கடந்த சில ஆண்டுகளாக, கல்வி வளர்ச்சி நாள் விழாக்களில் வழங்கி வந்த, சிறந்தபள்ளிக்கான விருது, நடப்பாண்டு இல்லாததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.தமிழகத்தில், காமராஜர் பிறந்த நாளான ஜூலை, 15ம் நாள், கல்வி வளர்ச்சி
நாளாக கொண்டாடப்படுகிறது. இதை அனைத்து அரசு பள்ளிகளிலும் விமரிசையாக கொண்டாட,
கடந்த சில ஆண்டுகளாக, தமிழக அரசு அறிவுறுத்தி வருகிறது.ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும், ஒரு துவக்கப்பள்ளி, ஒரு நடுநிலைப்பள்ளி, ஒருஉயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆகியவை தேர்வு செய்யப்பட்டு, சிறந்த பள்ளிக்கான விருது வழங்கும் நிகழ்ச்சியும், கல்வி வளர்ச்சி நாளில் நடந்து வந்தது.பள்ளியில் மாணவர் சேர்க்கை, நூலகம், லேப் வசதி, மைதானம் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களில், 20 விதமான கேள்விகள், முன்கூட்டியே பள்ளிகளிடம் சேகரிக்கப்பட்டு, அதன் அடிப்படையில், பள்ளி தேர்வு செய்யப்பட்டு, கல்வி வளர்ச்சி நாளன்று அறிவிக்கப்பட்டு வந்தது.
சிறந்த பள்ளியாக தேர்வு செய்யப்படும் துவக்கப்பள்ளிக்கு, 25 ஆயிரம் ரூபாய், நடுநிலைப்பள்ளிக்கு, 50 ஆயிரம் ரூபாய், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிக்கு, 75 ஆயிரம் ரூபாய் பரிசாக வழங்கப்படும்.ஆனால், நடப்பு கல்வியாண்டில், விருது வழங்க தகவல் சேகரிக்கும் பணி கூட, நடைபெற வில்லை. அதே போல், கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாட, அனைவருக்கும் கல்வி திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. அதையும் நிறுத்தி, பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் நிதியிலிருந்து செலவு செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.இதனால், பல பள்ளிகளில், கல்வி வளர்ச்சி நாள் விழா களையிழந்து வருகிறது. விருது வழங்காததால், ஆசிரியர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.