Skip to main content

தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் மாணவி

தமிழகத்தில் இருந்து செவ்வாய் கிரகத்துக்கு ஒருவழி பயணமாக செல்லும் கோவை மாணவி, அதுபற்றி ருசிகர பேட்டி அளித்துள்ளார்.

செவ்வாய் கிரகத்தில் குடியேற்றம்

செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ ஏற்ற சூழல் நிலவுகிறதா? என்
று இந்திய நாட்டு விஞ்ஞானிகள் உள்பட உலக விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகிறார்கள். இந்த நிலையில் செவ்வாய் கிரகத்தில் மனித காலனியை நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது. நெதர்லாந்தை மையமாக கொண்டு செயல்பட்டு வரும் தனியார் நிறுவனமான ‘மார்ஸ் ஒன்’ அமைப்பு இதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. செவ்வாய்கிரகத்துக்கு பயணம் செய்ய தகுதி வாய்ந்தவர்களை தேர்வு செய்யும் பணிகளை இந்த நிறுவனம் ஏற்கனவே தொடங்கி விட்டது.


இதற்கான அறிவிப்பு வெளியான உடனே, உலகம் முழுவதிலும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 586 பேர் செவ்வாய் பயண திட்டத்துக்கு விண்ணப்பித்தனர். இதில் ஏராளமான இந்தியர்களும் அடக்கம்.

இது ஒரு வழி பயணம் ஆகும். செவ்வாய் கிரகத்துக்கு பத்திரமாக போய் சேர்ந்தால் அங்கு இருந்து திரும்பி வர முடியாது.

3 இந்தியர்கள் தேர்வு

இந்த வினோத பயணத்திற்காக உலகம் முழுவதும் இருந்து விண்ணப்பித்தவர்களின் பட்டியலில் இருந்து 3 சுற்று சோதனைகள் நடத்தி, 50 ஆண்கள், 50 பெண்கள் கொண்ட 100 பேர் பட்டியல் தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த பட்டியலில் அமெரிக்காவில் இருந்து 39 பேர், ஐரோப்பியர் 31, ஆசியாவில் இருந்து 16, ஆப்பிரிக்கா மற்றும் ஓசியானியாவில் இருந்து தலா 7 பேர் அடங்குவர்.

இந்த பட்டியலில் புளோரிடாவில் ஆய்வுக்கல்வி பயின்று வரும் தரண்ஜீத் சிங் (வயது 29), துபாயில் வசித்து வரும் ரித்திகா சிங் (29), கேரளாவை சேர்ந்த இளம்பெண் சாரதா பிரசாத் (19) ஆகிய 3 இந்தியர்கள் இடம்பிடித்துள்ளனர்.

கோவை மாணவி

சாரதா பிரசாத் கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்தவர். இவர் கோவை எட்டிமடையில் உள்ள அமிர்தா பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து வருகிறார். இவர், பெற்றோருக்கு ஒரே வாரிசு ஆவார். கோவை வடவள்ளியில் பெற்றோருடன் தங்கி இருக்கும் சாரதா பிரசாத் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

செவ்வாய்கிரகத்துக்கான பயண தேர்வுக்கு, 3-வது சுற்றில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில் இந்தியாவை சேர்ந்த ஒரே பெண் நான்தான் என்பதில் மிகவும் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறேன். மற்ற 2 பேர் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள். நான் தேர்வு செய்யப்பட்டது, எனக்கு 13-ந் தேதியே தெரியும். இருப்பினும், வெளியே சொல்லக்கூடாது என்று கூறிவிட்டனர்.

3-வது சுற்று தகுதி தேர்வில் உடல்திறன், மன திறன் முக்கிய தேர்வாக இருந்தது. மிகவும் சவாலான போட்டியாக விளங்கிய 3-வது சுற்றில் வெற்றி பெற்றுவிட்டேன். 4-வது சுற்றிலும் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

திரும்ப முடியாது

செவ்வாய்கிரகத்துக்கு சென்றால், திரும்ப முடியாது என்பதால் ஆரம்பத்தில் எனது பெற்றோர் இதற்கு சம்மதிக்கவில்லை. பெற்றோரை சம்மதிக்க வைத்து இந்த போட்டிகளில் கலந்துகொண்டேன். இப்போது எனது பெற்றோர் முழு சம்மதம் தெரிவித்து விட்டனர்.

எனக்கு விண்வெளி அறிவியலிலும், தொழில்நுட்பத்திலும் ஆர்வம் அதிகம். அத்துடன், ரிஸ்க் எடுப்பதிலும், சாகசங்கள் புரிவதிலும் ஆர்வம் உண்டு. செவ்வாய் கிரக பயணத்தில் இவை இரண்டும் இருப்பதால், செல்வாய் கிரகத்தில் குடியேற ஆர்வமாக இருக்கிறேன்.

குடும்பத்தையும், நண்பர்களையும் பிரிந்து செல்வது கடினமான ஒன்றுதான். ஆனால், இது வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு என்பதை மறந்துவிடக்கூடாது.

நிச்சயம் பயணம் செல்வேன்

இறுதி சுற்று தேர்வுக்காக இப்போதே நான் என்னை தயார்படுத்தி வருகிறேன். செவ்வாய் கிரகத்துக்கு நிச்சயம் நான் பயணம் செய்வேன் என்ற நம்பிக்கை உள்ளது.

இந்தியர்களுக்கு பெருமையாகவும், உலக வரலாற்றில் இடம்பெறுவதாகவும் இந்த பயணம் அமையும்.

இவ்வாறு சாரதா பிரசாத் கூறினார்.

3-வது சுற்றில் வெற்றி பெற்றதற்காக தாய் கீதா, மகளுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

2024-ல் பயணம்

தற்போது தேர்வு செய்யப்பட்டவர்களிடம் இன்னும் கடினமான சோதனைகள் நடத்தப்பட்டு, 24 பேர் கொண்ட இறுதிப் பட்டியல் தயாரிக்கப்படும். அந்த பட்டியலில் இடம்பிடிப்போருக்கு 7 ஆண்டுகள் விண்வெளி பயிற்சிகள் அளிக்கப்படும்.

பின்னர் 2024-ம் ஆண்டு முதல் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை 4 பேர் வீதம் செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பிவைக்கப்படுவார்கள். இறுதிபட்டியலில் இந்தியர்கள் இடம்பெறுவார்களா? என்ற எதிர்பார்ப்பு இந்தியாவில் உள்ளவர்களிடம் மட்டுமின்றி வெளிநாடுகளில் வாழும் இந்தியர்களிடமும் உள்ளது. 

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா