தமிழ்த்துறை பாடத்தில் 14 பகுதிகள் நீக்கம் : அழகப்பா பல்கலை உறுதி
அழகப்பா பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளில் தமிழ்த்துறை முதல் ஆண்டு பாடத்தில் சர்ச்சைக்குரிய 14 பகுதிகள் நீக்கப்பட உள்ளதாக பல்கலை தரப்பில் கூறப்பட்டுள்ளது.
அழகப்பா பல்கலை, அதைச் சார்ந்த கல்லூரிகளுக்கு கவிஞர் வாலியின்
'நிஜகோவிந்தம்' என்ற கவிதைத் தொகுப்பு ஒரு பாடமாக வைக்கப்பட்டுள்ளது. 'நாற்காலி ஆசை' என்ற கவிதையில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய், முன்னாள் துணை பிரதமர் அத்வானி குறித்தும்; 'ஜன சமுத்துரத்தில் ஒரு தீவாக...' என்ற கவிதையில் முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் குறித்தும் விமர்சிக்கப்பட்டுள்ளது. மேலும் 'ஒருதலைக் காமம்' என்ற கவிதையில் தாம்பத்ய உறவு குறித்து ஆபாசமான வரிகள் இடம் பெற்றுள்ளன. இதுகுறித்து ஜூலை 26 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. இதையடுத்து பல்கலைக்கு பல்வேறு தரப்பிலும் எதிர்ப்பு கிளம்பியது. பா.ஜ., சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பா.ஜ., மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாநில செயலாளர் முத்துலட்சுமி உள்ளிட்ட குழுவினர் பல்கலை அதிகாரிகளை நேற்று சந்தித்தனர். 'தினமலர்' நாளிதழில் குறிப்பிடப்பட்ட மூன்று கவிதைகள் மற்றும் 14 கவிதைகளை நீக்க பல்கலை சார்பில் உறுதி அளிக்கப்பட்டது. பா.ஜ., நிர்வாகிகள் கூறுகையில், 'பாடத்தில் உள்ள 52 கவிதைகளும் பல்கலை தரப்பில் ஆய்வு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், அத்வைதம், நாற்காலியின் ஆசை, சுயமரியாதை, ஜன சமுத்திரத்தில் ஒரு தீவாக, ஆசிரியர் தீர்ப்பே முடிவானது, போதுமடா சாமி, அப்பன் காட்டிய வழி, இருட்டில் இரண்டு நிழல்கள், நடுத்தர குடும்பத்தில் ஒரு நம்பிக்கை துரோகம், ஒருதலைக் காமம், ஒரு நாம சண்டை, உலகோடு ஒட்டி வாழ், பிறவிப்பயன், தமிழை பற்றி... என்ற கவிதைகள்
நீக்கப்பட உள்ளதாக பல்கலை தரப்பில் உறுதி அளித்தனர்' என்றனர்.