Skip to main content

காது கேளாதோருக்கான பட்டப்படிப்பு: 15 இடங்களுக்கு 150 பேர் விண்ணப்பம்


விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வரும் நிலையில், காது கேளாதோருக்கான சிறப்புப் பட்டப் படிப்பு மேலும் சில கல்லூரிகளில் தொடங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்
என்ற எதிர்பார்ப்பு மாணவர்களிடையேயும், கல்வியாளர்களிடையேயும் எழுந்துள்ளது.
இந்த பட்டப் படிப்புகள் தமிழகத்தில் இப்போது ஒரே ஒரு அரசுக் கல்லூரியிலும், தனியார் கல்லூரி ஒன்றிலும் வழங்கப்பட்டு வருகின்றன.
முதன் முதலில் சென்னையில் உள்ள புனித லூயிஸ் கல்லூரியில்தான் இந்த பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. அதன் பிறகு, சென்னை மாநிலக் கல்லூரியில் அறிமுகம் செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றன. பி.காம்., பி.சி.ஏ. என்ற இரண்டு பிரிவுகள் மட்டுமே இவர்களுக்கு உள்ளன.
இந்தப் படிப்புகளில் சேர்வதற்காக இரண்டு கல்லூரிகளுக்கும் ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கணக்கான மாணவர்கள் விண்ணப்பிப்பதாக பேராசிரியர்கள் கூறுகின்றனர். ஆனால், நிர்ணயிக்கப்பட்ட இடங்கள் 15 மட்டுமே இருப்பதால், ஆர்வத்துடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் வாய்ப்பு கிடைப்பதில்லை என்கின்றனர் பேராசிரியர்கள்.
இதுகுறித்து மாநிலக் கல்லூரி பேராசிரியர்கள் கூறியதாவது:
மாநிலக் கல்லூரியைப் பொருத்தவரை காது கேளாதோருக்காக பி.காம்., பி.சி.ஏ. என்ற இரண்டு தனிப் பிரிவுகள் உள்ளன. தமிழகத்தில் வேறு எந்த அரசுக் கல்லூரியிலும் இவர்களுக்கான பட்டப் படிப்பு இல்லை. இந்தப் படிப்புகளில் தலா 15 இடங்கள் மட்டுமே உள்ளன. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் 150-க்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்கின்றனர்.
ஆண்டுக்கு ஆண்டு விண்ணப்பிப்போர் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, ஒவ்வொரு ஆண்டும் அரசிடம் சிறப்பு அனுமதி பெற்று தாற்காலிக கூடுதல் இடங்களை உருவாக்கி கூடுதல் மாணவர் சேர்க்கையை மாநிலக் கல்லூரி நடத்தி வருகிறது.
அதன்படி, 2014-15-ஆம் கல்வியாண்டில் 15 கூடுதல் இடங்கள் உருவாக்கப்பட்டன. ஆனால், வருகிற 2015-16-ஆம் கல்வியாண்டில் இந்தக் கூடுதல் இடங்களில் மாணவர் சேர்க்கை நடத்த முடியாது. அதற்கு மீண்டும் அரசிடம் அனுமதி பெற வேண்டும்.
மேலும், தனியார் கல்லூரியிலும் மிகக் குறைந்த அளவே இடங்கள் இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பட்டப் படிப்புகளில் சேர முடியாத நிலை ஏற்பட்டு வருகிறது.
அதோடு, மாநிலக் கல்லூரியில் இந்தப் பிரிவுகளில் 2 முழு நேர பேராசிரியர்கள் மட்டுமே உள்ளனர். இந்த பேராசிரியர் பற்றாக்குறையை சமாளிக்க 4 கௌரவ விரிவுரையாளர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளபோதும், அவர்களுக்கு ஊதியம் முறையாக வழங்கப்படுவதில்லை. இதனால், கற்பித்தலும் பாதிக்கப்பட்டு வருகிறது.
எனவே, இந்தப் படிப்பு இடங்களை அரசு நிரந்தரமாக உயர்த்த வேண்டும் என்பதோடு, முழு நேர பேராசிரியர் இடங்களையும் முழுமையாக நிரப்ப வேண்டும் என்றனர்.
இதுகுறித்து தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் சங்க நிர்வாகி தீபக் கூறியதாவது:
பார்வைக் குறைபாடு உள்ளிட்ட பிற உடல் குறைபாடு உள்ளவர்கள் சாதாரண பட்டப் படிப்பு வகுப்புகளில் சேர்ந்து படிக்க முடியும். ஆனால், காது கேளாதவர்கள் அப்படி சேர்ந்து படிப்பது கடினம். இவர்களுக்கான நவீன கருவிகள் வந்துவிட்டன என்றபோதும், தெளிவான புரிதல் இருக்காது.
எனவே, சைகை பாஷை மூலமான கற்றலே இவர்களுக்கு எளிதாக இருக்கும். மேலும், தமிழகம் முழுமைக்கும் சென்னையில் மட்டுமே ஒரே ஒரு கல்லூரியில் இவர்களுக்கான சிறப்பு பட்டப் படிப்புகள் இருக்கின்றன. இதனால் அனைத்து மாவட்டங்களைச் சேர்ந்தவர்களும் சென்னைக்கு வந்தாக வேண்டிய கட்டாயமும் ஏற்படுகிறது.
எனவே, மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு மேலும் சில அரசுக் கல்லூரிகளில் இந்த சிறப்பு பட்டப் படிப்புகளைத் தொடங்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்