தமிழக அரசு கலை கல்லுாரிகளின் பேராசிரியர்களுக்கான விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு, வரும், 26, 27, 28ம் தேதிகளில் நடக்க உள்ளது.
தமிழகத்தில், 83 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் உள்ளன; 9,000 பேராசிரியர்கள், உதவி பேராசிரியர்கள் மற்றும் துறைத்தலைவர்கள் பணியாற்றுகின்றனர். இவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும், ஜூலை
முதல் ஆகஸ்டுக்குள், விருப்ப இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். ஆனால், இந்த ஆண்டு இடமாறுதல் கலந்தாய்வு நடத்தாமல், மறைமுகமாக பல பேராசிரியர்களுக்கு இடமாறுதல் வழங்கப்பட்டது.இதையடுத்து, இடமாறுதல் கலந்தாய்வை தாமதமின்றி நடத்த, உயர்கல்வித் துறைக்கும், கல்லுாரி கல்வி இயக்ககத்துக்கும், அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றம் மனு அளித்தது.
அரசு கல்லுாரி ஆசிரியர் மன்றத்தின் பொதுச் செயலர் சிவராமன் தலைமையிலான நிர்வாகிகளை, கல்லுாரி கல்வி இயக்குனர் சேகர் நேற்று அழைத்து பேசினார். 'வரும், 26ம் தேதி முதல் 28 வரை இடமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். 31 அரசு கலைக்கல்லுாரிகளின் முதல்வர் பணியிடங்கள், இரண்டு வாரத்தில் நிரப்பப்படும்; 2007க்கு பின் பணியில் சேர்ந்த பேராசிரியர்களுக்கு, 7,000 ரூபாய் தர ஊதியம் வழங்க அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது' என, கல்லுாரி கல்வி இயக்குனர் அறிவித்தார் என, கல்லுாரி ஆசிரியர் மன்றம் தெரிவித்துள்ளது.