Skip to main content

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக இளங்கலை பட்டப்படிப்புகளுக்கு ஆன்–லைன் மூலம் விண்ணப்பம்:

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக பட்டப்படிப்புகளுக்கு இந்த ஆண்டு முதல் ஆன்–லைன் மூலம் விண்ணப்பிக்கும் முறை அமல்படுத்தப்படுகிறது. 18–ந் தேதி முதல் விண்ணப்பங்களை பதிவேற்றம்
செய்யலாம் என்று துணைவேந்தர் ராமசாமி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் சார்பில், 2018-–2019ஆம் கல்வியாண்டு, 12 பட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை குறித்து, பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதில், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவன உபயதாரர்களுக்கான இட ஒதுக்கீட்டின் கீழ், ஒவ்வொரு பட்டப்படிப்பிலும், ஒவ்வொரு கல்லூரி வளாகத்திற்கும் 10 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது.

சிறப்பு இட ஒதுக்கீட்டில், முன்னாள் ராணுவ வீரர்களின் மகன் மற்றும் மகள்களுக்கு இளமறிவியல் (ஹானர்ஸ்) வேளாண்மை பிரிவில் 6 இடங்களும், இளமறிவியல் தோட்டக்கலை பிரிவில் 1 இடமும், இளம் தொழில் நுட்பம் (வேளாண்மைப் பொறியியல்) பிரிவில் 1 இடமும் ஒதுக்கப்பட்டு உள்ளது. சுதந்திர போராட்டத் தியாகிகளின் சந்ததியினருக்கு 1 இடமும், தலை சிறந்த விளையாட்டு வீரர்களுக்கு இளமறிவியல் வேளாண்மை பிரிவில் 4, தோட்டக்கலையில் 1 இடமும், மாற்றுத்திறனாளிகள் (5%) இளமறிவியல் பிரிவில் 30 இடங்களும் ஒதுக்கப்பட்டு உள்ளது.

18ந் தேதிமுதல் பதிவேற்றம்

இது குறித்து, துணைவேந்தர் கு.ராமசாமி நிருபர்களிடம் கூறியதாவது:–

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக 2018-–2019ஆம் கல்வியாண்டுக்கான 12 பட்ட படிப்புகளுக்கான விண்ணப்பங்கள், 18ந் தேதி முதல் பதிவேற்றம் செய்யப்படுகிறது.

பதிவேற்றம் செய்யப்படாத விண்ணப்பங்கள் ஏற்கப்படாது. பதிவேற்றம் செய்த விண்ணப்பதாரர்களுக்கு மட்டுமே, அரசு இட ஒதுக்கீடும், தனியார் கல்லூரி இட ஒதுக்கீடும் செயல்படுத்தப்படும்.

இந்த ஆண்டு முதல் விண்ணப்ப பதிவேற்றம், கல்லூரி அனுமதி அனைத்துமே இணையதளம் மூலமாகவே நடைமுறைப்படுத்தப்படுகிறது. இந்த நடைமுறையால், மாணாக்கர்களும், பெற்றோர்களும் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழத்திற்கு நேரில் வராமலேயே, தாங்கள் வசிக்கும் பகுதியிலேயே இருந்து கொண்டு, தர வரிசைப் பட்டியல் அறிவித்த பின், தங்களுக்கான கல்லூரி, பாடப்பிரிவுகளை தேர்வு செய்து கொள்ளலாம்.

இணையதளத் திட்டம்

இது இந்த ஆண்டு புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டு இருக்கின்ற இணையதளம் திட்டமாகும். கடந்த காலங்களில் போல் இல்லாமல் இந்த ஆண்டு விண்ணப்படிவத்தினை 47 விருப்ப வகைகள் கொடுக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் இதிலிருந்து 5 விருப்ப வகைகளை தேர்வு செய்து கொள்ளலாம். கடந்த ஆண்டு சட்ட சபையில் அறிவித்த படி, இணையதளத் திட்டம் மற்றும் ஸ்லைடிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

பெற்றோர்களும் மாணவர்களும் விண்ணப்ப படிவங்களை ஒரு முறைக்கு இரண்டு முறை கவனமாக படித்து எவ்வித பிழையுமில்லாமல் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்ப படிவங்கள் பதிவேற்றம் செய்ய கடைசி நாள் ஜூன் 17ந் தேதி ஆகும். 26 தனியார் கல்லூரிகளும், 14 அரசு கல்லூரிகளும் உள்ள நிலையில், இந்த ஆண்டு புதியதாக தரம் உயர்த்தப்பட்ட 3 கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளது. அவை பட்டுப்புழு வளர்ச்சி கல்லூரி, உயிரியல் தொழில்நுட்ப கல்லூரி, வேளாண்மை வணிக கல்லூரி ஆகும்.

15% இடஒதுக்கீடு

2 காலப் பாடத்திட்டங்களான வேளாண் பொறியியலில் உள்ள உணவு தயாரிப்பு பொறியியல் என்பதை, உணவு தொழில் நுட்பவியல் எனவும், பி.டெக் தோட்டக்கலை என்பதை பிஎஸ்சி ஹானர்ஸ் தோட்டக்கலை என்றும் மத்திய அரசின் வேண்டுகோளின் படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு மத்திய அரசு மூலம் அகில இந்திய வேளாண்மைப் படிப்புகளுக்காக தேர்வுகள் நடத்தப்படுகிறது. இதில், தேர்வாகும் மாணவர்களுக்காக, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 15% ஒதுக்கீடு உள்ளது. இது தனியார் கல்லூரிக்கு பொருந்தாது. இதை கொண்டு மாணாக்கர்கள் 2 வகை வழிகளில் பயன்படுத்தி கொள்ளலாம் என்று தெரிவித்தார்.

மாணவர் சேர்க்கை முறை

மேனிலைப்பள்ளி தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில் மாணவர்கள் தேர்வு செய்யப்படுவர். மாணவர் சேர்க்கை ஒற்றைச் சாளரமுறையில் இணையதள வழி கலந்தாய்வு மூலம் நடைபெறும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த கல்வியாண்டில், ஆன்லைன் விண்ணப்ப முறையில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த முறையில் முதலில், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் இணையதளத்தினை அணுகி, விண்ணப்பத்தினை அந்த தலத்திலேயே பூர்த்தி செய்து, பதிவு செய்ய வேண்டும். சிறப்பு இடஒதுக்கீடுகளான முன்னாள் ராணுவத்தினரின் வாரிசுதாரர், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுதாரர் மற்றும் விளையாட்டு வீரர்கள், வெளிநாடு வாழ் இந்தியர்கள் மற்றும் தொழில் நிறுவன உபயதாரர்களுக்கான இட ஒதுக்கீடு பிரிவில் விண்ணப்பிப்போர் தேவையான சான்றிதழ்களை குறிப்பிட்ட நாட்களில் நேரில் கொண்டு வந்து சரிபார்க்க வேண்டும்.

விண்ணப்பக்கட்டணம்

பூர்த்தி செய்ய விண்ணபத்தினை இணையதளத்தில் பதிவு செய்தபின், விண்ணப்ப கட்டணத்தை, ஆன்லைன் பேங்கிங், கிரடிட் கார்டு, டெபிட் கார்டு வழியாக செலுத்தலாம். மேற்கூறிய வசதிகள் இல்லாதவர்கள், பதிவிறக்கம் செய்யப்பட்ட செலுத்தும் சீட்டுக் கொண்டு எந்தவொரு ஸ்டேட் வங்கி கிளையிலும் செலுத்தலாம்.

விண்ணப்பிக்க கடைசிநாள்

18ந் தேதி முதல், ஆன்லைனில் விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்யலாம். விண்ணப்பம் பதிவேற்றம் செய்வதற்கான கடைசி நாள் ஜூன் 17ந் தேதி ஆகும். சிறப்பு ஒதுக்கீட்டுக்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணிகள், ஜூன் 18ந் தேதி துவங்கி, 20ந் தேதி வரை நடைபெறுகிறது. 22ந் தேதி தரவரிசை பட்டியல் வெளியிடப்படும். ஜூலை 7ந் தேதி, சிறப்பு ஒதுக்கீடுகளுக்கான கலந்தாய்வு நடைபெறுகிறது. ஜூலை 9ந் தேதி முதல் 13ந் தேதி வரை முதல்கட்ட கலந்தாய்வு (இணையதள வழியில்) நடக்க உள்ளது. தொழில் கல்விக்கான கலந்தாய்வு 16ந் தேதியும், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மற்றும் நிறுவனங்களுக்கான கலந்தாய்வு 18ந் தேதியும் நடைபெறுகிறது.

ஜூலை 23ந் தேதி முதல் 27ந் தேதி வரை இரண்டாம் கட்ட கலந்தாய்வு கூட்டம் நடக்க உள்ளது. ஆகஸ்ட் 1ஆம் தேதி கல்லூரி துவங்கும். ஆகஸ்ட் 31ந் தேதியுடன், மாணவர் சேர்க்கை முடிகிறது.

மேலும் விவரங்களுக்கு, தொலை பேசி 0422–6611345, 6611346, காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை எல்லா வேலை நாட்களிலும் இயங்கும். மேலும், ugadmissions@tnau.ca.in என்ற மின்னஞ்சல் மற்றும் www.tnau.ac.in/admission.html என்ற இணையதளம் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம்.

இந்நிகழ்ச்சியில், கல்லூரி முதன்மையர் மகிமை ராஜா, வேளாண்மைப் பொறியியல் கல்லூரி முதன்மையர் வரதராஜன், முதுநிலை கல்வி முதன்மையர் சிவக்குமார் மற்றும் பல்கலைக்கழக அதிகாரிகள் உடனிருந்தனர்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்