Skip to main content

பள்ளி மாணவர்களுக்கான குடியரசு தின உரை


உலகில் பெரிய ஜனநாயக நாடு இந்தியா என்பது, ஒவ்வொரு இந்தியனும் பெருமைப்பட வேண்டிய விஷயம். இன்றைய தலைமுறையினர், சுதந்
திர தினம் எப்போது என சொல்லி விடுவர். ஆனால் குடியரசு தினம் எப்போது, ஏன் கொண்டாட வேண்டும் எனக் கேட்டால், அனைவருக்கும் பதில் தெரியுமா என்பது சந்தேகமே.


குடியரசு என்பதன் நேரடிப் பொருள், "மக்களாட்சி'. மன்னராட்சி இல்லாமல், தேர்தல் மூலம் மக்களே ஆட்சியாளர்களை தேர்ந்தெடுத்துக் கொள்ளும் முறைக்கு குடியரசு என பெயர். மக்களாட்சி நடைபெறும் நாடு, குடியரசு நாடு என அழைக்கப்படுகிறது. இதன் மூலம் அரசின் நடவடிக்கையில் மக்கள் பங்கேற்கின்றனர். குடியரசு நாட்டின் தலைவர், குடியரசு தலைவர் அல்லது ஜனாதிபதி என அழைக்கப்படுகிறார். சில நாடுகளில், நேரடியாகவே மக்களால் குடியரசு தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். சில நாடுகளில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மூலம் குடியரசுத் தலைவர் தேர்ந்தெடுக்கப்படுகிறார். இம்முறைதான் இந்தியாவில் பின்பற்றப்படுகிறது.


எப்படி வந்தது குடியரசு: நாடு சுதந்திரம் பெறும் முன், பல சுதந்திர போராட்ட தலைவர்களும் ஆங்கிலேயரிடம் இருந்து "டொமினியன்' அந்தஸ்து பெற்றால் போதும் என எண்ணினர். டொமினியன் அந்தஸ்து என்பது, பிரிட்டிஷ் மேலாதிக்கத்துக்கு உட்பட்ட சுய ஆட்சி. இதன்படி நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை அவர்கள் தான் நிர்வகிப்பர். இதற்கு நேரு, நேதாஜி உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். பின், முழுமையான சுயராஜ்யம் தான் லட்சியம் என சுதந்திர போராட்ட தலைவர்களிடம் மாற்றம் வந்தது. 1947 ஆக., 15ல் சுதந்திரம் பெற்ற போது, பிரிட்டிஷ் அரசு இந்தியாவுக்கு டொமினியன் அந்தஸ்து தான் வழங்கியது. அதன்படி, பிரிட்டிஷார் சார்பில் நியமிக்கப்பட்ட கவர்னர் ஜெனரல் தான் நாட்டின் தலைவராக இருந்தார். சுதந்திரத்துக்குப் பின், மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஆட்சியாளர்கள், தங்கள் விருப்பத்துக்கு செயல்படக் கூடாது என்பதற்காக அரசியலமைப்பு உருவாக்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி அரசியலமைப்பு, 1949 நவ., 26ல் அரசியல் நிர்ணய சபையால் ஏற்றுக்கொள்ளப்பட்டு 1950, ஜன., 26ல் நடைமுறைக்கு வந்தது. பிரிட்டிசாரின் கவர்னர் ஜெனரல் பதவி நீக்கப்பட்டு, புதிதாக ஜனாதிபதி பதவி உருவாக்கப்பட்டது.

அடிப்படை கடமைகள்: இந்திய அரசியலமைப்பு சட்டம், பகுதி 5ல் மக்களின் அடிப்படைக் கடமைகள் பற்றி குறிப்பிடப்பட்டு உள்ளது.

* தேசியக் கொடியையும், தேசிய கீதத்தையும் மதித்து நடக்க வேண்டும்
* அனைவரும் நாட்டுக்காக சேவை செய்ய தயாராக இருக்க வேண்டும்.
* ஜாதி, மதம், இன பாகுபாடின்றி சகோதர மனப்பான்மையோடு ஒன்றாக பழக வேண்டும்.
* பாரம்பரியம், கலாசாரத்தை பின்பற்ற வேண்டும்.
* இயற்கை வளங்களை பாதுகாக்க வேண்டும்.
* வளர்ச்சிக்கு வித்திடும் வகையில், அறிவியல் மற்றும் மனிதாபிமான உணர்வுகளை வளர்க்க வேண்டும்.
* அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும்.
* 6-14 வயது குழந்தைகள் கல்வி பெறுவது அவசியம்.

எதிரிகள் ஜாக்கிரதை: இந்திய பாதுகாப்பு படைகளில், தரைப்படையே (ராணுவம்) பெரியது. எல்லைப் பாதுகாப்பு, உள்நாட்டு விவகாரங்கள், அமைதியை நிலைநாட்டல், பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவை இவற்றின் பணி.

மத்திய படைப் பிரிவு: இது, உ.பி.,யில் உள்ள லக்னோவை தலைமையகமாக கொண்டது. இதன் தலைவர் (கமாண்டர் ஆப் சீப் - ஜி.ஓ.சி.,) ஓம் பிரகாஷ்.

கிழக்கு படைப்பிரிவு: கோல்கட்டாவை தலைமையகமாக கொண்டது. இதன் தலைவர் குல்திப் சிங் ஜம்வால்.

வடக்கு படைப் பிரிவு: காஷ்மீரில் உள்ள உதம்பூரை தலைமையகமாக கொண்டு செயல்படும் இதன் தலைவர் ஹர்சரண்ஜித் சிங் பனாக்.

தெற்கு படைப்பிரிவு: 1895ம் ஆண்டு துவங்கப்பட்ட இந்த படைப்பிரிவானது, சுதந்திரத்தின் போதும், இந்திய மாகாணங்கள் பிரிக்கும் போது முக்கிய பங்கு வகித்தது. தவிர, 1961ல் கோவாவை இணைக்கும் போதும், 1965 மற்றும் 1971ல் நடைபெற்ற இந்தியா-பாகிஸ்தான் போரின் போதும் சிறப்பாக செயல்பட்டது. மகாராஷ்டிராவில் உள்ள புனேயை தலைமையிடமாக கொண்டுள்ளது. இதன் தலைவர் நோபல் தம்புராஜ்.

தென் மேற்கு படைப்பிரிவு: ராஜஸ் தானில் உள்ள ஜெய்ப்பூரை தலைமையகமாக கொண்டு துவங்கப்பட்டது. இதன் தலைவர் பர்மேந்திர குமார் சிங்.

மேற்கு படைப்பிரிவு:1947ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ள இந்த படைப்பிரிவு, அரியானா மாநிலத்தில் உள்ள ஜந்தர்மந்தரை தலைமையிடமாக கொண்டது. இதன் தலைவர் தல்ஜித் சிங்.

வேண்டும் விமானம் தாங்கி கப்பல்: ராணுவப் பாதுகாப்பு படைப் பிரிவில், விமானம் தாங்கி கப்பல்களுக்கு தனி இடம் உண்டு. அண்டை நாடுகளுடன் போரிடும் போது,போர் விமானங்களை தாங்கிச் சென்று எளிதில் தாக்கும் வகையில் இவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இந்தியாவில், 28,700டன் எடை கொண்ட ஐ.என்.எஸ்.விராத் என்ற விமானம் தாங்கி கப்பல் 1987ம் ஆண்டு முதல் பயன்பாட்டில் உள்ளது. இது தவிர, ஐ.என்.எஸ்., விக்ரமாதித்யா (2012), ஐ.என்.எஸ்.,விக்ராந்த்(2014), ஐ.என்.எஸ்., விஷால்(2017) ஆகிய கப்பல்கள் கட்டுமானப் பணியில் உள்ளன.

பாசறை திரும்புதல்: குடியரசு தின விழா முடிந்து, மூன்று நாட்கள் கழித்து படைகள் பாசறை திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. ஜனவரி 29ம் தேதி மாலை மூன்று படைகளும் இவ்விழாவில் பங்கேற்கும். ராஷ்டிரபதி பவனில் விஜய் சவுக் என்ற பகுதியில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. தரைப்படை, கடற்படை, விமானப்படையின் "பேண்டு' வாத்திய இசையுடன் விழா துவங்குகிறது. ஜனாதிபதி தனது பரிவாரங்களுடன் இந்த விழாவுக்கு தலைமை ஏற்கிறார். ஜனாதிபதிக்கு "சல்யூட்' அளிக்கப்பட்டு, "பேண்டு' வாத்தியம், "டிரம்பட்'டில் தேசிய கீதமும் இசைக்கப்படுகிறது. ஜனாதிபதி வணக்கம் செலுத்துவதுடன் படை திரும்புதல் நிகழ்ச்சி நிறைவடைகிறது.

கொள்ளை கொள்ளும் குடியரசு அணிவகுப்பு: 1950ம் ஆண்டு ஜன.26ம் தேதி இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த நாளை ஆண்டுதோறும் குடியரசு தினமாக கொண்டாடுகிறோம். 1930ம் ஆண்டு ஜனவரி 26 அன்று, இந்திய விடுதலை இயக்கத்தினர் "பூரண சுதந்திரம்' அடைய தீர்மானம் நிறைவேற்றினர். அந்த தினத்தை நினைவு கூரும் வகையில் ஜன.26, குடியரசு தினமாக ஏற்றுக்கொள்ள முடிவு செய்யப்பட்டது. குடியரசு தின விழாவில் ராணுவ அணிவகுப்பு முக்கிய இடம் பெறுகிறது. தலைநகர் டில்லியில் உள்ள இந்தியா "கேட்டில்' பிரதமர் வீரவணக்கம் செலுத்தி விழாவை துவக்கி வைக்கிறார். ஜனாதிபதி மூவர்ணக் கொடியை ஏற்றி வைக்கிறார்.

ராணுவ அணிவகுப்பின் சிறப்பம்சங்கள்:

* காலை 9.30க்கு துவங்கும் அணிவகுப்பு மூன்று மணி நேரம் நடக்கிறது.
* ஐந்து கி.மீ., தூரமுள்ள "ராஜ்பாத்' சாலையில் அணிவகுப்பு நடக்கும். இது ராஷ்டிரபதி பவனில் ஆரம்பித்து செங் கோட்டை, இந்தியா "கேட்' வழியாக செல்கிறது.
* அணிவகுப்பு துவக்கத்தின் போது பிரதமர், இந்தியா "கேட்டில்' உள்ள அமர் ஜவான் ஜோதியில், போரின் போது உயிர் நீத்தவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்துகிறார்.
* ஜனாதிபதி 21 குண்டுகள் முழங்க தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார். தேசிய கீதம் இசைக்கப்படுகிறது.
* தரைப்படை, கடற்படை, விமானப்படை என்ற வரிசையில் அணிவகுப்பு நடைபெறும்.
* இந்திய கலாசாரம், பண்பாட்டை பிரதிபலிக்கும் வண்ணம் அணிவகுப்பு நிகழ்ச்சி இருக்கும்.
* இறுதியில் விமான சாகசம் நடக்கும்.
* இந்தியா முழுவதும் இருந்து தேர்வு செய்யப்பட்ட 1,200 பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சி இடம்பெறும். மாநிலங்களின் கிராமியக் கலை நிகழ்ச்சியும், பழங்குடி இனத்தவரின் நடனமும் இதில் இருக்கும்.
* முன் அனுமதி பெற்றவர்கள் மட்டுமே நிகழ்ச்சிகளை கண்டுகளிக்க முடியும்.
* அணிவகுப்புக்கு மொபைல், கேமரா மற்றும் எலக்ட்ரானிக் பொருட்களை கொண்டு செல்ல அனுமதியில்லை.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

அறிவியல் மற்றும் பொறியியல் ஆராய்ச்சி கவுன்சில் - விசிட்டிங் பெல்லோஷிப்ஸ்

கல்வித் தகுதி பொறியியல் மற்றும் தொழில்நுட்பத்தில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் மருத்துவத்தில் எம்.டி., பட்டம் அறிவியலில் பி.எச்டி., பட்டம் வயது : 50 வயதிற்கு கீழ் இதர தகுதிகள் விண்ணப்பிப்பவர், அங்கீகரிக்கப்பட்ட அறிவியல் / தொழில்நுட்ப நிறுவன