Skip to main content

ராணுவத்தில் 6 ஆயிரம் காலியிடங்களுக்கு ஆள் சேர்ப்பு


இந்திய ராணுவத்தில் காலியாக உள்ள 6 ஆயிரம் இடங்களுக்கு ஆள்களைச் சேர்ப்பதற்கான முகாம் வரும் 4-ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடங்கவுள்ளது. தமிழகத்தில் நாகப்பட்டினம், தருமபுரி மற்றும்
புதுச்சேரி ஆகிய இடங்களில் இந்த முகாம்கள் நடத்தப்படவுள்ளன.
இதுகுறித்து தலைமைச் செயலகத்தில் உள்ள சென்னை பிரிவு பணி நியமன தலைமையகத்தின் துணை இயக்குநர் ஜெனரல்
எஸ்.எம்.சங்க்ராம் டால்வி (படம்) செய்தியாளர்களிடம் புதன்கிழமை கூறியதாவது:
தமிழகத்தில் 17 முதல் 21 வயது வரையுள்ள இளைஞர்களில் 12.72 சதவீதம் பேரும், கர்நாடகத்தில் 7.92 சதவீதம் பேரும் ராணுவத்தில் சேருகின்றனர். தமிழகம், ஆந்திரம், கேரளம் உள்ளிட்ட 5 தென் மாநிலங்களைச் சேர்த்தால், ராணுவத்தில் அவர்களது பங்கு 21 சதவீதமாக இருக்கிறது.
6 ஆயிரம் இடங்கள் காலி: தமிழகம், ஆந்திரம், தெலங்கானா ஆகிய மூன்று மாநிலங்களிலும் சேர்த்து மொத்தம் 6 ஆயிரம் ராணுவ வீரர் பணியிடங்கள் காலியாகவுள்ளன. அதில், தமிழகத்தில் இருந்தும் 2 ஆயிரத்து 413 இடங்களை நிரப்ப வேண்டும். இதற்கான ஆள் சேர்ப்பு முகாம் வரும் 4-ஆம் முதல் தேதி தொடங்குகிறது. தமிழகத்தில் வேலூர், திருவண்ணாமலை, மதுரை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் ராணுவத்தில் சேருகின்றனர். மொத்தம் மூன்று கட்டங்களாக தேர்வு நடத்தப்படும். ஒவ்வொரு கட்டத் தேர்வும் 8 முதல் 10 நாள்கள் நடைபெறும். சான்றிதழ் சரிபார்ப்பு, உடல் தகுதித் தேர்வு, மருத்துவச் சான்றுத் தேர்வு ஆகிய தேர்வுகள் நடத்தப்படும்.
இடைத் தரகர்களை நம்பக் கூடாது : ராணுவப் பணியில் சேர்த்து விடுவதாக இடைத் தரகர்கள் யாரேனும் கூறி பணம் கேட்டதால் அதை நம்பக் கூடாது. ராணுவ ஆள் சேர்ப்பு முகாம்கள் அனைத்தும் மிகவும் வெளிப்படையான முறையில் நடத்தப்படுகிறது. எனவே, இளைஞர்கள் இடைத்தரகர்களை நம்பக் கூடாது.
பொறியியல் பட்டதாரிகள்: ராணுவத்தில் சேருவோருக்கு பயிற்சிக் காலத்திலேயே நல்ல ஊதியம் அளிக்கப்படுகிறது. ராணுவத்தில் பொறியியல், ஐ.டி.ஐ., படிப்பு படித்தவர்களுக்கு வாய்ப்புகள் அதிகளவுள்ளன. அவர்கள் தொழில்நுட்ப ரீதியிலான பணிகளைத் தேர்ந்தெடுக்கலாம். மேலும், அவர்களுக்கு பதவி உயர்வுகளும் எளிதாகக் கிடைக்கும். பொறியியல் கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் படிக்கும் மாணவர்கள் அதிகளவு ராணுவத்தில் சேருவதற்கு கல்லூரிகளில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்படும்.
என்னென்ன சான்றுகள் அவசியம்: 8, 10-ஆம் வகுப்பு, பிளஸ் 2 படிப்பு படித்ததற்கான சான்றுகள், பத்தாம் வகுப்பு அல்லது பிறப்புச் சான்று, நன்னடத்தைச் சான்று, எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பதற்கான சான்று, ஜாதிச் சான்று, தேசிய மாணவர் படை சான்று (வைத்திருந்தால்), 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் பெற்றோரின் ஒப்புதல் கடிதம், எட்டு பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை சான்றிதழ் சரிபார்ப்பின் போது எடுத்து வர வேண்டும் என்று அவர் தெரிவித்தார்.

எந்தெந்த ஊர்களில்...

தமிழகத்தில் இரண்டு இடங்களிலும், புதுச்சேரியிலும் ஆள் சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது. இதற்கான அறிவிப்பு விவரம்:

நாகப்பட்டினத்தில் :பெரம்பலூர், அரியலூர், திருச்சி, கரூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சீர்காழி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு நாகப்பட்டினத்தில் ஜூன் 4-ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரையில் ஆள்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தருமபுரியில்: கோவை, திண்டுக்கல், நீலகிரி, சேலம், மதுரை, ஈரோடு, தருமபுரி, தேனி, நாமக்கல், கிருஷ்ணகிரி, திருப்பூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோருக்கு தருமபுரியில் ஜூலை 22 முதல் 31-ஆம் தேதி வரையில் நடைபெறும்.

புதுச்சேரியில்: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், கடலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுச்சேரி ஆகிய பகுதிகளைச் சேர்ந்தோருக்கு புதுச்சேரியில் செப்டம்பர் 4 முதல் 13-ஆம் தேதி வரை நடத்தப்படும். மேலும், www.joinindianarmy.nic.in என்ற இணையதளத்தில் விவரங்களைத் தெரிந்துகொள்ளலாம்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா