பெறும், 20 லட்சம் பேர், ஒவ்வொரு ஆண்டும் பயனடைவர் என, எதிர்பார்க்கப்படுகிறது.
இதுதொடர்பாக, மத்திய தொழிலாளர் நல அமைச்சக செயலர், சங்கர் அகர்வால் கூறியதாவது: வேலை தேடுவோருக்கும், வேலை கொடுப்போருக்கும், இந்த சான்றிதழ் சேமிப்பு மையம் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். மேலும், தொழில் பயிற்சி நிறுவனங்களில், மாற்றத்தை உண்டாக்குவதற்கான அடுத்தக்கட்ட நடவடிக்கையாகவும் அமையும். உற்பத்தித் துறைக்கு பயிற்சி பெற்ற தொழிலாளர்களை தருபவை, தொழில் பயிற்சி நிறுவனங்களே. அவற்றில் மாற்றங்கள் ஏற்படுத்தினால் மட்டுமே, 'மேக் இன் இண்டியா' திட்டம் வெற்றி பெறும். தற்போது துவக்கப்பட்டுள்ள, சான்றிதழ் சேமிப்பு மையம் தவிர, தேர்வு மேலாண்மை முதல், மின்னணு சான்றிதழ்கள் வழங்குவது வரையிலான நடவடிக்கைகளில், அடுத்தக்கட்டமாக, புதிய முறையை அமல்படுத்தவும் தீர்மானிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பு அலுவலகங்கள் மாற்றி அமைக்கப்பட உள்ளன; அவை மாற்றி அமைக்கப்பட்டதும், சான்றிதழ்கள் சேமிப்பு மையமானது, அதனுடன் இணைக்கப்படும். இவ்வாறு, சங்கர் அகர்வால் கூறினார்.
பதிவேற்றம்:
புதிதாக துவக்கப்பட்டுள்ள சான்றிதழ் சேமிப்பு மையத்தில், தொழில் பயிற்சி நிறுவனங்களில் பட்டம் பெற்ற, 1.50 லட்சம் பேரின், கல்வி தொடர்பான விவரங்கள், ஏற்கனவே பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளன. அடுத்த சில நாட்களில், 20 லட்சம் பேரின் கல்விச் சான்றிதழ் விவரங்கள் பதிவேற்றமாகி விடும் என, தொழிலாளர் நல அமைச்சக அதிகாரிகள் சிலர் தெரிவித்தனர்.
1கோடி பேருக்கு பயிற்சி:
மத்திய தொழிலாளர் நலத் துறை இணையமைச்சர் (தனிப்பொறுப்பு) பண்டாரு தத்தாத்ரேயா கூறியதாவது: வரும் 2017ம் ஆண்டுக் குள், ஒரு கோடி பேருக்கு தொழில் பயிற்சி அளிக்க, எங்கள் அமைச்சகம் திட்டமிட்டு உள்ளது. தற்போது துவக்கப்பட்டு உள்ள, சான்றிதழ் சேமிப்பு மையமானது, ஒளிவுமறைவற்ற செயல்பாடுகளுக்கு துணை புரிவதோடு, பயிற்சி பெற்ற நபர்கள், தங்களின் நிலையை மேம்படுத்திக் கொள்ளவும், பயிற்சி பெறுவோருக்கான சேவைகளை மேம்படுத்தவும் உதவும். இவ்வாறு, அவர் கூறினார்.
விவரங்கள் கம்ப்யூட்டரில்...:
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குனர், ஜெனரல் அலோக் குமார் கூறியதாவது: திறன் மேம்பாட்டில், மத்திய அரசு அதிக அக்கறை காட்டி வருகிறது. பணிக்கு தயாராக உள்ள மனிதவளத்தையே, கம்பெனிகளும் எதிர்பார்க்கின்றன. தற்போதைய சான்றிதழ் சேமிப்பு மையம் மூலம், வேலை தேடுவோரின் நம்பகத்தன்மையை, நிறுவனங்கள் சரிபார்த்துக் கொள்ள முடியும். தொழில் பயிற்சி பெற்ற நபர்கள், வேலைக்கு சேர வரும் போது, அவர்களின் மின்னணு சான்றிதழ்களில் குறிப்பிடப்பட்டுள்ள குறியீடுகளை, நிறுவனங்கள் ஸ்கேனிங் செய்தாலே, சம்பந்தப்பட்ட நபர் பெற்ற மதிப்பெண்கள் உட்பட, அனைத்து விவரங்களும் கம்ப்யூட்டரில் தெரிந்து விடும்.