Skip to main content

"செட்' தேர்வுக்கான கட்டணம் உயர்வு

மாநில அளவிலான கல்லூரி ஆசிரியர் தகுதி (செட்) தேர்வுக்கான கட்டணம், அகில இந்திய அளவில் நடத்தப்படும் "நெட்' தேர்வைக் காட்டிலும் மூன்று மடங்கு அதிகமாக உள்ளது விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.


 கல்லூரி உதவிப் பேராசிரியர் பணிக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் தகுதித் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. தேசிய அளவிலான தகுதித் தேர்வு (நெட்) யுஜிசி சார்பில் நடத்தப்பட்டு வந்தது. இப்போது இந்தத் தேர்வு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) சார்பில் நடத்தப்படுகிறது.

 விண்ணப்பதாரர்கள் அதிர்ச்சி: இந்த தேசிய அளவிலான தகுதித் தேர்வுக்கான கட்டணம் முன்னர் ரூ. 500-ஆக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. இப்போது ரூ. 600-ஆக உள்ளது. மாநில அளவிலான தகுதித் தேர்வு மாநிலத்திலுள்ள ஏதாவது ஒரு பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படும். இதற்கு யுஜிசி அனுமதி பெற வேண்டும். அவ்வாறு 2016-ஆம் ஆண்டுக்கான மாநில அளவிலான (செட்) தகுதித் தேர்வு, கொடைக்கானல் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் சார்பில் நடத்தப்படுகிறது. பிப்ரவரி 21-ஆம் தேதி நடத்தப்பட உள்ள இந்தத் தேர்வுக்கு பிப்ரவரி 10-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

 இதற்கான தேர்வுக் கட்டணம் ரூ. 1,500 என்ற அளவில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ. 1,250-ம், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ. 500-ம் என்ற அளவில் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த கட்டண நிர்ணயம் விண்ணப்பதாரர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

 இதுகுறித்து இந்தத் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ள தனியார் கல்லூரி பேராசிரியர் முருகானந்தம் கூறியதாவது:
 நியாயமில்லை: "நெட்', "செட்' இரண்டு தேர்வுகளையும் நடத்துவதற்கான அனுமதியை யுஜிசி-தான் வழங்குகிறது. இந்த நிலையில் "நெட்' தேர்வுக்கு கட்டணமாக ரூ. 600 வசூலிக்கப்படும் நிலையில், "செட்' தேர்வு கட்டணம் ரூ. 1,500-ஆக நிர்ணயிக்கப்பட்டிருப்பது எந்த விதத்திலும் நியாயமில்லை என்றார். தமிழகத்தில் கடைசியாக கடந்த 2012-இல் கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் சார்பில் "செட்' தேர்வு நடத்தப்பட்டபோது தேர்வுக் கட்டணமாக ரூ. 1,000 வசூலிக்கப்பட்டது. இப்போது மேலும் ரூ.500 உயர்த்தப்பட்டிருப்பது ஏழை மாணவர்களை கடுமையாக பாதிக்கும். எனவே, கட்டணத்தைக் குறைக்க பல்கலைக்கழகம் முன்வர வேண்டும் என்றார்.

 இதுகுறித்து தேர்வை நடத்தும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழக பதிவாளர் என். கலா கூறியது:
 விசாரிக்கப்படும்..: "செட்' தேர்வுக்கு முந்தைய ஆண்டுகளில் வசூலிக்கப்பட்ட கட்டணங்களின் அடிப்படையிலேயே, இப்போதையக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. எனவே, இதைக் குறைப்பதற்கு வாய்ப்பில்லை என்றார்.
 இதுகுறித்து யுஜிசி துணைத் தலைவர் ஹெச். தேவராஜ் கூறியது:
 "செட்' தேர்வை நடத்த இந்த ஆண்டு அனுமதித்துள்ளோம். இந்தத் தேர்வை நடத்த அன்னைத் தெரசா மகளிர் பல்கலைக்கழகம் எடுத்துள்ள முடிவு இன்னும் யுஜிசி-க்கு வந்து சேரவில்லை. இதனால் தேர்வுக் கட்டணம் குறித்த தகவல் தெரியவில்லை. எனவே, விவரங்கள் யுஜிசி-க்கு கிடைத்ததும் கட்டணம் குறித்து விசாரிக்கப்படும் என்றார்.

Comments

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்