அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணி நியமனத்தை நம்பி, தனியார் பள்ளிகளில் பார்த்து வந்து வேலையை இழந்த ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.
ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் மதிப்பெண், வெயிட்டேஜ் மதிப்பெண் அடிப்படையில் பட்டதாரி ஆசிரியர்கள் 11 ஆயிரத்து 700 பேர், இடைநிலை ஆசிரியர்கள் 1,700
பேர் தேர்வு செய்யப்பட்டு பணி நியமன கலந்தாய்வு நடந்தது. அப்போது,"வெயிட்டேஜ்' மதிப்பெண் அடிப்படையில் நியனம் நடப்பதால் 10 ஆண்டுகளுக்கு முன் படித்தவர்கள் தகுதி இழப்பதாகக் கூறி டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். மேலும் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்து புதிய ஆசிரியர் பணி நியமனத்திற்கு தடை ஆணை பெற்றனர். இதனால் கவுன்சிலிங்கில் பங்கேற்று வேலை கிடைக்கும் என்ற ஆசையில் இருந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். இந்நிலையில் பணி நியமன கவுன்சிலிங்கில் பங்கேற்ற பலர், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களாக வேலை பார்த்து வந்தனர்.
அரசு பள்ளியில் ஆசிரியர் பணி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் தனியார் பள்ளி வேலையை விட்டனர். தற்போது, அரசு ஆசிரியர் பணி கிடைக்காததால் தவிக்கின்றனர். இவர்களில் தேனி மாவட்டத்தில் பணி நியமன கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் தேனி கலெக்டர் பழனிசாமியிடம் பணி நியமனம் கேட்டு நேற்று மனு அளித்தனர். ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதில் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களில் உள்ளது போல் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்து சிக்கலுக்கு தீர்வு காண அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.