Skip to main content

தேர்வு நேரத்தில் பீதியூட்டும் எஸ்.எம்.எஸ்., அனுப்பாதீர்:

தேர்வு நேரத்தில் பீதியூட்டும் எஸ்.எம்.எஸ்., அனுப்பாதீர்: அரசு, தனியார் பள்ளிகளுக்கு அதிகாரிகள் எச்சரிக்கை
'பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வு நடக்கும் நிலையில், தேவையற்ற தகவல்களை எஸ்.எம்.எஸ்., அனுப்பி, பீதியை ஏற்படுத்தாதீர்கள்' என
, தனியார் பள்ளிகள் உள்ளிட்ட அனைத்து பள்ளிகளுக்கும், கல்வித் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வு, இன்று, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் துவங்குகிறது. இதேபோல், 10ம் வகுப்புக்கு, மார்ச் 19ம் தேதி பொதுத்தேர்வு நடக்கிறது. மாணவர்கள் தேர்வுக்கு தயாராகி வரும் நிலையில், சில தனியார் பள்ளிகள், அதிக ஆர்வத்துடன் எதையாவது குளறுபடியாக செய்து, தேவையற்ற பிரச்னைகளை ஏற்படுத்தி விடுகின்றன. சென்னை, வேளச்சேரியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளி, பெற்றோருக்கு, இரு தினங்களுக்கு முன், ஒரு எஸ்.எம்.எஸ்., அனுப்பியது. அதில், 'பள்ளி மாணவர்கள், மூன்று பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் பாதித்துள்ளது. எனவே, பெற்றோர் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு ஒரு வாரத்துக்கு அனுப்புவதா, வேண்டாமா என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்' என்று கூறப்பட்டிருந்தது. இந்த எஸ்.எம்.எஸ்., நர்சரி மாணவர்களுக்கு மட்டுமின்றி, பிளஸ் 2 மாணவர்களுக்கும் அனுப்பப்பட்டிருந்தது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, இன்று பொதுத்தேர்வு துவங்கும் நிலையில், தனியார் பள்ளியின் இந்த தகவல், பெற்றோரையும், கல்வித் துறை அதிகாரிகளையும் அதிர்ச்சி அடையச்செய்தது. பள்ளியின் நடவடிக்கை குறித்து, விசாரித்து அறிக்கை தருமாறு, மெட்ரிக் பள்ளி ஆய்வாளருக்கு, இயக்குனரகம் உத்தரவிட்டு உள்ளது. இதே போல் கடந்த வாரம், வடசென்னையில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பன்றிக் காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை என்று, முக கவசம் அணிந்து வகுப்பில் பங்கேற்றனர். இதனால், பெற்றோர் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப அச்சம் அடைந்து உள்ளனர்.

இதுகுறித்து, கல்வித் துறை அதிகாரிகள், நேற்று அவசரமாகக் கூடி ஆலோசனை நடத்தினர். அதன் முடிவில், அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம், மெட்ரிக் பள்ளி மற்றும் ஆங்கிலோ இந்தியன் ஆய்வாளர் அலுவலகங்கள் மூலம் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, எச்சரிக்கைத் தகவல் அனுப்பப்பட்டு உள்ளது. அதில், 'பொதுத்தேர்வு மற்றும் ஆண்டுத்தேர்வு துவங்கும் நிலையில், தேவையற்றதை, விழிப்புணர்வு தகவலாக அனுப்பி, பெற்றோர் மற்றும் மாணவர்களிடம் பீதி ஏற்படுத்த வேண்டாம். மாறாக, தேர்வுகளை பயமின்றி எழுதுவது, விடையளிக்கும் முறை, தேர்வுக்குத் தயாராகும் முறை குறித்து, நல்ல அறிவுரை வழங்குங்கள்' எனக் கூறப்பட்டு உள்ளது.

12 மணி நேர கட்டுப்பாட்டு அறை:

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் சந்தேகம் தீர்க்க, தேர்வுத் துறை இயக்குனரகம் சார்பில், 12 மணி நேரக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது. இங்கு மொத்தம், நான்கு பணியாளர்கள், காலை, 8:00 மணி முதல் இரவு, 8:00 மணி வரை, 'ஷிப்ட்' முறையில் பணியில் இருப்பர். கட்டுப்பாட்டு அறையை மாணவர்கள் தொடர்பு கொள்ள, 80125 94101, 80125 94116, 80125 94120, 80125 94125 ஆகிய மொபைல் போன்களில் தொடர்பு கொள்ளலாம்.

தடையில்லா மின்சாரம்:

கோடை வெயில் காரணமாக, மின் தேவை, வழக்கமான, 12 ஆயிரம் மெகாவாட்டை விட, 15 ஆயிரம் மெகாவாட்டை தாண்டும் என தெரிகிறது. இதனால் குடியிருப்புக்கு, மின்தடை நேரம் அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இருப்பினும், தேர்வு மையங்களுக்கு தடையில்லாமல் மின்சாரம் வினியோகம் செய்ய, மின் வாரிய அதிகாரிகள் முடிவு செய்தனர். பிளஸ் 2 தேர்வு துவங்கியதில் இருந்து, 10ம் வகுப்பு தேர்வு முடியும் வரை, ஊழியர்கள், அலுவலகத்தில் இருக்க, உயர் அதிகாரிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

பிரச்னை இல்லை:

தேர்வுத் துறை இயக்குனர் தேவராஜன் கூறியதாவது: பொதுத்தேர்விலோ, தேர்வு எழுதும் மாணவர்களிடமோ எந்தப் பிரச்னையும் இல்லை; தேர்வுகள் திட்டமிட்டபடி, அனைத்து ஏற்பாடுகளுடன் நடக்கும். ஆண்டுதோறும், சில மாணவர்கள் அம்மை நோயால் பாதிக்கப்பட்டிருப்பர். அவர்கள் தனியாக அமர்ந்து தேர்வு எழுத வசதி செய்வது வழக்கம். அதேபோல், இப்போதும் மாணவர்களுக்கு உடல்நல பாதிப்பு இருந்தால், தனியாக அமர்ந்து தேர்வெழுத வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இவ்வாறு, அவர் கூறினார்.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா