புதுடில்லி: நாடு முழுவதும், 45 மத்திய பல்கலை; 318 மாநில அரசு பல்கலைகள்; 185 தனியார் பல்கலைகள்; 129 நிகர்நிலை பல்கலைகள் உள்ளன. இவை தவிர, கல்லூரிகள், என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.,க்கள் என பல்வேறு கல்வி
நிறுவனங்கள் உள்ளன.
பல்கலைகளில், புதிய பாடப்பிரிவு துவக்கம், அங்கீகாரம் பெறுதல், ஆசிரியர் நியமனத்திற்கு யு.ஜி.சி., அனுமதி அவசியம். யு.ஜி.சி., நிதி உதவிடன் செயல்படும், அனைத்து, மத்திய, மாநில பல்கலைகளுக்கும், யு.ஜி.சி., தலைவர் வேத பிரகாஷ் ஒரு கடிதம் அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது: நாடு முழுவதும், பல்வேறு பல்கலைகளில், பல்வேறு பாடங்களில், ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகளவில் உள்ளன. அந்த வகுப்புகளை கவனிக்க, பகுதி நேர, ஒப்பந்த, தற்காலிக ஆசிரியர்கள் உள்ளனர். பல்கலைகளில் தரமான ஆசிரியர்களை நியமிக்க வேண்டும். அவர்களை, விளம்பரங்கள், பல்கலை இணையதளங்கள், கல்வியாளர்கள் பரிந்துரையின் பேரிலும் நியமிக்கலாம்.
காலிப் பணியிடங்களை, அடுத்த கல்வி ஆண்டு துவங்குவதற்கு முன் நிரப்ப வேண்டும். அதில், இடஒதுக்கீட்டு முறையை பின்பற்ற வேண்டும். இப்பிரச்னையில், பல்கலையின் பொது வளர்ச்சி நிதியை யு.ஜி.சி., நிறுத்தி வைக்கும் நிலை ஏற்படாது என நம்புகிறேன். இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.