அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.சி.வீரமணி கூறினார்.
அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை குறைந்து வருவதாகவும், தனியார் பள்ளிகளையே அனைவரும் நாடிச் செல்வதாகவும் கூறி, திமுக உறுப்பினர் எ.வ.வேலு, மார்க்சிஸ்ட் உறுப்பினர் கே.பாலகிருஷ்ணன்,
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்கள் ஆறுமுகம், மனித நேய மக்கள் கட்சி உறுப்பினர் அஸ்லாம் பாஷா ஆகியோர் சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தனர்.
இதற்கு அமைச்சர் கே.சி.வீரமணி அளித்த பதில்: தமிழகத்தில் உள்ள அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கைக்கேற்ப போதுமான ஆசிரியர்கள் பணியமர்த்தப்பட்டுள்ளனர். பள்ளிகளிலும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், விலையில்லா மடிக்கணினி உள்பட 14 வகையான நலத் திட்டங்கள் மாணவர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக இடைநிற்றல் குறைந்து, சேர்க்கை விகிதம் ஒவ்வோர் ஆண்டும் அதிகரித்து வருகிறது.
2011-ஆம் ஆண்டில் உயர்நிலைப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 47.9 லட்சமாக இருந்தது, 2015-இல் 48.52 லட்சமாக உயர்ந்துள்ளது என்றார்.