தேனியைச் சேர்ந்தவர் வி.தமிழ்மொழி, மாவட்ட கருவூலக நிரந்தர இளநிலை உதவியாளர். இவர் 2010ல் நடந்த கணக்காளர் பணிக்கான தேர்வில் உயர் அதிகாரிகள் தயாரித்த வினா, விடைத்தாளை திருடி முழு மதிப்பெண் பெற்றது தெரிந்தது. இதனால் தமிழ்மொழிக்கு ஒரு ஆண்டு ஊதிய உயர்வை நிறுத்தி வைக்க நிதித்துறைச் செயலர்
29.11.2012ல் உத்தரவிட்டார். டிஎன்பிஎஸ்சி விதிகளை மீறியதற்காக, 24.8.2012 முதல் 5 ஆண்டுக்கு அரசு பணியாளர் தேர்வுகளில் பங்கேற்க தமிழ்மொழிக்கு தடை விதித்து 2013ல் தேர்வாணையம் உத்தரவிட்டது. இந்த இரு உத்தரவுகளையும் ரத்து செய்யக் கோரி தமிழ்மொழி, ஐகோர்ட் மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு: தேர்வாணையம் 2012 முதல் 5 ஆண்டுகளுக்கு பதவி உயர்வு தேர்வுகளில் பங்கேற்க மனுதாரருக்கு தடை விதித்துள்ளது. மனுதாரர் செய்த தவறை சாதாரணமாக கருத முடியாது. மனுதாரருக்கு பதவி உயர்வு வழங்கினாலும் முக்கிய பணிகளில் நியமிக்கக் கூடாது. அப்படி செய்தால் அரசு ஆவணங்களை திருத்துவதற்கு வாய்ப்புள்ளது. மனுதாரர் தண்டனையில் இருந்து தப்பிய போதிலும், அவருக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.