கண்ணுக்கு எட்டாத தூரம். எங்கேயோ பறக்கும் விண்கலன். எங்கேயோ சுற்றும் எரிநட்சத்திரம். பூமியில் இருந்தபடி, ஆய்வுக்கலத்தை இயக்கி,
விண்வெளியில் சுற்றிக்கொண்டு இருக்கும் வால்
நட்சத்திரத்தின் மீது இறக்கப் போகிறார்கள் விஞ்ஞானிகள்.
அறிவியல் தொழில்நுட்பத்தில் முதன்முறையாக இந்த நிகழ்வை நடத்திக் காட்டப் போகிறார்கள். விண்வெளி ஆராய்ச்சியில் பெரிய திருப்புமுனையாக இது கருதப்படுகிறது.
இந்த அதிசயம் நடக்கப்போகும் தூரம், பூமியில் இருந்து 50 கோடி கி.மீட்டர். ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் தான் இந்த செயற்கரிய செயலை செய்யப்போகிறது. இந்நிறுவனம் பத்து ஆண்டுகளுக்கு முன் அனுப்பிய ரொசெட்டா என்ற விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்றுள்ள ஆயிரம் கிலோ எடையுள்ள பிலே என்ற ஆய்வுக்கலன், வால்நட்சத்திரத்தின் மீது வெற்றிகரமாக இறங்கப் போகிறது. 400 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படும் இந்த வால்நட்சத்திரத்தில் படிந்துள்ள பனிகட்டிகள் மற்றும் நுண்துகள்கள் பற்றி பிலே ஆராய்ந்து பூமிக்கு தகவல்களை அனுப்பும்.