பதவி உயர்வு குளறுபடியை நீக்க அரசு அமைத்த குழு, நான்கு ஆண்டுகளாகியும் செயல்படாமல் முடங்கி உள்ளதால், சத்துணவு அமைப்பாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
'பள்ளிகளில் பணியாற்றும் சத்துணவு அமைப்பாளர்களுக்கு, சமூக நலத்துறையில், எழுத்தர், அலுவலக உதவியாளராக பத
வி உயர்வு வழங்கப்படும்' என, தமிழக அரசு அறிவித்தது. 2010ல், இதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டது. சத்துணவு அமைப்பாளர்களில், பெண்களுக்கு, இரண்டாம் நிலை மேற்பார்வையாளர்; ஆண்களுக்கு அலுவலக உதவியாளராக பதவி உயர்வு தரப்படும் என்றும் கூறப்பட்டது.
இதில், ஆண்களுக்கும், பெண்களுக்கும் பதவி உயர்வில் பாகுபாடு காட்டப்பட்டுள்ளதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, தமிழ்நாடு ஒருங்கிணைந்த சத்துணவு பணியாளர் நல சங்க மாநில தலைவர் வரதராஜன், சென்னை உயர்நீதிமன்றத்தில் தடை பெற்றார். இதையடுத்து, குளறுபடிக்கு தீர்வு காண, 2011 பிப்ரவரி, 28ம் தேதி, நால்வர் குழு அமைக்கப்பட்டது. நான்கு ஆண்டுகள் ஆகியும், இந்த குழு தீர்வுக்கான எந்த முயற்சியும் எடுக்காமல் முடக்கப்பட்டுள்ளது. இதனால், பதவி உயர்வும் அறிவிப்பாகவே உள்ளது. இதுகுறித்து, சத்துணவு அமைப்பாளர்கள் கூறுகையில், 'நால்வர் குழு எங்கே இருக்கிறது என, தேடும் நிலை உள்ளது. குழுவுக்கு புத்துயிர் அளித்து, சிக்கலுக்கு அரசு விரைந்து தீர்வு காண வேண்டும்' என்றனர்.