பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:-Bothimaram - Covai Woman ICT Group.
*பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்:*
*திருக்குறள்*
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
விளக்கம்:
அறியாதவர், அறத்திற்கு மட்டுமே அன்பு துணையாகும் என்று கூறுவர் ; ஆராய்ந்து பார்த்தால் வீரத்திற்கும் அதுவே துணையாக நிற்கின்றது.
*பழமொழி*
Every bird must hatch its own eggs
அழுதாலும் பிள்ளை அவள்தான் பெற வேண்டும்.
*பொன்மொழி*
விழுந்தால் அழாதே!
எழுந்திரு!
- விவேகானந்தர்
*இரண்டொழுக்க பண்பாடு*
1.அனைவரிடமும் அன்பாக பழகுவேன்.
2.நான் பெரியோரை மதித்து நடப்பேன்.
*பொதுஅறிவு*
1.உலக காடுகள் தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?
மார்ச் 21
2.தமிழ்நாட்டின் முதல் பெண் காவல் துறை ஆணையர் யார்?
லத்திகா சரண்
*English words and. Meanings*
Ensure ----- உறுதிப்படுத்து
Instead-----அதற்கு பதிலாக
Victory ------வெற்றி
Prayer--------வழிபாடு
Activity-------செயல்பாடு
*நீதிக்கதை*
பால.ரமேஷ்.
ஒரு உண்மையான....
இறைபக்திக்கு எது முக்கியம்?
முனிவர் ஒருவர் மரத்தடியில் அமர்ந்து தம் வேட்டியில் இருந்த கிழிசலை தைத்துக்கொண்டு இருந்தார். அவர் ஒரு சிவபக்தர். அப்போது சிவனும், பார்வதியும் வான்வெளியில் வலம் வந்து கொண்டிருந்தனர். மரத்தடியில் ஒளிப்பிழம்பாய் அமர்ந்திருந்த முனிவரை கண்டதும் உளம் நெகிழ்ந்த அம்மை, ஐயனைப் பார்த்து மரத்தடியில் பார்த்தீர்களா? என்றாள்.
“பார்த்தேன்” என்றார் பரமன்.
பார்த்தபிறகு சும்மா எப்படி போவது ஏதேனும்
வரம் கொடுத்துவிட்டுப் போகலாம் வாருங்கள் என்றாள் அம்மை. அட, அவன் அந்த நிலையெல்லாம் கடந்தவன். இப்போது அவனிடம் செல்வது வீண்வேலை, வேண்டாம் வா! நம் வழியே போகலாம் என சொல்ல, ஆனால் அம்மை பார்வதி விடவில்லை. ஐயனை வற்புறுத்தி மரத்தடிக்கு அழைத்து வந்துவிட்டாள்.
வணக்கம், முனிவரே! என
வணங்கினர் அம்மையும் அப்பனும்.
முனிவர் நிமிர்ந்து பார்த்தார். அடடே எம்பெருமானும் பெருமாட்டியுமா வரணும் வரணும்… என்று வரவேற்றவர் தாகத்திற்கு மோர் கொடுத்து உபசரித்தார். அவ்வளவுதான். மீண்டும் கிழிசலைத் தைக்கத் தொடங்கிவிட்டார்.
சற்றுநேரம் பொறுமையாகக் காத்திருந்துவிட்டு, சரி, நாங்கள் விடை பெறுகிறோம் என்றனர் அம்மையும் அப்பனும். மகிழ்ச்சியாய்ப் போய் வாருங்கள் 'வணக்கம்' என்று சொல்லி விட்டு மீண்டும் கிழிசலைத் தைக்க முனைந்தார் முனிவர்.
அம்மை குறிப்புக் காட்ட, அப்பன் பணிவாய்க் கேட்டார். முனிவரே நாங்கள் ஒருவருக்குக் காட்சி கொடுத்து விட்டால் வரம் கொடுக்காமல் போவதில்லை. எனவே தாங்கள் ஏதாவது வரம் கேளுங்கள். கொடுக்கிறோம் என சொல்ல,
முனிவர் சிரித்தார். வரமா! உங்கள் தரிசனமே எனக்குப் போதும் பரமா! வரம் எதுவும் வேண்டாம். உங்கள் வழியைத் தொடருங்கள் என்று சொல்லி விட்டுப் பணியில் ஆழ்ந்தார்.
அப்பனும் அம்மையும் விடவில்லை. ஏதாவது
வரம் கொடுக்காமல் செல்ல மாட்டோம் என்று பிடிவாதமாய் நிற்க, முனிவர் வேறு வழியின்றி ஒரு வரம் கேட்டார். நான் தைக்கும்போது இந்த ஊசிக்குப் பின்னாலேயே நூல் போக வேண்டும் அது போதும் என்றார்.
இதைக்கேட்ட அம்மையும் அப்பனும் திகைத்தனர். ஏற்கனவே ஊசிக்குப் பின்னால் தான் நூல் போகிறதே. இதற்கு நாங்கள் ஏன் வரம் தர வேண்டும்? என்று அம்மை பணிவாய் கேட்கிறார்.
அதைத்தான் நானும் கேட்கிறேன். நான் ஒழுங்கு தவறாமல் நடந்துகொண்டு வந்தால் வரவேண்டிய பலன் நியதிப்படி தானாகப் பின்னால் வருமே. இடையில் நீங்கள் எதற்கு எனக்கு வரம் தர வேண்டும்? என்று கேட்டார் முனிவர்.
முனிவரின் விளக்கத்தைக் கேட்ட அம்மையும், அப்பனும் சிரித்துவிட்டு சென்றனர்.
'இருள்நீங்கி இன்பம் பயக்கும் மருள்நீங்கி
மாசறு காட்சி யவர்க்கு.
நீதி!
தூய்மையான இறை நம்பிக்கை கொண்டவர் களுக்கு நாம் சரியாக நடந்துகொண்டால் நமக்குரிய விளைவும் சரியாக இருக்கும் என்ற மனத்தெளிவு இக்கதையிலே நமக்கு பிறக்கிறது.
*இன்றைய செய்திகள்*
23.07.2018
* ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை தோறும் தனியார் வேலைவாய்ப்புச் சந்தை நடைபெற இருப்பதாக மாவட்ட ஆட்சியா் எஸ்.நடராஜன் தெரிவித்துள்ளார்.
* உடல் ஆரோக்கியத்துக்காக பிரத்யேக தொலைக்காட்சி சேனலை விரைவில் நிறுவ நிதி ஆயோக் முடிவு செய்துள்ளது.
* 118 அடியைக் கடந்து நிரம்பி வரும் மேட்டூர் அணை, முழுக்கொள்ளளவை எட்டினால் மொத்த உபரி நீரும் தொடர்ந்து விடுவிக்கப்படவுள்ளது
* ஜூனியர் ஆசிய சாம்பியன்ஷிப்பில் மல்யுத்த போட்டியில் சச்சின் ரதி மற்றும் பாட்மிண்டன் போட்டியில் லக்ஷ்யா சென் ஆகியோர் தங்கப்பதக்கம் வென்றனர்.
* ஜெர்மனி பெர்லின் நகரில் நடைபெற்ற வில்வித்தை உலகக் கோப்பை போட்டியில் இந்திய அணி 1 புள்ளி வித்தியாசத்தில் தங்கப் பதக்கத்தை தவற விட்டு வெள்ளி பதக்கத்தை வென்றது.
*Today's headline*
Comments
Post a Comment