உலக அளவில் மருத்துவத் துறையில் நவீனமயமாக்கப்பட்டு மிகப்பெரும் வளர்ச்சியடைந்திருக்கும் நாடு இந்தியா. இதற்கு ஆதாரமாக பல சிக்கலான அறுவை சிகிச்சைகளை வெற்றிகரமாக
முடித்து மருத்துவ சாதனைகள் படைத்திருக்கின்றன சில இந்திய மருத்துவமனைகள்.
மருத்துவம் கார்பரேட் மயமாகிவரும் நிலையில் அத்துறை சார்ந்த படிப்புகளுக்கு தேவையும் அதிகரித்துவருகிறது. ஆனால், கடந்த இரண்டு கல்வி ஆண்டுகளில் மருத்துவப் படிப்பு ‘நீட்’ என்ற நுழைவுத் தேர்வால் எட்டாக்கனியாக்கப்பட்டு மாணவர்களையும் பெற்றோர்களையும் மன உளைச்சலுக்கு ஆளாக்கியுள்ளது. பல மாணவர்கள் டாக்டர்களாக வேண்டும் என்ற கனவோடு எம்.பி.
பி.எஸ். படிக்க வேண்டும் என்று பெரும் முயற்சி மெற்கொள்கிறார்கள். இதுபோன்ற மாணவர்களுக்கு வாய்ப்பு அமையாத சூழ்நிலையில் தாராளமாக பாராமெடிக்கல் எனப்படும் மருத்துவம் சார்ந்த துணை மருத்துவப் படிப்புகளைப் படிக்கலாம்.
சமீபகாலமாக ஏராளமான மாணவர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக அரசு மருத்துவக் கல்லூரிகளும், தனியார் மருத்துவக் கல்லூரிகளும் கூட பல பாடத்திட்டங்களை அறிமுகம் செய்துவருகின்றன.
பாராமெடிக்கல் எம்.பி.பி.எஸ். படிப்புக்கு மாற்றாக அமைந்திடாது என்றாலும் மருத்துவத்துறையில் இந்தப் படிப்புக்கான பணிவாய்ப்புகளையும் சமூக அந்தஸ்த்தையும் நாம் மறுக்க முடியாது.
மருத்துவத்தில் எம்.பி.பி.எஸ். என்று சொல்லப்படும் ஐந்து ஆண்டு படிக்கும் மருத்துவர்களைப் போலவே அறுவை சிகிச்சை பணிகளில் கூட பங்கெடுத்துக்கொள்ளும் அளவு அந்தஸ்து கொண்ட பாடப்பிரிவுகள் பாராமெடிக்கல் துறையில் உள்ளது. பாராமெடிக்கலில் இளநிலையில் படிக்கவேண்டுமென்றால் ஃபார்ம்-டி, பிஸியோதெரபி, நர்சிங், ஆக்குபேஷனல் தெரபி, ஸ்பீச் தெரபி, ஆடியோலஜி மற்றும் ஸ்பீச் பேதாலஜி போன்ற பிரிவுகளைப் படிப்பதால் கட்டாயம் நல்ல எதிர்காலம் உண்டு.
இப்படிப்புகளுக்கு உள்நாட்டிலும், வெளிநாடுகளிலும் வேலைவாய்ப்புகள் உள்ளன.இந்தியாவில் மட்டுமே நர்சிங் பணிக்கு அதிகமான ஆட்கள் தேவைப்
படுகின்றனர். பிளஸ் 2-வில் இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடத்தை எடுக்க வேண்டும். சராசரி மற்றும் அதற்கு மேல் மதிப்பெண் பெறும் மாணவர்கள் பாராமெடிக்கல் கோர்ஸ் எடுத்து படிக்கலாம். அதாவது, ஐம்பது சதவீதம் அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களைப் பெறக்கூடிய மாணவர்கள் இந்தப் பாடப்பிரிவுகளை தேர்வு செய்து படிக்கலாம். பாராமெடிக்கலில் ஒருசில டிப்ளமோ படிப்புகளுக்கு பத்தாம் வகுப்பு படித்திருந்தால்கூட போதும்.
பார்ம்-டி: பார்மஸி டாக்டர் எனப்படும் இந்தப் படிப்பானது 6 வருட காலம் கொண்டதாகும். (5 வருடங்கள் வகுப்பறை படிப்பும் 1 வருடம் பயிற்சியும் உள்ளடக்கியது.) இந்தியாவில் பார்மஸி சார்ந்த துறையில் நோயாளிகளுக்கு நேரடி சேவை வழங்கும் வாய்ப்பை பெற்றது இந்தத் துறை மட்டுமே.
அதாவது, MBBS, M.D. படித்துள்ள மருத்துவர்களைப் போல அவர்கள் மருத்துவ சேவை செய்ய முடியும் (சில நிபந்தனைகளுக்கு உட்பட்டது). பிஸியோதெரபி: இப்படிப்பானது சமீப காலங்களில் மிகவும் பிரபலமாகிவரும் ஒரு படிப்பாகும். இந்தப் படிப்பிற்கு இந்தியா மற்றும் அயல்நாடுகளில் மிகுந்த வேலை வாய்ப்புகள் உருவாகிக் கொண்டிருக்கின்றன. இந்தப் படிப்பு 4½ வருட காலம் உள்ளடக்கியதாகும். இந்த பிஸியோதெரபி துறையில் பல உட்பிரிவுகள் உண்டு.
நர்சிங்: நர்சிங் பணிக்கு உலகம் முழுவதும் நல்ல வாய்ப்பு இருக்கிறது. பெரும்பாலும் பெண்கள் மட்டுமே முடிக்கும் பாடப்பிரிவு இது. ஜெனரல் நர்சிங் (3 ஆண்டு), பி.எஸ்சி. (4 ஆண்டு) பட்டப்படிப்புகளைப் படிக்கலாம். படித்துவிட்டு சிலகால அனுபவத்துக்குப் பிறகு கார்டியோ தெரபிக் நர்சிங், சைக்கார்டிஸ்டிக் நர்சிங், பிசிசியன் அசிஸ்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பை படிக்கலாம். மாநில நர்சிங் கவுன்சிலில் பதிவு செய்து வைத்தால் அரசுப் பணிக்கும் வாய்ப்பு உண்டு. முதுநிலை நர்சிங் படித்தவர்களுக்கு நல்ல வாய்ப்பும், வருமானமும் உண்டு. டிப்ளமோ நர்சிங் படிப்பும் உள்ளது.
ஆக்குபேஷனல் தெரபி: மனநிலை சார்ந்த உடலியல் கோளாறுகளை சரி செய்வது பற்றி சொல்லிக்கொடுப்பது ஆக்குபேஷனல் தெரபி. மனிதனின் செயல்பாடுகள் மாறிப்போவதற்கான மர்மத்தை ஆராய்ந்து அதற்குரிய சரியான சிகிச்சையை அளிப்பது இதன் பணி. பரபரப்பாக அவசரகதியாக ஓடும் இன்றைய மனித வாழ்க்கையினால் பலபேர் மனநிலை பாதிப்புக்கு ஆளாகின்றனர். இதுபோன்ற பாதிப்படைபவர்களுக்கு ஆக்குபேஷனல் தெரபி படித்தவர்களின் சேவை நிறையவே தேவைப்படுகிறது.
ஆடியோலஜி: பேச்சு மற்றும் காது சம்பந்தப்பட்ட மருத்துவப் படிப்பு ஆடியோலஜி. இது 3 ஆண்டு பட்டப்படிப்பு. பேச்சை மேம்படுத்தி முறைப்படுத்தும் ‘ஸ்பீச் தெரபி’ படிப்பும் உள்ளது. இது தவிர மருத்துவம் சார்ந்த நல்ல பணி வாய்ப்புகளைத் தரக்கூடிய படிப்புகள் நிறையவே உள்ளன. அவற்றில் சிலவற்றை இங்கு பார்ப்போம்.உடலின் உட்புறங்களை ஆராயும் எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன், அல்ட்ராசவுண்ட்ஸ், ஆன்ஜியோகிராம் போன்றவற்றை குறித்து அறிவதற்கு ரேடியோகிராபி படிப்பு. ரேடியோதெரபியில் சில பட்டப்படிப்புகள் (3 ஆண்டு) உள்ளன. டிப்ளமோ படிப்புகளும் உள்ளன.
நோயைக் கண்டறிதல், பகுத்து ஆராய்தல், நோயை தடுக்க ஆய்வு செய்வது மெடிக்கல் லேபரேட்டரி டெக்னாலஜிஸ்ட் பணி. இதற்குரியது மருத்துவத்துறையில் முக்கியமான படிப்பான மெடிக்கல் லேப் டெக்னாலஜி. உடலில் உள்ள நீர், ரத்தம், ரசாயன அளவு பற்றி கற்றுத்தரப்படும். இதில் டிப்ளமோ (டி.எம்.எல்.டி.), பட்டப்படிப்புகள் (பி.எம்.எல்.டி.) உள்ளன. இதை படிப்பதனால் மருத்துவமனைகள், ஆய்வு மையங்கள், மெடிக்கல் லேப்
களில் பணி வாய்ப்புகள் ஏராளம். இவை தவிர மருத்துவத் துறையில் ஓராண்டு மற்றும் இரண்டாண்டு சான்றிதழ் படிப்புகளும் உள்ளன.
Comments
Post a Comment