வெற்றிகரமாக செவ்வாய் நோக்கி மங்கள்யான் - ஒரு பார்வை
செவ்வாய் கிரகம் ஒரு பார்வை:
பூமியை போலவே மனிதன் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் செவ்வாய் கிரகத்தில் உள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். இதற்கு காரணம் செவ்வாய் கிரகம் பூமியுடன் பல்வேறு விஷயங்களில் ஒத்துப்போகிறது.
பூமியில் உள்ளது போலவே செவ்வாய் கிரகத்திலும் பாலைவனம், பனி துருவங்கள், எரிமலைகள் போன்றவை உள்ளன. இங்கு ஈர்ப்பு விசை பூமியின் புவிஈர்ப்பு விசையின் அளவில் மூன்றில் ஒரு பங்கு உள்ளது. சூரியனில் இருந்து 22.79 கோடி மைல் தொலைவில் அமைந்துள்ள செவ்வாயில் தண்ணீர் மற்றும் கார்பன்டை ஆக்சைடு பனி உள்ளதை விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.
மேலும் செவ்வாய் தன்னைத்தானே சுற்றிவர 24 மணி நேரம் 37 விநாடிகள் எடுத்துக் கொள்கிறது. அதே போல சூரியனை சுற்றிவர 687 நாட்களை எடுத்துக் கொள்கிறது. செவ்வாய் கிரகத்தின் வளி மண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடு, நைட்ரஜன், அர்கோன், ஆக்சிஜன், தண்ணீர் ஈரப்பதம், நைட்ரிக் ஆக்சைடு ஆகியவை இருப்பது ஆய்வில் தெரிந்துள்ளது. இருப்பினும் நீண்ட நாள் கேள்விக்குறியாக இருந்துவருவது செவ்வாயில் மனிதனின் வாழ்வாதாரங்கள் நிரம்பியுள்ளதா என்பதே. தற்போது இவற்றை ஆய்வு செய்வதற்காகவே மங்கள்யான் செயற்கைக்கோள் அனுப்பப்பட்டுள்ளது. இந்த செயற்கைக்கோள் செவ்வாய் கிரகத்தில் மீத்தேன் உள்ளதா என்பதை ஆய்வு செய்யும்.
மங்கள்யான் உருவான விதம்:
செவ்வாய் கிரகத்தை ஆராய செயற்கைக்கோளை அனுப்பும் இஸ்ரோவின் திட்டத்திற்கு மத்திய அரசு 2012ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் தேதி ஒப்புதல் வழங்கியது. னீ454 கோடி மதிப்பீட்டில் முழுக்க முழுக்க இந்தியாவிலேயே செயற்கைக்கோள் தயாரிக்கும் பணி துவங்கியது. மொத்த மதிப்பீட்டில், ரூ.125 கோடி செலவில் மங்கள்யானுக்கு விண்ணில் செலுத்த தேவையான கருவிகள், னீ153 கோடி செலவில் செயற்கைக்கோள் மற்றும் இதர தொகை ஏவுதளம் மற்றும் இதர டிராக்கிங் சிஸ்டங்களுக்கு ஒதுக்கப்பட்டது. மங்கள்யானின் சிறப்பம்சம் என்னவென்றால் செயற்கைக்கோள் முழுவதும் இந்திய விஞ்ஞானிகளால் உருவாக்கப்பட்டது. பூமியில் இருந்து அனுப்பும் சிக்னல்களை பெறவும், செயற்கைக்கோளில் இருந்து சிக்னல்களை அனுப்பவும் வசதியாக லோ,கெயின் ஆன்டனா, மீடியம் கெயின் ஆன்டனா மற்றும் ஹை,கெயின் ஆன்டனா என 3 வகை ஆன்டனாக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த ஆன்டனாக்களுக்கு தேவையான மின்சாரம் செயற்கைக்கோளில் அமைக்கப்பட்டுள்ள 2.2 மீட்டர் அளவில் சோலார் பேனல்கள் மூலம் தயாரிக்கப்பட்டு பேட்டரியில் சேமித்து பயன்படுத்தப்படுகிறது. செயற்கைக்கோளை கட்டுப்படுத்த வசதியாக திரஸ்டர்ஸ் என்ற 8 சிறியவகை (22 நியூட்டன்) இன்ஜின்களும் மற்றும் ஒரு பெரியவகை (440 நியூட்டன்) இன்ஜினும் பொருத்தப்பட்டது. பே,லோட் எனப்படும் செவ்வாய் கிரகத்தை ஆராய பயன்படும் கருவிகள் பொருத்தப்பட்டது. மேலும் முதன் முறையாக பிஎஸ்எல்வி ராக்கெட் மிக நீண்ட தூர பயணத்தில் மங்கள்யான் செயற்கைக்கோளை சுமந்து செல்ல வேண்டியிருந்ததால் குறைவான எரிபொருளில் இயங்கும் இயந்திரங்கள் இதில் பயன்படுத்தப்பட்டது.
சந்தித்த சோதனைகள்:
மங்கள்யான் செயற்கைக்கோள் முழுவதுமாக தயாரான பின்னர் அக்டோபர் 28ம் தேதி மாலை 4.15 மணிக்கு ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக அக்டோபர் 3ம் தேதியன்றே செயற்கைக்கோள் அடங்கிய பிஎஸ்எல்வி ராக்கெட் பெங்களூரில் இருந்து ஸ்ரீஹரிகோட்டாவிற்கு அனுப்பப்பட்டது. ஆனால் செயற்கைக்கோளை விண்ணில் செலுத்துவதற்குள் இஸ்ரோவுக்கு பல்வேறு சிக்கல்கள் வந்தது. முதலில் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் நெட்வொர்க் சேவையை பயன்படுத்த வேண்டியிருந்தது. ஆனால், கடந்த ஆண்டு அக்டோபர் 5ம் தேதி அமெரிக்காவில் அரசு அலுவலகங்கள் மூடப்பட்டதால் நாசா ஊழியர்கள் 90 சதவீதம் பேருக்கு கட்டாய விடுப்பு அளித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டது.
இதனால் மங்கள்யானை விண்ணில் செலுத்துவதில் முதன் முறையாக சிக்கல் ஏற்பட்டது. ஆனால், நாசா நிறுவனம் செயற்கைக்கோளை கண்காணிக்க உதவும் என அறிவித்தது. இதனிடையே ஆந்திராவில் பிலான் புயல் எச்சரிக்கை அறிவிக்கப்பட்டது. இதனால் மங்கள்யானை செலுத்துவது மேலும் தாமதமானது. அக்டோபர் 28ம் தேதியில் இருந்து நவம்பர் 19ம் தேதிக்குள் செயற்கைக்கோள் விண்ணில் செலுத்தப்படவில்லை என்றால் மீண்டும் அதற்கான வாய்ப்பு 2 ஆண்டுகளுக்கு (2016க்கு) பிறகே அமையும் என்பதால் இஸ்ரோ மிகவும் கலக்கத்திற்குள்ளானது. இருப்பினும் அடுத்த சில தினங்களில் வானிலை சீராகி, நவம்பர் 5ம் தேதி விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்தது. இதன்படி, நவம்பர் 3ம் தேதி கவுண்டவுன் துவங்கப்பட்டு 5ம் தேதி விண்ணில் செலுத்தப்பட்டது.
மங்கள்யானின் பயண பாதை:
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பிஎஸ்எல்வி,சி25 ராக்கெட் மூலம் நவம்பர் 5ம் தேதி பிற்பகல் 2.38 மணிக்கு வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. நவம்பர் 7ம் தேதி பூமியின் முதல் சுற்றுவட்ட பாதையில் இணைந்தது. 8ம் தேதி சுமார் 12,000 கிமீ தூரம் ராக்கெட் இன்ஜின் இயக்கப்பட்டு 2வது சுற்றுவட்ட பாதையை அடைந்தது. நவம்பர் 9 மற்றும் 10ம் தேதிகளில் முறையே மூன்றாவது மற்றும் நான்காவது சுற்று வட்ட பாதைகளுக்கு உயர்த்தப்பட்டது. 16ம் தேதி பூமியின் 5வது சுற்றுவட்ட பாதையை அடைந்தது. இறுதியில் டிசம்பர் 1ம் தேதி புவிஈர்ப்பு விசை உள்ள பகுதியில் இருந்து விலகி செவ்வாய் கிரகத்தை நோக்கி நேரடி பயணத்தை துவங்கியது. டிசம்பர் 11ம் தேதி மங்கள்யான் செயற்கைக்கோளின் வழித்தடத்தில் மாற்றம் செய்யப்பட்டது.
2014ம் ஆண்டு ஏப்ரல் மாத முதல் வாரத்தில் மங்கள்யான் மொத்த பயண தூரத்தில் 330 மில்லியன் கி.மீ. (50 சதவீதம்) கடந்தது. ஜூன் 12ம் தேதியன்று செயற்கைக்கோளில் இரண்டாவது முறையாக வழித்தட மாற்றம் செய்யப்பட்டது. இம்மாதம் 16ம் தேதி மங்கள்யானை செவ்வாய் கிரக சுற்றுவட்டப்பாதையில் இணைப்பதற்கான தகவல்கள் பதிவேற்றம் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மங்கள்யானின் முக்கிய நியூட்டன் 440 திரவ என்ஜின் 300 நாட்களுக்கு பிறகு முதன்முறையாக 4 வினாடிகள் சோதனை அடிப்படையில் இயக்கப்பட்டது. இன்று (செப்டம்பர் 24) காலை 7.12 மணி முதல் செவ்வாயின் சுற்றுவட்ட பாதையில் இணைகிறது மங்கள்யான்.
மங்கள்யான் இயங்கும் விதம்:
செயற்கைக்கோளுக்கு தகவல்களை அனுப்பவும், பெறவும் வசதியாக இதில் உள்ள ஹைகெயின் ஆன்டனா பயன்படுகிறது. இந்த ஆண்டனா பெங்களூர், பைலேலு இஸ்ரோ தலைமை அலுவலகத்தில் உள்ள டிராக்கிங் ஆன்டனாவுடன் இணைக்கப்பட்டுள்ளது. செயற்கைக்கோளில் உள்ள ஆன்டனா எப்போதும் பூமியை நோக்கியவாறு அமைந்திருக்க வேண்டும். அப்போதுதான் செயற்கைக்கோள் அனுப்பும் அனைத்து தகவல்களையும் இங்கிருந்து நாம் பெறமுடியும். அதே போல செயற்கைக்கோளில் பொருத்தப்பட்டுள்ள சோலார் பேனல்கள் சூரியனை பார்த்தவாறு அமைந்திருக்க வேண்டும். இல்லையென்றால் மின்தயாரிப்பு பாதிக்கப்படும். ஆனால், சுற்றுவட்டப்பாதையில் சுழலும் போது செயற்கைக்கோள் ஒரே நிலையில் இருக்க சாத்தியமில்லை. எனவே ஆன்டனாவையும், சோலார் பேனல்களையும் சீராக வைத்துக்கொள்ள வசதியாக 22 நியுட்டன் இன்ஜின்கள் அவ்வப்போது இயக்கப்பட்டு செயற்கைக்கோளை சீரான வகையில் வைக்கும்.
பயணம் எந்த இலக்கை நோக்கி:
செவ்வாய் கிரகத்தில் மனிதன் வாழ்வதற்கு தேவையான வாழ்வாதர மூலக்கூறுகள் உள்ளதா என்பதை கண்டறிய மங்கள்யான் செயற்கைக்கோளில் 5 விதமான ஆய்வு கருவிகள்(பே,லோடு) பொருத்தப்பட்டுள்ளது. இவை செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, வாயுக்கள், மீத்தேன் ஆகியவை உள்ளதா, கதிரியக்கம் ஆகியவற்றை ஆய்வு செய்யும்.
வெற்றிகரமாக செவ்வாய்க்கு சென்ற செயற்கைக்கோள்கள்
செவ்வாய் கிரகத்திற்கு முதன்முதலில் செயற்கைக்கோளை அனுப்ப முயன்ற நாடு சோவியத் யூனியன். 1960ம் ஆண்டு அக்டோபர் 10ம் தேதி ‘‘1எம் நம்பர்.1‘‘ என்ற செயற்கைக்கோள் விண்ணில் செலுத்த முயற்சிக்கப்பட்டது. ஆனால் அவர்களின் முயற்சி வெற்றிபெறவில்லை. இதுமட்டுமல்ல இதுவரை சோவியத் யூனியன் அனுப்பிய ஒரு செயற்கைக்கோள் கூட செவ்வாய்க்கு செல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதன் பின்னர் 1964ம் ஆண்டு நவம்பர் 5ம் தேதி நாசா நிறுவனம் ‘‘மாரினர்‘‘ என்ற விண்கலத்தை அனுப்ப முயன்றது. ஆனால் அதிலும் தவறு நிகழ்ந்தது. இதன் பின்னர் ராக்கெட்டின் குறைபாடுகள் சரிசெய்யப்பட்டு 28ம் தேதி மீண்டும் விண்ணில் செலுத்தி வெற்றி கண்டது. இதற்கு முன் சோவியத் யூனியன் 5 முறை செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்ப முயற்சித்து தோல்வி கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட மங்கள்யான் முதல் முயற்சியிலேயே முழு வெற்றியை கண்டுள்ளது.
இதன் மூலம் உலகிலேயே இந்தியா நாடுதான் முதல் முயற்சியிலேயே செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பி வெற்றிகண்ட பெருமையும், ஆசிய நாட்டிலேயே செவ்வாய்க்கு செயற்கைக்கோள் அனுப்பிய ஒரே நாடு என்ற பெருமையும் ஒரு சேர கிடைத்துள்ளது. இன்று காலை 7.18 மணி முதல் செவ்வாய் கிரக சுற்றுவட்ட பாதையில் மங்கள்யானை நிலை நிறுத்தும் பணி நடைபெறுகிறது. சுற்றுவட்ட பாதையில் இணைத்து விட்டால் மட்டும் முழு வெற்றியை மங்கள்யான் அடைந்துவிடாது. சுற்றுவட்ட பாதையில் இணைக்கப்பட்ட பின்னர் பல்வேறு தகவல்கள் பதிவேற்றம் செய்யப்படும். அனைத்து தகவல்களும் பதிவேற்றம் செய்யப்பட்டு, மங்கள்யான் தனது பணியை அடுத்த இரண்டு நாட்களில் துவங்கும். மங்கள்யான் வெற்றி, உலகின் பார்வையை இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது. இந்த வெற்றிக்கு பின்னர் 2018ம் ஆண்டு மற்றொரு செயற்கைக்கோளை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்புவது குறித்து விஞ்ஞானிகள் ஆலோசித்து வருகின்றனர்.