அரசு பொதுத் தேர்வுப் பணிகள்: அமைச்சு பணியாளர் போர்க்கொடி: கல்வி அதிகாரிகளை சுற்றுது சர்ச்சை
அரசு பொதுத் தேர்வு பணிகளில் இருந்து விடுவிக்க வேண்டும் என தமிழக கல்விதுறை அமைச்சு பணியாளர்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.
பள்ளி கல்வித் துறையில் இருந்து அரசுத் தேர்வுத் துறை
தனியாக பிரிக்கப்பட்டு இயக்குனர் பணியிடம் உருவாக்கப்பட்டது. மதுரை உட்பட 6 இடங்களில் மண்டல அரசு தேர்வுகள் துணை இயக்குனர் அலுவலகங்கள் உள்ளன. இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் உள்ளனர். ஆனால் 'இத்துறை பணியாளர்களை பொதுத் தேர்வுப் பணிகளில் ஈடுபடுத்துவது மிகவும் குறைவாக உள்ளது' என கல்வித் துறை அமைச்சுப் பணியாளர்கள் தற்போது சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.
இதுகுறித்து தமிழ்நாடு கல்வித் துறை அலுவலக பணியாளர் சங்கம் சார்பில் சென்னையில் நடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில் 'கல்வித் துறையில் பணிபுரியும் அனைத்து நிலை அலுவலக பணியாளர்களுக்கும் தொடர்பில்லாத வேறு துறையான தேர்வுத் துறை சார்ந்த பணிகளில் ஈடுபடுத்துவதை தவிர்த்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். பிளஸ் 2, பத்தாம் வகுப்பு தேர்வுப் பணிகளின்போது தஞ்சை, திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் அமைச்சுப் பணியாளர்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை தான் அவர்களின் இந்த முடிவுக்கு காரணம். அதேநேரத்தில் சம்மந்தப்பட்ட கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சுப் பணியாளர்கள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.
இப்பிரச்னை குறித்து தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர் சங்க மாநிலத் தலைவர் சவுரி அருணாசலம், பொருளாளர் துரைப்பாண்டி கூறியதாவது: தமிழகத்தில் 1974 முதல் தேர்வுத் துறை தனியாக பிரிக்கப்பட்டது. அங்கு பணியாளர்கள் இருந்தும் பொதுத் தேர்வுகளில் அவர்களை ஈடுபடுத்துவது மிகவும் குறைவாக உள்ளது. 'ஆன்லைன்' பயன்பாடு மூலம் தேர்வுத் துறை பணிகள் மிக எளிமையாக்கப்பட்டன. 90 சதவீதம் தேர்வுப் பணிகளை கல்வி துறை அமைச்சுப் பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். அதேநேரம் தற்போது தேர்வுப் பணிகளை காரணம் காட்டி அமைச்சுப் பணியாளர்கள் மீது நடவடிக்கை எடுத்த தேர்வுத் துறை, கல்வி அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை. இதை வலியுறுத்தியும், வரும் தேர்வுகளின் போது அப்பணிகளில் இருந்து விடுவிக்க கோரியும் ஏப்.,15ல் உண்ணாவிரதம், ஏப்.,22 ல் விடைத்தாள் திருத்தும் மையங்கள் முன் வாயிற் கூட்டம் போன்ற போராட்டங்கள் நடத்த முடிவு செய்துள்ளோம் என்றனர்.