அரசு நடத்தும் வேலைவாய்ப்பகங்களில் பெரியளவில் மாற்றம் ஏற்படுத்தும், தேசிய தொழில் சேவை திட்டத்தை, பிரதமர் நரேந்திர மோடி நேற்று துவக்கி வைத்தார். இத்திட்டத்தின் கீழ், 'தேசிய தொழில் சேவை இணையதளம்' மத்திய தொழிலாளர் துறை அமைச்சகத்தால், 100 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. வேலை
தேடுவோருக்கும், வேலை அளிப்போருக்கும், ஒரே தீர்வாக, இந்த இணையதளம் செயல்படும்.நாடு முழுவதும் உள்ள, 982 அரசு வேலைவாய்ப்பகங்களில் வேலை பெற, 4.4 கோடி பேர் ஏற்கனவே பதிவு செய்து உள்ளனர். முதற்கட்டமாக, இவர்களில், இரண்டு கோடி பேரின் தகவல்களை, அரசு இணையதளத்தில் இடம்பெறச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
ஒன்பது லட்சம் தொழில் நிறுவனங்கள் தங்களுக்கு தேவையான ஊழியர்களை, அரசு இணையதளம் மூலம் தேர்வு செய்து கொள்ளலாம்.அரசின் வேலைவாய்ப்பக இணையதளத்தில் பதிவு செய்வதில் பிரச்னைகள், சந்தேகங்கள் இருந்தால், தெளிவு பெற, கட்டணமில்லா அழைப்பு எண் 1800-425-1514 தரப்பட்டுள்ளது. செவ்வாய் முதல், ஞாயிறு வரை, காலை 8:00 மணி முதல் இரவு 8:00 மணி வரை, இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.