Skip to main content

காஞ்சீபுரம் அருகே அரிய வகை தமிழ் நூல்கள் கண்டுபிடிப்பு

காஞ்சீபுரம் அருகே அரிய வகை தமிழ் நூல்கள் கண்டுபிடிப்பு தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் தகவல்

காஞ்சீபுரம் அருகே அரிய வகை தமிழ் நூல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் கோ.விசயரா
கவன் தெரிவித்தார்.

அரிய நூல்கள்

காஞ்சீபுரத்தை அடுத்த புதுப்பாளையம் கிராமத்தில் சமரச சன்மார்க்க நூலகம் உள்ளது. இந்த நூலகம் 1914-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இந்த நூலகத்தில் 17, 18 மற்றும் 19-ம் நூற்றாண்டுகளில் வெளியிடப்பட்ட அரிய வகை தமிழ் நூல்கள் இருப்பதாக சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் முனைவர் கோ.விசயராகவனுக்கு தகவல் கிடைத்தது.


அவர் உடனடியாக நேற்று காஞ்சீபுரத்தை அடுத்த புதுப்பாளையம் கிராமத்திற்கு சென்றார். அங்கு உள்ள அந்த நூலகத்திற்கு சென்ற போது அரிய நூல்கள் இருப்பதை கண்டு வியந்தார்.

இந்த ஆய்வின் போது, 1862-ம் ஆண்டு வெளிவந்த சபாபதி முதலியாரின் மதுரை 64 திருவிளையாடல் சர்குரு மாலை, 1889-ம் ஆண்டு வெளிவந்த சூரிய நாராயண சாஸ்திரிகளின் தமிழ் மொழி வரலாறு, 1894-ம் ஆண்டு வெளிவந்த மாத்ரு பூதையரின் நந்த மண்டல சதகம் (தொல்காப்பியத்தை ஒப்பிட்டு ஸ்ரீ கிருஷ்ணரின் கதை), 1897-ம் ஆண்டு வெளிவந்த திருப்பதி திருமலையான் குறித்த வட வேங்கட நாராயண சதகம், 1905-ம் ஆண்டு வெளிவந்த திருஞான சம்பந்தரின் சரித்திரம் குறித்த ஓரடி சிந்து, 1911-ம் ஆண்டு வெளிவந்த அத்வைதம் தமிழ் மொழி பெயர்ப்பு நூலான தத்துவாநூ, 1914-ம் ஆண்டு வெளிவந்த ஆனந்த போதினி இதழ், 1916-ம் ஆண்டு வெளியான தொண்டை மண்டல சரித்திரம் உள்ளிட்ட 172 அரியவகை நூல்கள் பாதுகாக்கப்பட்டு வருவது தெரியவந்தது.

2 லட்சம் நூல்கள்

இதுகுறித்து உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவன இயக்குனர் டாக்டர் கோ.விசயராகவன் காஞ்சீபுரத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-

முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா அரிய நூல்கள், சுவடிகளை திரட்டி நூலாக வெளியிடவும், தமிழ்நாடு முழுமையும் உள்ள சுவடிகள், தாள் சுவடிகள் ஆகியவற்றை கண்டறிந்து சென்னை தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் தொடங்கப்பட்டுள்ள சுவடியியல் பாதுகாப்பு மையத்தில் வைத்து பாதுகாக்கவும் திட்டமிட்டார்.

புதுப்பாளையத்தில் முதுபெரும் தமிழ் அறிஞர்கள் உ.வே.சாமிநாத அய்யர், நா.மு.வெங்கடசாமி நாட்டார், வி.கே.சூரியநாராயண சாஸ்திரியார், யாழ்ப்பாணம் ஆறுமுகம் நாவலர், மீனாட்சி சுந்தரம்பிள்ளை, சபாபதி நாவலர், காஞ்சீபுரம் அரங்கநாதபிள்ளை உள்பட பல அறிஞர்கள் எழுதிய அரிய நூல்கள் மொத்தம் 172 கண்டறியப்பட்டுள்ளன. இந்த நூல்களை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் மின் எண்மம் செய்து வெளியிடுவதற்கு அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும்.

இதுவரை 2 லட்சம் அரிய நூல் பக்கங்களை உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் மின் எண்மம் செய்துள்ளது.

இந்த நிறுவன நூலகத்தில் 2 லட்சம் நூல்கள் பாதுகாக்கப்பட்டு ஆராய்ச்சியாளர்கள் பயன்பெறும் வகையில் அட்டவணையிடப்பட்டுள்ளது. அவற்றில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரிய நூல்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டுக்காரர்கள்

ஆண்டுதோறும் உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் உள்ள நூலகத்தில் அயல்நாட்டு தமிழ் அறிஞர்களும், இந்தியா முழுவதும் உள்ள மொழியியல், இலக்கியம் சார்ந்த அறிஞர்கள் ஆயிரக்கணக்கானோர் நூல்களை படித்து பயன்பெற்று வருகின்றனர். இலங்கை, கனடா, ஆஸ்திரேலியா, மலேசியா, பிரான்சு, தாய்லாந்து, ஜப்பான், பிஜி தீவுகள் உள்பட வெளிநாட்டுகாரர்களும் இந்த நூலகத்திற்கு நேரில் வந்து ஆய்விற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இந்தியாவிலேயே முதன் முறையாக முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஆணைப்படி தொல்காப்பியம் குறித்த ஆய்வு இருக்கை ரூ.50 லட்சத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதனால் தமிழ் மொழி குறித்த ஆய்வுகள் மேலும் சிறப்படைந்துள்ளது. மேலும் அரிய நூல்களை அறிஞர்கள் தெரிந்துகொள்வதற்காக ஜெயலலிதா பிறந்த நாளான வரும் 24-ந் தேதி தனி வலைதளத்தில் தரவேற்றம் செய்யப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நூலகர் இரா.பெருமாள்சாமி, கவிஞர் கூரம் துரை, தமிழறிஞர் கோ.ராசு உள்பட பலர் உடன் இருந்தனர்.

Popular posts from this blog

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - செயல்முறைகள்

அகஇ - 100% வாசித்தல் திறன் பெற்ற பள்ளிகளுக்கு ஊக்கத்தொகை - இயக்குனர் செயல்முறைகள்

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்