Skip to main content

அமைச்சர், எம்எல்ஏக்கள் பரிந்துரைத்த பள்ளிக் காவலர்கள் பணி நியமனம் ரத்து


அமைச்சர், எம்எல்ஏ-க்களின் பரிந்துரை மீதான 6 பள்ளிக் காவலர்கள் நியமனத்தை சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது. மேலும், லஞ்ச ஒழிப்பு காவல் துறைக் கண்காணிப்பாளர் விசாரணைக்கு
உத்தரவிடப்பட்டது.

மதுரை மாவட்டத்தில் 2012-ஆம் ஆண்டு பள்ளிக் காவலர்கள் மற்றும் துப்புரவு ஊழியர்களை நியமித்ததில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரிக்கக் கோரும் மனுவை நீதிபதி எஸ்.நாகமுத்து விசாரித்து வந்தார்.

இந்த வழக்கில், தொழில் துறை முதன்மை செயலர் சி.வி.சங்கர் விசாரணை நடத்த கடந்த ஆண்டு உத்தரவிடப்பட்டது. அவர், அண்மையில் விசாரணை அறிக்கையைத் தாக்கல் செய்தார். அதில், பணிகளுக்கு பரிந்துரை அளிக்கப்பட்டிருந்த போதும், தகுதி அடிப்படையில் தான் நியமனங்கள் நடைபெற்றுள்ளன எனக் குறிப்பிட்டிருந்தார்.

இந்த அறிக்கையில் பல்வேறு சந்தேகங்களை எழுப்பிய நீதிபதி, அரசியல்வாதிகள் கடிதம் அளித்தது, பள்ளிக்கல்வித் துறை இயக்குநரகத்தில் இருந்து வந்த தொலைபேசி அழைப்பு ஆகியவை குறித்து விசாரிக்காதது ஏன்? என கேள்வி எழுப்பினார்.

இந்த சந்தேகங்கள் குறித்து பதிலளிப்பதற்காக நேரில் ஆஜராகும்படி சி.வி.சங்கருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

அதன்படி, உயர் நீதிமன்றத்தில் சி.வி.சங்கர் புதன்கிழமை ஆஜரானார். அவரிடம் நீதிபதி, பரிந்துரை செய்ததாகக் கூறப்படும் அரசியல்வாதிகளிடம் விசாரணை நடத்தாதது ஏன் எனக் கேட்டார்.

இதற்கு சிவி.சங்கர், பொதுவாக அரசுப் பணிகளுக்கு அரசியல்வாதிகள் பரிந்துரை கொடுப்பது வழக்கமாக உள்ளது. எனவே, அதில் விசாரிக்க வேண்டியதில்லை என கருதியதாகத் தெரிவித்தார். இந்தப் பதிலில் நீதிபதி திருப்தி அடையவில்லை. அரசு தலைமை வழக்குரைஞர் சோமையாஜி ஆஜராகி, அறிக்கையில் திருப்தி இல்லை என்றால், வேறு ஓர் அதிகாரி விசாரிக்க உத்தரவிட்டால் ஏற்பதாகத் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து நீதிபதி எஸ்.நாகமுத்து பிறப்பித்த உத்தரவு:

இந்த வழக்கில் விசாரணை அதிகாரியை அரசு தான் நியமித்தது. ஆனால், அவர் தாக்கல் செய்த அறிக்கை திருப்திகரமாக இல்லை.

அரசியல்வாதிகள் தொடர்பு, இயக்குநரகத்தில் இருந்துவந்த தொலைபேசி அழைப்பு போன்றவை குறித்தும் அவர் விசாரிக்கவில்லை. எனவே, எம்.எல்.ஏ.க்கள், அமைச்சர் போன்றோர் பரிந்துரை அடிப்படையிலான 6 பள்ளிக் காவலர்கள் நியமனம் ரத்து செய்யப்படுகிறது.

இந்தப் பணியிடங்களை புதிதாகத் தேர்வு நடத்தி நிரப்ப வேண்டும். மேலும், இந்த விவகாரம் குறித்து தென் மண்டல லஞ்ச ஒழிப்புப் பிரிவு கண்காணிப்பாளர் சேவியர் தனராஜ் விசாரிக்க வேண்டும்.

அவர் 6 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அரசிடம் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும். மேலும், சம்பந்தப்பட்டவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கத் தடையில்லை. மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

 "பரிந்துரைக் கடித முறையை ஒழிக்க யோசனை'

 நீதிபதி உத்தரவில், நாட்டில் ஏராளமான ஏழ்மை நிலையில் உள்ள இளைஞர்கள் சாதாரண அரசுப் பணிகளை நாடுகின்றனர். அரசியலமைப்பு சட்டப்படி சம வாய்ப்பு கிடைக்கும் என நம்புகின்றனர்.

ஆனால், அந்தப் பணிகளும் பரிந்துரை செய்யப்படுவோருக்கு ஒதுக்கப்படும்போது இளைஞர்களின் கனவு தகர்கிறது. பணிக்கு பரிந்துரைக் கடிதம் கொடுப்பதும் லஞ்சம் கொடுப்பதற்கு சமமானதுதான். மக்களின் தேவைக்காக பள்ளிகள், பாலங்கள், குடிநீர் வசதி போன்ற பணிகளை செய்ய வேண்டும் என பரிந்துரை கொடுப்பதில் தவறில்லை. ஆனால், அரசு வேலைக்கு பரிந்துரை செய்வது கூடவே கூடாது.

இந்த முறையை ஒழிக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார். கூட்டுறவுத் துறை அமைச்சர், மாவட்டச் செயலர், மதுரை வடக்கு மற்றும் உசிலம்பட்டி எம்எல்ஏக்கள் ஆகியோர் பரிந்துரைத்துள்ளதாக பட்டியல் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

Popular posts from this blog

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

கணக்கெடுப்பு ! : பள்ளி செல்லா மாணவர்கள்...: ஏப்., 7ம் தேதி முதல் துவக்கம்

கடலூர் மாவட்டத்தில், அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு இடைநின்ற மாணவ, மாணவிகள் குறித்த விவரங்கள் கணக்கெடுக்கும் பணி வரும் 7ம் தேதி, துவங்குகிறது. தமிழகத்தில், ஆண்டுதோறும் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், 6 வயது முதல் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லா மற்றும் பள்ளியை விட்டு

10ம் வகுப்பு கணிதத்தேர்வில் போனஸ் மதிப்பெண்

பத்தாம் வகுப்பு தேர்விற்கான விடைத்தாள்கள் திருத்தும் பணி நடக்கிறது. பத்தாம் வகுப்பு கணிதத்தேர்வில், 'ஏ' பிரிவு ஒரு மதிப்பெண் வினாவிற்கான 15 வது கேள்வியில் ஆங்கில வழி வினா தவறாக கேட்கப்பட்டுள்ளதா