Skip to main content

சட்டப் படிப்பு வயது வரம்பு தளர்வுக்கு இடைக்காலத் தடை


சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை வியாழக்கிழமை
இடைக்காலத் தடை விதித்தது.
 மதுரை வழக்குரைஞர் பி.அசோக் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.மணிக்குமார், வி.எம்.வேலுமணி ஆகியோர் அடங்கிய அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது. 
மனுவின் விவரம்: 
 சட்டப் படிப்பின் தரத்தை உயர்த்த, தேசிய சட்ட ஆணையம் மத்திய அரசுக்கு 2002-இல் அறிக்கை அளித்தது. அதைத் தொடர்ந்து 2008-இல் சட்டப் படிப்புக்கான விதிகளை இந்திய பார் கவுன்சில் வரையறை செய்தது. அதன்படி, இந்திய அளவில் முதன்முறையாக சட்டப் படிப்புக்கு வயது வரம்பு நிர்ணயிக்கப்பட்டது. இந்த வயது வரம்பை எதிர்த்து உயர் நீதிமன்றங்கள், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றம் அமைத்த 3 நபர்கள் குழுவும் சட்டப் படிப்புக்கான வயது வரம்பு விதியைக் கண்டிப்பாக அமல்படுத்துமாறு பரிந்துரை செய்தது. 
 இந்நிலையில், சட்டப் படிப்புக்கு வயது வரம்பு தொடர்பான விதியை மறுபரிசீலனை செய்ய வழக்குரைஞர் எஸ்.பிரபாகரன் தலைமையில் ஒரு நபர் குழுவை பார் கவுன்சில் அமைத்தது. இக் குழு சட்டப் படிப்புக்கான வயது வரம்பை அறவே நீக்கிவிடுமாறு 2013-இல் பரிந்துரை செய்தது. இதையடுத்து சட்டக் கல்விக்கான வயது வரம்பை இந்திய பார் கவுன்சில் 2013 செப்டம்பர் 28-இல் தளர்த்தியது. இந்நிலையில், தமிழகத்தில் 2015-16 ஆம் ஆண்டுக்கான சட்டப் படிப்பு மாணவர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பு ஜூன் 4-ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதில் 3 ஆண்டு சட்டப் படிப்பில் சேர வயது வரம்பு கிடையாது. 5 ஆண்டு சட்டப் படிப்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு வயது வரம்பு கிடையாது. மற்றவர்களுக்கு 21 வயது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு உச்ச நீதிமன்றத்தில் 3 நபர் குழுத் தாக்கல் செய்த பரிந்துரைக்கு எதிரானதாகும். எனவே டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழக அறிவிப்புக்கு இடைக்காலத் தடை விதித்து ரத்து செய்ய வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு உள்ளது.
 இந்த மனு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மாணவர் சேர்க்கையில் வயது வரம்பைத் தளர்த்தி டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்புக்கு நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர். 
 மத்திய சட்டத் துறைச் செயலர், இந்திய பார் கவுன்சில் செயலர், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர், பல்கலைக்கழக மானியக் குழு செயலர், டாக்டர் அம்பேக்தர் சட்டப் பல்கலைக்கழகப் பதிவாளர் உள்ளிட்டோர் 4 வாரங்களில் பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்