Skip to main content

சத்துணவு ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகள் தமிழக அரசு அறிக்கை


பல்வேறு சலுகைகளைப்பெற்ற பின்னரும் சத்துணவு ஊழியர்கள் போராட்டம் செய்வது தேவையற்றது என்றும் அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகை குறித்தும் தமிழக அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது.

பல்வேறு படிகள்

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்
கூறப்பட்டு இருப்பதாவது:–

எம்.ஜி.ஆர் சத்துணவு திட்டத்தின் மூலம் 54.63 லட்சம் பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதற்காக 1,28,130 சத்துணவு பணியாளர்கள் பணியமர்த்தப்பட்டு தமிழகமெங்கும் 42 ஆயிரத்து 619 சத்துணவு மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இத்திட்ட செயல்பாட்டிற்காக 2014–15–ம் ஆண்டில் ரூ.1,412.88 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.


மதிப்பூதிய அடிப்படையில் பணியாற்றி வந்த சத்துணவு பணியாளர்களை முதன்முதலாக 1996–ம் ஆண்டில் பகுதி நேர நிரந்தர பணியாளர்களாக அறிவித்து, ரூ.200 – 5– 250–10–400 என்ற வரையறுக்கப்படாத ஊதிய விகிதத்தின் கீழ் கொண்டுவரப்பட்டு, அவர்களுக்கு ஊதியம், தர ஊதியம், அகவிலைப்படி, வீட்டுவாடகைப்படி, நகர ஈட்டுப்படி மற்றும் மருத்துவப்படி ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது.

சம்பளம் எவ்வளவு?

தற்பொழுது அமைப்பாளருக்கு மாதமொன்றுக்கு குறைந்த பட்சமாக ரூ.6,616 தொகையும், அதிகபட்சமாக ரூ.9,204–ம், சமையலருக்கு குறைந்தபட்சமாக மாதம் ரூ.4,073–ம், அதிகபட்சமாக ரூ.4,446–ம், மற்றும் சமையல் உதவியாளருக்கு குறையதபட்சமாக ரூ.2,893, அதிகபட்சமாக ரூ.3,307–ம் வழங்கப்பட்டு வருகிறது.
இதைத் தவிர ஓய்வுபெற்ற அனைத்து சத்துணவு பணியாளர்களுக்கும் மாதாந்திர சிறப்பு ஓய்வூதியம் ஆயிரம் ரூபாய் கடந்த 1.4.13 முதல் உயர்த்தி வழங்கப்பட்டு வருகிறது. மேலும், ஓய்வு நாளின்போது பணிக்கொடையாக அமைப்பாளருக்கு ரூ.50 ஆயிரமும், சமையலர் மற்றும் சமையல் உதவியாளருக்கு ரூ.20 ஆயிரமும் வழங்கப்பட்டு வருகிறது.

சலுகைகள் எத்தனை?

இதுமட்டுமின்றி இப்பணியாளர்களுக்கு சிறப்பு சேமநல நிதி திட்டத்தின் மூலம் ரூ.10 ஆயிரம் அரசின் பங்காக வழங்கப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாது பண்டிகை முன்பணமாக ஐந்தாயிரம் ரூபாய், 12 நாட்கள் தற்செயல் விடுப்பு, பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு விடுப்பு, கருணைஅடிப்படையிலான பணி நியமனங்கள், தகுதி பெற்ற பணியாளர்களுக்கு சிறப்பு தேர்வின் மூலம் ஆசிரியர் பணி நியமனம் போன்ற சலுகைகளும் வழங்கப்பட்டு வருகிறது.
இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும், இவ்வாரான ஊதியம் மற்றும் சலுகைகள் வழங்கப்படாத நிலையில், சில சத்துணவு ஊழியர் சங்கங்கள் மேலும் பல கோரிக்கைகளை முன்வைத்து, 15.4.15 முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடபோவதாக அறிவித்தனர்.

ஏற்கப்பட்ட கோரிக்கைகள் எவை?

அமைச்சர்களால் 13.4.15 அன்று பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு 12 கோரிக்கைகள் அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன்படி, ஓ.பி.ஏ. சான்றிதழ் பெறுவதிலிருந்து விலக்களித்தல்; அனுமதிக்கப்பட்ட சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்களில் 25 சதவீதம் பணியிடங்கள் தகுதியுள்ள நபர்களை கொண்டு பூர்த்தி செய்த பின்னர், அனுபவக் காலத்தின் இறங்கு வரிசையின்படி இதர தகுதிபெற்ற சமையலர் மற்றும் சமையல் உதவியாளர் நிலையிலுள்ள பணியாளர்களுக்கு அமைப்பாளர் பதவி உயர்வு வழங்குவது;

2008–க்கு பிறகு உள்ள தகுதியுள்ள சத்துணவு அமைப்பாளர்களுக்கு 10 ஆண்டு, 20 ஆண்டு பணிமுடித்தவர்களுக்கு 3 சதவீதம் தேக்க நிலை ஊதிய உயர்வு; 10, 20 ஆண்டு பணிமுடித்த சமையலர் மற்றும் சமையல் உதவியாளர்களுக்கும் விதிகளுக்குட்பட்டு சிறப்பு நிகழ்வாக தேக்க நிலை ஊதியம் வழங்குவது;

180 நாட்கள் மகப்பேறு விடுப்பு

30 ஆண்டு பணிமுடித்த அமைப்பாளர்களுக்கு விதிகளுக்குட்பட்டு சிறப்பு நிகழ்வாக தேக்க நிலை ஊதியம் வழங்குவது; மாதாந்திர மலைப்படியும், குளிர்கால படியும் சிறப்பினமாக வழங்குவது; மருத்துவ காரணங்களால் விருப்ப ஓய்வு பெற அனுமதிப்பது; ரூ.72 ஆயிரம் வருமான வரம்பு அடிப்படையில் விருப்பம் தெரிவிக்கும் தகுதியுடைய பணியாளர்களுக்கு, “முதலமைச்சரின் விரிவான புதிய மருத்துவ காப்பீட்டுத் திட்டம்’’ செயல்படுத்துவது; பெண் சத்துணவு பணியாளர்கள் மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கு 180 நாட்கள் மகப்பேறு விடுப்பு;

20 கிராம் உருளைக்கிழங்கு வழங்குவதற்கான தொகை 40 பைசாவாக உயர்த்துவது; ஒரு சத்துணவு மையத்திற்கான மாதாந்திர சில்லரை செலவினம் ரூ.50 ஆக உயர்த்துவது; சத்துணவு அமைப்பாளர்களுக்கு கூடுதல் பொறுப்பு படியாக நாளொன்றுக்கு ரூ.10–ல் இருந்து ரூ.20 ஆக உயர்த்துவது ஆகிய கோரிக்கைகள் அரசால் ஏற்கப்பட்டுள்ளன.

தேவையற்ற போராட்டம்

இவை இருந்தாலும், பழனிச்சாமி என்பவர் தலைமையில் செயல்படும் ஊழியர் சங்கம் மட்டும் 16–ந் தேதியன்றும் (நேற்று) வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு, மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பாக அரசிற்கு எதிராக கோஷமிட்டனர். ஆனாலும், அரசால் எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாகவும், மாவட்ட நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் பல மாவட்டங்களில் 95 சதவீதத்துக்கும் அதிகமான பணியாளர்கள் பணிக்கு வருகை தந்துள்ளனர்.

அனைத்து சத்துணவு மையங்களும் வழக்கம்போல் செயல்பட்டு, பள்ளிகளில் தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையிலும் சுமார் 40 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு தங்குதடையின்றி சத்துணவு வழங்கப்பட்டது. அரசே முன்வந்து பேச்சுவார்தை மூலம் வழங்கிய பல்வேறு சலுகைகள் பெற்ற பின்னரும் அந்த சங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட வேலைநிறுத்த போராட்டம் தேவையற்றது என்பது தெளிவாகியுள்ளது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.