Skip to main content

கல்வியுடன் நல்லொழுக்கத்தையும் போதிப்பது அவசியம்


நல்ல சமுதாயம் உருவாக பள்ளிகளில் மாணவர்களுக்கு கல்வியுடன் நல்லொழுக்கங்களையும் போதிப்பது அவசியம் என்று, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி வலியுறுத்தினார்.


நாமக்கல் டிரினிடி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி வெள்ளி விழா வெள்ளிக்கிழமை தொடங்கியது. விழாவுக்குத் தலைமை வகித்து மாவட்ட ஆட்சியர் வி.தட்சிணாமூர்த்தி பேசியது:

தமிழகத்தை 2023-ஆம் ஆண்டுக்குள் கல்வி, சமூக, பொருளாதாரத்தில் வளர்ச்சி பெற்ற மாநிலமாக உயர்த்திட தமிழக அரசு, தமிழ்நாடு தொலைநோக்குத் திட்டம்- 2023 என்ற இலக்கு நிர்ணயித்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது.
நாட்டிலேயே வேறெந்த மாநிலத்திலும் இல்லாத வகையில், கல்விக்காக ரூ.20,000 கோடி நிதி ஒதுக்கீடு செய்து கல்வித் துறையில் பல மாற்றங்களையும் செய்ததன் விளைவாக தமிழக மாணவர்களின் கல்வித் திறன், தேர்ச்சி விகிதம் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்து வருகிறது.

கல்வி வளர்ச்சியில் அரசின் இத்தகைய முயற்சிகளுக்குத் தனியார் பள்ளிகளும் தோள் கொடுக்கின்றன.பல ஆண்டுகளுக்கு முன்பு லாரி, கோழி முட்டை, துணி உற்பத்தியில் மட்டுமே புகழ் பெற்ற நாமக்கல் மாவட்டத்துக்கு "கல்வி மாவட்டம்' என்ற பெருமை கிடைக்க தனியார் பள்ளிகளே முக்கியக் காரணமாகும். அத்தகைய கல்விக்கூடங்களுக்கு முன்னோடியாக நாமக்கல் டிரினிடி பள்ளி விளங்குகிறது. 

பிள்ளைகளைப் பெற்றோர்கள் படிக்க வைத்தால் மட்டும் போதாது, அவர்களுக்கு நல்ல ஒழுக்கத்தையும் கற்றுத் தர வேண்டும். பல்வேறு காரணங்களால் இளைய சமுதாயத்தினரின் கவனம் சிதறி இறுதியில் அவர்கள் ஒழுக்கமற்ற நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இவற்றைப் போக்கி மாணவர்களை நற்குணங்கள் நிறைந்தவர்களாக உருவாக்க பள்ளிகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

சிந்தனைத் திறனையும், நற்பண்புகளையும் வளர்த்து ஒவ்வொருவரையும் சொந்தக் காலில் நிற்கவைப்பதாக கல்வி இருக்க வேண்டும் என்றார் சுவாமி விவேகானந்தர். இதைச் செயல்படுத்த பள்ளிகள் கல்வியை மட்டுமன்றி நல்லொழுக்கங்களையும் போதிக்க வேண்டும் என்றார் அவர்.
கே.வைத்தியநாதன்: விழாவில், "தினமணி' ஆசிரியர் கே.வைத்தியநாதன் பேசியது:

எனக்கு முன்பு இங்கு பேசிய பள்ளியின் முன்னாள் மாணவி, ஆசிரியர்கள் தன்னைச் செதுக்கியதாகக் கூறி அவர்களைப் பாராட்டினார். இன்றைய காலகட்டத்தில் ஆசிரியர்களை மாணவர்கள் கண்டுகொள்வதில்லை என்ற கருத்தை பொய்யாக்கும் விதத்தில் இங்கு பேசிய மாணவர்களின் பேச்சு அமைந்துள்ளது.

கலை, இலக்கியம், ஆங்கிலம் ஆகியவற்றுக்கு டிரினிடி பள்ளி மிகுந்த முக்கியத்துவம் அளிப்பதாக மாணவர்கள் கூறினர். இது இங்கிலாந்தில் இருக்கக்கூடிய கலை, இலக்கியத்துக்கு புகழ்பெற்ற டிரினிடி கல்லூரியை நினைவுபடுத்துவதாக அமைந்துள்ளது.

மேலும், இந்தப் பள்ளியின் நிர்வாகிகள் பேசியபோது, நாங்கள் இந்தப் பள்ளியை வெறும் மதிப்பெண்களைப் பெறுவதற்காக மட்டும் நடத்தவில்லை. மாணவர்களை மதிப்பு மிக்கவர்களாகவும், மரியாதை மிக்கவர்களாகவும் உருவாக்குவதற்காகவே நடத்தி வருவதாகக் கூறினர்.

தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் கல்வி, வணிகமயமாகிவிட்டது என்ற விமர்சனங்களுக்கு ஆளாகி வரும் நிலையில், இந்தப் பள்ளி நன்கொடைகள் ஏதும் வசூலிக்காமல் வணிக நோக்கமின்றி செயல்பட்டு வருவது ஒரு நல்ல முன்னுதாரணமாகத் தெரிகிறது. வணிக நோக்கிலான பள்ளிகளுக்கு அதன் நிர்வாகிகளைக் குறை கூறுவதை விட பெற்றோரையும் குறை சொல்ல வேண்டும்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு மிக அதிகமான அழுத்தம் கொடுத்து அவர்களை "பிரஷர் குக்கர்' போல வைத்திருக்கும் நிலைமை வரக் கூடாது. ஆனால், இந்த நிலை தமிழகத்தில் மட்டுமன்றி நாடு முழுவதிலும் நீடிக்கிறது. இந்த நிலை இதற்கு முன்பு அமெரிக்காவில்தான் இருந்தது. ஆனால், அவர்கள் இதைக் கைகழுவி விட்டனர்.

மேலைநாட்டவர் கை கழுவிவிடுவதை நாம் கைப்பற்றிக் கொள்வது வருத்தமளிக்கக் கூடிய செயல். கல்வி என்பது டாலர்கள் சம்பாதிப்பதற்காக மட்டுமல்ல. வாழ்க்கைக்கு பணம் தேவைதான். ஆனால், பணம் மட்டுமே வாழ்க்கையல்ல.

இந்தப் பள்ளி மாணவர்களுக்கும், நிர்வாகிகளுக்கும் ஓரு வேண்டுகோள். பள்ளியில் ஆங்காங்கே தன்னம்பிக்கையை வளர்க்கும் விவேகானந்தரின் உருவப் படத்தையும், தேச பக்தியை வலியுறுத்தும் பாரதியின் படத்தையும் வைக்க வேண்டும்.

நம் நாட்டில் இதுவரை உருவாகியுள்ள அறிஞர்கள், சமூக சிந்தனையாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் அனைவரும் கிராமங்களில் இருந்தே உருவாகியுள்ளனர். சிந்தனையாளர்களை உருவாக்குபவை கிராமங்கள்தான்.சென்னையில் படித்தால் மட்டுமே வாழ்க்கையில் உயரிய இடத்தை அடைய முடியும் என்ற எண்ணத்தைக் கைவிட்டு தன்னம்பிக்கையுடன் படித்தால் கிராமங்களில் இருந்து வரும் இன்றைய மாணவ, மாணவிகளும் அறிஞர்களாகவும், சர்வதேச விருதுக்குத் தகுதியானவர்களாகவும், சீர்திருத்தவாதிகளாகவும் மாற முடியும் என்றார் அவர். 

கோவை கே.ஜி.மருத்துவமனை குழுமத்தின் தலைவர் மருத்துவர் ஜி.பக்தவத்சலம் சிறப்புரையாற்றினார். டிரினிடி அகாதெமி தலைவர் ஆர்.குழந்தைவேல், இயக்குநர்கள் பி.தயாளன், எஸ்.கோபால், ஜெ.அருண்குமார், டிரினிடி மகளிர் கல்லூரித் தலைவர் பி.கே.செங்கோடன், டிரினிடி பன்னாட்டு பள்ளி தலைவர் பி.பழனிசாமி, டிரினிடி மகளிர் கல்லூரிச் செயலாளர் கே.நல்லுசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

"என்னைச் செதுக்கிய எங்கள் பள்ளி' என்ற தலைப்பில் முன்னாள் மாணவர்கள் மருத்துவர் பி.சிவசங்கர், ஆர்.பாலாஜி, கே.என்.ராகவி, பி.நிலேஷ்வர் ஆகியோர் பேசினர்.முன்னதாக, பள்ளியின் செயலர் டி.சந்திரசேகரன் வரவேற்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்