'ஜூலை 1 முதல் ஹெல்மெட் கட்டாயம் என்ற நிலையில், அதை அணியாமல் வந்தால் ஓட்டுனர் உரிமம், வாகன பதிவு சான்றுகளின் நகல் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது' என போலீசார் எச்சரித்துள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:டூவீலர் ஓட்டுபவரும், பின்னால் அமர்ந்து செல்பவரும் கட்டாயம் ஹெல்மெட் அணியவேண்டும். மீ
றினால் மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 206ன்படி, அசல் ஓட்டுனர் உரிமம் வாகன பதிவு சான்று மற்றும் டூவீலர் தொடர்புடைய அனைத்து ஆவணங்களும் உரிய ஒப்புகைக்கு பின் பறிமுதல் செய்யப்பட்டு, நீதிமன்றத்திற்கு அனுப்பப்படும்; ஆவணங்களின் நகல்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
அசல் ஆவணங்கள் இல்லாதபட்சத்தில் மோட்டார் வாகன சட்டம் 1998 பிரிவு 207ன்படி டூவீலர் தற்காலிகமாக பறிமுதல் செய்யப்படும். அதற்கான ஒப்புகை சீட்டு உரிமையாளருக்கு வழங்கப்படும்.பின், உரிய அசல் ஆவணங்களை, போலீசார் வழங்கிய ஒப்புகை சீட்டுடன் போக்குவரத்து போலீஸ் ஸ்டேஷனில் காலை 10 முதல் மாலை 5 மணிக்குள் உரிமையாளர் சமர்ப்பிக்க வேண்டும்.
பின், வாகனம் விடுவிக்கப்பட்டு ஒப்புகை சீட்டு வழங்கப்படும். அசல் ஆவணங்கள் மேல்நடவடிக்கைக்காக நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்கப்படும்.ஐ.எஸ்.ஐ., தரமுடைய ஹெல்மெட் மற்றும் அதை வாங்கியதற்கான ரசீதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். பின், மோட்டார் வாகன சட்டப்படி அசல் ஆவணங்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு தெரிவித்தனர்.
ஜூலை 1 முதல் கோர்ட்டிற்கு அலைய போகிறீர்களா அல்லது ஹெல்மெட் வாங்கி உங்கள் மற்றும் குடும்பத்தினரின் பாதுகாப்பை உறுதி செய்யப் போகிறீர்களா?