Skip to main content

உங்கள் வாழ்க்கையை நரகமாக்கும் கிரெடிட் கார்டு பற்றிய சில ரகசியங்கள்..!

இப்பொழுதுதான் உங்கள் இலட்சிய அல்லது நீண்ட நாள் கனவுப் பணியில் சேர்ந்திருக்கிறீர்களா? அவசியச் செலவுகளுக்கும் மேல் ஓரளவுக்குக் கையில் காசு புரளும் இந்தச் சமயத்தில் வங்கிகளிடமிருந்து கிரெடிட் கார்டு வாங்கச் சொல்லி கவர்ச்சிகரமான அழைப்புகள் வரத் தொடங்கியிருக்குமே?! எச்சரிக்கை, நீங்களும் ஒரு பலிகடாவாக மாறிவிடாதீர்கள். வங்கிகள் தங்கள் வாடிக்கையாளர் எண்ணிக்கையை அதிகரிக்க, இந்த ஆஃபர் அந்த ஆஃபர் என்று என்ன வேண்டுமானாலும் சொல்வார்கள். ஆனால் உங்களுக்குக் கிரெடிட் கார்டு அவசியமா அனாவசியமா என்பதை நீங்கள் தான் முடிவு செய்ய வேண்டும். மேலும் ஒரு கிரெடிட் கார்டைப் பற்றிய புரிதல் இல்லாமல் அதைக் கவனக் குறைவாகக் கையாளும்போது என்ன மாதிரியான மோசமான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்பது குறித்த ஒரு பார்வை இதோ, உங்களுக்காக..

'கடன்பட்டார் நெஞ்சம் போல்' கலங்கிய வாழ்க்கை கிரெடிட் கார்டுகள் உங்கள் ஆவலைத் தூண்டிக் கொண்டே இருப்பதால், எதை வேண்டுமானாலும் வாங்கும்படி உங்கள் கை பரபரத்துக் கொண்டே இருக்கும். விளைவு, உங்கள் மாதாந்திர பட்ஜெட்டில் ஒரு துண்டு அல்லது பெட்ஷீட்டே விழுந்துவிடும். 'இந்தக் காலத்தில் யார் சார் கிரெடிட் கார்டு கடன் இல்லாம இருக்காங்க?' என்று கேட்பவரா நீங்கள்? ஒரு மாதக் கடன் தவணையைச் செலுத்தாமல் விட்டுப் பாருங்கள், அது உங்களை எங்குக் கொண்டு போய் நிறுத்துகிறது என்று.

அதீத வட்டி விகிதம் கிரெடிட் கார்டு மூலம் பெறப்படும் கடன் தொகை மீதான மிதமிஞ்சிய வட்டி விகிதம் தான் அதில் இருக்கும் மிகப் பெரிய படுகுழி. ஆம்! சுண்டைக்காய் மதிப்புள்ள பொருளுக்கு உங்களைச் சுரைக்காய் விலை செலுத்த வைப்பது இந்த வட்டி விகிதம் தான். 'என்ன சார் சொல்றீங்க? நாங்க கிரெடிட் கார்டில் எது வாங்கினாலும் டிஸ்கௌண்ட் ஆஃபர்ல தானே வாங்குறோம்?' என்கிறீர்களா? ஒரு துண்டு காகிதத்தில் அந்தப் பொருளுக்கு நீங்கள் செலுத்தும் மொத்தப் பணமதிப்பையும் அது விற்கப்படும் சந்தை ரொக்க விலையையும் கணக்கிட்டுப் பாருங்கள், உண்மை புரியும். நீங்கள் டிஸ்கௌண்ட் மூலம் சேமிப்பதாக நினைத்த தொகையை விட அதிகமாக வட்டி மூலம் இழந்திருப்பீர்கள்.

அதிகபட்ச அபராதம் 'கடன் தவணைக்கு இன்னும் நாள் இருக்கே, அப்புறம் பார்த்துக்கலாம்' என்று தள்ளிப்போடும் ஆசாமியா நீங்கள்? சபாஷ், உங்கள் பணத்தை அபராதமாகப் பறிகொடுக்க நீங்கள் தயாராகிவிட்டீர்கள். அபராதம் எப்படிக் கணக்கிடப்படுகிறது என்றாவது தெரியுமா? நீங்கள் கிரெடிட் கார்டில் வாங்கியிருக்கும் மொத்தக் கடன் தொகையின் மேல் ஒரு குறிப்பிட்ட சதவீதம், மாதாந்திரத் தவணையின் நிலுவைத் தொகை, அதன் மீதான வட்டி எல்லாம் சேர்த்துக் கணக்கிடப்படும். அப்படி அபராதம் விதிக்கப்பட்டால் உங்கள் கடன் செலுத்தும் காலம் மற்றும் கடன் தொகையும் அதிகரிப்பதைத் தவிர்க்க முடியாது. 

விலையுயர்ந்த ஏடிஎம் பணம் ஒரு அவசரத்திற்கு அல்லது கை அரிக்கிறது என்று நீங்கள் உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி ஏடிஎம்மில் இருந்து பணம் எடுக்கிறீர்களா? முடிந்தது கதை! அந்தத் தொகைக்கு வங்கி விதிக்கும் தாறுமாறான வட்டி விகிதம் பற்றித் தெரியுமா? அதை நீங்கள் உரிய நாளுக்குள் திருப்பிச் செலுத்தத் தவறினால், அதற்கு மேலே சொன்ன அபராதத் தொகைகளும் விதிக்கப்படும் என்பதை மறந்து விடாதீர்கள்.

கிரெடிட் கார்டு திருட்டுக்கள் இந்த நவ நாகரிக உலகில் திருட்டுக்களும், வழிப்பறிகளும் கூட நவீனமடைந்து விட்டன. தகவல் தொழில்நுட்ப உலகில் பண மற்றும் வியாபாரப் பரிவர்த்தனைகள் பல வடிவங்களில் உலகம் முழுவதும் செய்யப்படுவது ஒரு 'மாற்றம், முன்னேற்றம்' என்றாலும் அதன் 'வீக் பாயிண்டுகள்' எக்கச்சக்கம். ஹேக்கர்கள் என்று சொல்லப்படும் நெட்-திருடர்கள் அந்த வீக் பாயிண்டுகளைப் பயன்படுத்தி அப்பாவிகளைச் சுரண்டி விடுகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆயிரக்கணக்கான கிரெடிட் கார்டு பயன்படுத்துவோர், இவர்களுடைய வேட்டைக்குப் பலியாகி பணத்தையும் நிம்மதியையும் வாழ்க்கையையும் தொலைக்கிறார்கள்.

கடன் சரித்திரம் வாழும் காலத்தில் சரித்திரம் படைக்கிறீர்களோ இல்லையோ, நீங்கள் வாங்கும் கடன்கள் உங்களைப் பற்றி ஒரு சரித்திரம் படைத்துவிடும். உங்கள் வங்கிப் பரிவர்த்தனைகளில் இந்தச் சரித்திரம் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒரு வீட்டுக்கடன் அல்லது வாகனக் கடனுக்காக நீங்கள் ஒரு வங்கியை அணுகும்போது உங்கள் கடன் சரித்திரத்தைப் புரட்டிப் பார்க்காமல் உங்களுக்குக் கடன் தொகை வழங்கப்படாது. நீங்கள் எந்த வங்கியிலும், கிரெடிட் கார்டு அல்லது வேறு எந்தக் கடனும் வாங்கி, செலுத்தாமல் விட்டிருந்தாலும் அதைக் கண்டுபிடிப்பதற்கு என்றே வங்கிகளின் கூட்டமைப்பு உருவாக்கியுள்ள ஸ்தாபனம் தான் சிபில். இந்தச் சிபில் உங்கள் கடன் சரித்திரத்திற்கு ஏற்ப உங்களுக்கு மதிப்பெண்கள் கொடுக்கும்.

நிதித் திட்டமிடல்களில் நிகழும் பாதிப்புகள் நாம் எல்லோருமே ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு என்று சில குறிப்பிட்ட நிதித் திட்டங்களை இலக்காக வைத்திருப்போம். ஆனால் ஒரு கிரெடிட் கார்டை முன்யோசனையின்றிப் பயன்படுத்துவது, அத்தகைய திட்டங்களைக் குலைத்துப் போட்டுவிடுவதோடு உங்கள் இலக்குகளை அடைவதைத் தடுத்து உங்களை நஷ்டத்தில் ஆழ்த்தி உங்கள் சேமிப்பையும் அபகரித்துவிடுகிறது.

முடிவுரை.. அதனால் ஏற்கனவே கிரெடிட் கார்டு வைத்திருப்பவர்கள் மற்றும் வாங்க நினைப்பவர்கள் ஒரு முறைக்கு இரண்டு முறை 'இது தேவையா? இது தேவைதானா?' என்று உங்களையே கேட்டுக் கொண்டு முடிவெடுங்கள்!




Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.