மருத்துவத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய முறையை கண்டுபிடித்ததற்காக வழங்கப்படுகிறது
இந்த ஆண்டு மருத்துவத்துக்கான
நோபல் பரிசு, புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய முறையை கண்டுபிடித்த அமெரிக்க, ஜப்பான் பேராசிரியர்களுக்கு கூட்டாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மருத்துவம், விஞ்ஞானம், பொருளாதாரம், இலக்கியம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் புதிய சாதனை படைத்தவர்களையும், அமைதிக்காக பாடுபடுபவர்களையும் நோபல் பரிசு அமைப்பு ஆண்டுதோறும் தேர்ந்து எடுத்து நோபல் பரிசு வழங்கி கவுரவித்து வருகிறது.
இந்த ஆண்டு (2018) மருத்துவத்துக்கான நோபல் பரிசு அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வரும் ஜேம்ஸ் ஆலிசன், ஜப்பானில் உள்ள கியோட்டோ பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரியும் தசுகு ஹோன்ஜே ஆகியோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
உலக அளவில் மனிதகுலத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கும் புற்று நோய்க்கு புதிய சிகிச்சை முறையை கண்டுபிடித்ததற்காக இவர்கள் இருவரும் கூட்டாக நோபல் பரிசுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டு இருப்பதாக நோபல் பரிசு குழு அறிவித்து உள்ளது.
இவர்களில் புற்றுநோய் சிகிச்சை நிபுணரான ஜேம்ஸ் ஆலிசன், தனது ஆய்வின் மூலம், ஒரு குறிப்பிட்ட புரதம்தான் நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை கட்டுப் படுத்துகிறது (‘பிரேக்’) என்றும், இந்த கட்டுப்பாட்டை விலக்கி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சிகிச்சை அளிப்பதன் மூலம் புற்றுநோயை கட்டுப்படுத்துவதில் நல்ல பலன் கிடைக்கும் என்பதையும் கண்டுபிடித்து உள்ளார்.
இதேபோல் தசுகு ஹோன்ஜோவும், நோய் எதிர்ப்பு செல்களில் உள்ள ஒரு புரதம்தான் நோய் எதிர்ப்பு செல்களை தூண்டிவிடாத வகையில் தடுப்பாக இருப்பதையும், அதை கட்டுப்படுத்தி நோய் எதிர்ப்பு செல்களை தூண்டும் முறையையும் கண்டு அறிந்தார்.
வருகிற டிசம்பர் மாதம் சுவீடனின் ஸ்டாக்ஹோம் நகரில் நடைபெறும் விழாவில் இவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்படும்.
நோபல் பரிசு பெற்ற பேராசிரியர்களில் ஒருவரான ஜேம்ஸ் ஆலிசனின் மனைவி பத்மானி சர்மா இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர். கயானா நாட்டில் பிறந்தவர். இவரும் புற்றுநோய் சிகிச்சை நிபுணர் ஆவார். இவரது தந்தை இந்தியர்; தாயார் கயானாவைச் சேர்ந்தவர். பத்மானி சர்மாவுக்கு 10 வயதாக இருந்த போது அவரது குடும்பம் கயானாவில் இருந்து அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தது.
ஜேம்ஸ் ஆலிசனின் தாயாரும், சகோதரரும் புற்றுநோயால் மரணம் அடைந்தனர். இதுவே அவர் புற்றுநோய் சிகிச்சைக்கு புதிய முறையை கண்டுபிடிப்பதற்கு தூண்டுகோலாக அமைந்தது.
Comments
Post a Comment