Skip to main content

பி.எட். விண்ணப்பித்தவர்களில் 1,136 பேர் பி.இ. பட்டதாரிகள்

ஆசிரியர் கல்வியியல் இளநிலை பட்டப் படிப்பான பி.எட். படிப்பில் 2015-16 கல்வியாண்டில் சேருவதற்கு 1,136 பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர்.பி.எட். படிப்பில் பி.இ. பட்டதாரிகள் சேர்க்கப்படுவது இந்தியாவில் இதுவே முதன் முறையாகும். தேசிய ஆசிரியர் கல்வியியல் கவுன்சிலின் (என்.சி.டி.இ.) புதிய 2014 வழிகாட்டுதலின்படி
, பி.இ. முடித்தவர்கள் முதன் முறையாக பி.எட். படிப்புகளில் அனுமதிக்கப்படுகின்றனர்.


         என்.சி.டி.இ, வழிகாட்டுதலின் அடிப்படையில் பொறியியல் படிப்பில் கணிதம், இயற்பியல், வேதியியல் போன்ற பாடங்களைத் துணைப் பாடமாக எடுத்துப் படித்தவர்களை மட்டும் பி.எட். படிப்பில் சேர்த்துக் கொள்ளலாம் என தமிழக அரசும் அனுமதி அளித்துள்ளது.


          இதைத் தொடர்ந்து, 2015-16 பி.எட். மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வு நடத்தும் சென்னை விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனம் பி.இ. முடித்தவர்களிடமிருந்தும் விண்ணப்பங்களைப் பெற்றது.
அதன் மூலம், பி.எட். சேர்க்கைக்கு மொத்தம் விண்ணப்பித்த 7,425 பேரில், 1,136 பேர் பொறியியல் பட்டதாரிகள் என்பது தெரியவந்துள்ளது.இந்த நிலையில், இந்தப் புதிய நடைமுறைக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். பி.எட். முடிக்கும் பொறியியல் பட்டதாரிகள் எந்தவிதமானப் பதவிக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதுகுறித்து கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு கூறியது:
பள்ளி ஆசிரியர் ஆக வேண்டும் என்ற எண்ணம் சிறிதளவும் இல்லாமல் பொறியியல் படிப்பில் சேர்ந்து படித்தவர்களை பி.எட். படிக்க அனுமதித்து பள்ளி ஆசிரியர்களாக நியமிப்பது என்பது ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று.
எந்தவிதக் கட்டுப்பாடுமின்றி சேர்க்கையை அனுமதித்து, இப்போது லட்சக்கணக்கான பி.இ. பட்டதாரிகள் வேலையில்லாமல் திண்டாடுகின்றனர் என்பதற்காகவே இவ்வாறு திசை திருப்பும் நடவடிக்கையை மத்திய, மாநில அரசுகள் எடுத்துள்ளன.

இந்த நடைமுறை அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க உதவாது. ஆசிரியர் ஆக வேண்டும் என்ற லட்சியத்தோடு இளநிலை, முதுநிலை கலை-அறிவியல் பட்டப் படிப்புகளையும் பி.எட்., எம்.எட். படிப்புகளையும் முடித்து காத்திருப்பவர்களின் நிலையையும் கேள்விக்குறியாக்கிவிடும்.
 ஃபின்லாந்து போன்ற நாடுகளில் அதிக மதிப்பெண்ணுடன் பட்டப் படிப்புகளை முடித்து, ஆசிரியர் பணி மீதான தனது ஆர்வத்தை உரிய முறையில் நிரூபிப்பவர்களுக்கு மட்டுமே ஆசிரியர் கல்வியில் சேருவதற்கும், ஆசிரியர் பணியில் சேருவதற்கும் அனுமதி வழங்கப்படுகிறது.
ஆனால், இங்கு கல்வியாளர்களிடமோ, நிபுணர்களிடமோ கலந்தாலோசிக்காமல் இப்படிப்பட்ட முடிவு எடுக்கப்பட்டிருப்பது பள்ளிகளில் ஆரோக்கியமான சூழலை உருவாக்காது என்றார்.

 இதுகுறித்து, தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க பொதுச் செயலாளர் சாமி.சத்தியமூர்த்தி கூறியது:
 ஏற்கெனவே பி.எஸ்சி. கணினி அறிவியல், எம்.எஸ்சி. கணினி அறிவியல் பட்டப் படிப்புடன் பி.எட். முடித்தவர்கள் பள்ளிகளில் வேலை கிடைக்காமல் போராட்டங்களை நடத்திவருகின்றனர். இவர்களுடைய எதிர்காலமே கேள்விக்குறியாகியுள்ளது.
 இந்த நிலையில், பி.இ. முடித்தவர்களை பி.எட். படிக்க அனுமதிப்பது ஆரோக்கியமான சூழலை உருவாக்காது. இவர்களுடைய எதிர்காலம் என்ன என்பதையும், இவ்வாறு பி.இ. முடித்து பி.எட். முடிப்பவர்கள் எந்தெந்தப் பணிக்குத் தகுதியானவர்களாகக் கருதப்படுவர் என்பதை அரசு முதலில் தெளிவுபடுத்த வேண்டும் என்றார்.
 இதே கருத்தை பொறியியல் கல்லூரி பேராசிரியர்களும் தெரிவித்தனர். பி.எட். முடிக்கும் பி.இ. பட்டதாரிகளைப் பொறியியல் கல்லூரிகள் அல்லது பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஆசிரியர்கள் பயிற்றுநர்கள் அல்லது வேறு பணிகளில் அமர்த்த வேண்டுமே தவிர, அவர்களை பள்ளி ஆசிரியர் பணியில் அமர்த்துவது கல்வித் தரத்தைப் பாதிக்கும் என பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள் தெரிவித்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்