புதுடில்லி: 'தமிழக அரசின், பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது என்பதால், அவை, தங்களுக்கு ஏற்ற கட்டணத்தை நிர்ணயித்துக் கொள்ளலாம்' என, சுப்ரீம் கோர்ட் தெரிவித்துள்ளது.
தமிழக அரசின் பள்ளி கல்விக் கட்டண ஒழுங்குமுறை சட்டம், சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கும் பொருந்தும்' என, சென்னை ஐகோர்ட், தீர்ப்பு வழங்கியிருந்தது.இதை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் சார்பில், சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள், சுப்ரீம் கோர்ட் நீதிபதிகள், ஜே.எஸ்.கேஹர், எஸ்.ஏ.பாப்டே ஆகியோர் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தன.
அப்போது, 'தமிழக அரசின் கல்விக் கட்டண குழு நிர்ணயிக்கும் தொகை, சி.பி.எஸ்.இ., பள்ளிகளுக்கு பொருந்தாது' என கூறி, சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு, நீதிபதிகள் இடைக்கால தடை விதித்தனர்.
தீர்ப்பு விவரம்:
சி.பி.எஸ்.இ., பள்ளி நிர்வாகம் வசூலிக்கும் கட்டணத்திற்கேற்ப, பள்ளியில் வசதி செய்யப்பட்டுள்ளதா என்பதை பார்க்க மட்டுமே, தமிழக அரசின் பள்ளி கல்வி கட்டண நிர்ணயக் குழுவிற்கு அதிகாரம் உள்ளது. சி.பி.எஸ்.இ., பள்ளிகளின் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க அதிகாரம் இல்லை. அப்படியே, சி.பி.எஸ்.இ., பள்ளிகள் வசூலிக்கும் தொகைக்கேற்ப, பள்ளிகளில் வசதிகள் இல்லையென்றால், அப்பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்ய பரிந்துரைக்கலாமே தவிர, வேறு நடவடிக்கை எடுக்க முடியாது. ஆகவே, கீழ்கோர்ட் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Comments
Post a Comment