Skip to main content

மழை நீர் சேகரிப்பு: 30ம் தேதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை தீவிரம்

தமிழகத்தில் 32 ஆயிரம்அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு: 30ம் தேதிக்குள் முடிக்க பொதுப்பணித்துறை தீவிரம்

பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் தமிழகம் முழுவதும் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்களில், மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பை உருவாக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணியை
வருகிற 30ம் தேதிக்குள் முடிக்கவும் பொதுப்பணித்துறை திட்டமிட்டுள்ளது. தமிழகம் முழுவதும் நிலத்தடி நீர்மட்டத்தை அதிகப்படுத்தும் வகையில் கடந்த 2003ல் மழை நீர் சேகரிப்பு திட்டத்தை அரசு கொண்டு வந்தது. இதைதொடர்ந்து அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்து கட்டிடங்களிலும், அதற்கான கட்டமைப்பு உருவாக்கப்பட்டன. மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இல்லாத கட்டிடங்களுக்கு மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கப்பட்டது. மேலும், புதிதாக கட்டப்படும் கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு இருந்தால் மட்டுமே பணி நிறைவு சான்றிதழ் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதனால், மழை நீர் கட்டமைப்புகள் உருவாக்கப்பட்டன. எனவே, வடகிழக்கு பருவ மழை காலங்களில் நீலத்தடி நீர்மட்டம் உயரத் துவங்கியது. இந்த நிலையில், இத்திட்டம் சில ஆண்டுகள் கண்டிப்பாக கடைபிடிக்கப்பட்டு வந்த நிலையில், அதன் பிறகு கிடப்பில் போடப்பட்டது. கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்ததில் நீர்ஆதாரங்களான ஏரிகள், கால்வாய்கள் வறண்டு காணப்பட்டன. கடும் வறட்சியின் காரணமாக மாநில முழுவதும் 400 அடிக்கும் கீழ் நிலத்தடி நீர்மட்டம் சென்று விட்டது. இந்த பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில் கடந்த மே 23ம் தேதி தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையில் அவசர ஆலோசனைக்கூட்டம் நடந்தது. 

இக்கூட்டத்தில் பருவமழை தொடங்கவுள்ள நிலையில் மீண்டும் தமிழகம் முழுவதும் மழை நீர் சேகரிப்பு பணிகளை தீவிரப்படுத்த முடிவு செய்யப்பட்டது. அதன் படி தமிழகம் முழுவதும் கோயில் குளங்கள், கட்டிடங்கள் மட்டுமின்றி பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 32 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகளை புனரமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து தமிழகம் முழுவதும் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள அரசு கட்டிடங்களில் இதற்கான பணிள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரி கூறியதாவது: தமிழகம் முழுவதும் 32 அரசு துறைகள் உள்ளன. 

இந்த துறைகளின் கட்டிட பராமரிப்பு பணிகள் பொதுப்பணித்துறையின் மூலம் தான் மேற்கொள்ளப்படுகிறது. இதில் பெரும்பாலான அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்புகள் ஏற்கனவே கடந்த 2003ல் ஏற்படுத்தப்பட்டன. இருந்தாலும், தற்போது எத்தனை அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு திட்டத்துக்கான கட்டமைப்பு உள்ளன. அவற்றில் புனரமைக்கப்படவேண்டியவை, புதிதாக அமைக்கப்பட வேண்டியவை உள்ளிட்ட தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. இதை வைத்து தற்போது 32 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு கட்டிடங்களில் மழை நீர் சேகரிப்பு கட்டமைப்பு பணிகள் ஏற்படுத்தும் பணி நடந்து வருகிறது. இப்பணியை வருகிற 30ம் தேதிக்குள் முடிக்கவும் திட்டமிட்டுள்ளோம்‘ என்றார்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்