ஆசிரியர் பட்டயப் படிப்புக்கு 3 மாதங்களுக்குள் புதிய பாடத் திட்டம் உருவாக்கப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. தமிழகத்தில் 400-க்கும் அதிகமான ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் உள்ளன. இவற்றில் 20
ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் ஆசிரியர் பட்டயப் படிப்பைப் படித்து வருகின்றனர்.
மாறி வரும் சூழலுக்கு ஏற்ப, ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான புதிய பாடத்திட்டத்தை உருவாக்க மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவனம் முடிவு செய்தது.
இதற்காக 120 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு, இந்தக் குழுவினர் கேரளம், தில்லி, மகாராஷ்டிரம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களுக்குச் சென்று அங்குள்ள ஆசிரியர் பட்டயப் படிப்பு பாடத்திட்டங்களை ஆய்வு செய்தனர்.
புதிய பாடத்திட்டத்தை உருவாக்குவது தொடர்பாக விரிவுரையாளர்கள், கல்வியாளர்களுக்கான பயிற்சி சென்னையில் செவ்வாய்க்கிழமை வழங்கப்பட்டது.
புதிய பாடத்திட்டம் தொடர்பாக தகவலறிந்த வட்டாரங்கள் கூறியது:
கல்வி உரிமைச் சட்டம், இணையப் பாதுகாப்பு, மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களைப் புதிய பாடத்திட்டத்தில் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
மூன்று மாதங்களுக்குள் ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் என அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
ஆசிரியர் பட்டயப் படிப்புக்கான பாடத்திட்டம் உருவாக்கப்பட்ட நான்கரை ஆண்டுகளுக்குள்ளாகவே அந்தப் பாடத்திட்டத்தை மாற்றியமைப்பதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.