பிளஸ் 2 வேதியியல் பாடத் தேர்வில் ஒரு மதிப்பெண் பகுதியில் 2 வினாக்கள் பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
பிளஸ் 2 தேர்வில் திங்கள்கிழமை வேதியியல், கணக்குப் பதிவியல்
பாடங்களுக்கான தேர்வு நடைபெற்றது.
வேதியியல் பாடம் ஏ வகை வினாத்தாள் வரிசையில் 10-ஆவது கேள்வி, 22-ஆவது கேள்வி ஆகியவை பிழையுடன் இருந்ததாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அணு வேதியியல், வெப்ப இயக்கவியல் பகுதிகளிலிருந்து இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.
10-ஆவது கேள்வி யுரேனியம் அணுத்துகள் ஈயத்துடன் வேதியியல் வினைபுரியும்போது வெளியிடப்படும் ஆல்பா, பீட்டா கதிர்களின் எண்ணிக்கை தொடர்பானது. இதில் ஈயத்தின் மதிப்பு 206 என்று இருப்பதற்கு பதிலாக 208 என வழங்கப்பட்டுள்ளது. இதனால் சரியான விடை கிடைக்காது என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
அதேபோல், வெப்ப இயக்கவியல் தொடர்பான 22-ஆவது கேள்வியில் கொடுக்கப்பட்டிருந்த 4 விடைகளுமே தவறானவை. இந்தப் பகுதியில் விடையாக +0.032ஒஓ-1 என்று கொடுக்கப்பட்டிருக்க வேண்டும் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சற்று கடினமான கேள்வித்தாள்: வேதியியல் பாட வினாத்தாள் இந்த ஆண்டு சற்று கடினமானதாகவே இருந்தது என மாணவர்கள் தெரிவித்தனர்.
ஒரு மதிப்பெண் வினாக்கள் கடினமானவையாக இருந்தன. பிற பகுதி வினாக்களும் எதிர்பார்க்காத பகுதிகளிலிருந்து வந்திருந்ததாக மாணவர்கள் தெரிவித்தனர்.
நன்றாகப் படிக்கும் மாணவர்கள் கூட வேதியியல் பாடத்தில் முழு மதிப்பெண் பெறுவது சிரமம் என ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
காப்பியடித்ததாக 38 பேர் சிக்கினர்: வேதியியல் பாடத்தில் காப்பியடித்ததாக மாநிலம் முழுவதும் 38 பேர் சிக்கினர். பிளஸ் 2 கணிதப் பாடத்தில் வாட்ஸ்-அப் மூலம் வினாத்தாளைப் படம் எடுத்து அனுப்பி, பதில்களைப் பெறுவதற்கு தனியார் பள்ளி ஆசிரியர்கள் முயற்சி செய்ததால் இந்தத் தேர்வுக்கான கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்ததாக கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல், கணக்குப் பதிவியல் தேர்வில் காப்பியடித்ததாக 24 பேர் பிடிபட்டனர்.