தமிழகத்தில் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து நடைபெற்று வரும் மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
பூமிக்கு அடியில் பாறைப் பரப்பில் மீத்தேன் இருக்கிறது. அப்படி நாகை, திருவாரூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களின் நிலப்பகுதியின்
கீழ் ஏராளமான மீத்தேன் வாயு உள்ளதாகவும், அதை எடுத்து மின் உற்பத்தி செய்யப்போவதாகவும் கூறிய கடந்த காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு. இதற்கான ஒப்பந்தத்தை, ஹரியானாவில் பதிவுசெய்யப்பட்ட கிரேட் ஈஸ்டர்ன் எனர்ஜி கார்ப்பரேஷன் லிமிடெட் (Great eastern energy corporation Ltd.) என்ற நிறுவனத்துக்கு வழங்கியது.
ஆனால், இந்த மீத்தேன் திட்டத்தால் இயற்கை வளங்கள் நாசமாகி விடும் என்றும், டெல்டா மாவட்டங்கள் பாலைவனமாகி விடும் என்றும் விவசாயிகள் மற்றும் அப்பகுதி மக்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது.
இதையடுத்து, தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் மட்டுமின்றி, விவசாயிகளும் மீத்தேன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தினர். 'இயற்கை வேளாண் விஞ்ஞானி’ நம்மாழ்வார் உயிருடன் இருந்தபோது, தனது கடைசி நாட்களை மீத்தேன் திட்ட எதிர்ப்பில்தான் செலவிட்டார். பல ஊர்களில் அவரது தலைமையில், மக்கள் குழாய்களைப் பிடுங்கி எறிந்தனர்.
இந்நிலையில், மாநிலங்களவையில் இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் எழுப்யிய கேள்விக்கு பதிலளித்த மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான், இந்த மீத்தேன் திட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவித்தார்.