Skip to main content

சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷா: ஐஐடி மாணவர்கள் கண்டுபிடிப்பு


சூரிய சக்தியில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷா மாதிரியை இயக்கிக் காட்டும் சென்னை ஐஐடி மாணவர்கள்.
பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், சூரிய
சக்தியில் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாவை வடிவமைத்து, சென்னை ஐஐடி மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர்.

இந்த வண்டிக்கு பெட்ரோல் தேவையில்லை என்பதோடு, "பேட்டரி ரீசார்ஜ்' செய்யவேண்டிய அவசியமும் இல்லை என்கின்றனர் அந்த மாணவர்கள்.

சென்னை ஐஐடி-யில் பி.டெக். எலெக்ட்ரிக்கல் 4-ஆம் ஆண்டு படித்து வரும் சுபம் ஜெயின், ஆதித்யா, ஜெகதீஷ் சிங், பராக் பத்கர், குமார் மிர்துல் ஆகியோர்தான் இந்த சாதனை மாணவர்கள்.

மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெறப்போகும் இந்தக் கண்டுபிடிப்பை, பை பீம் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து வர்த்தக ரீதியில் தயார் செய்து அறிமுகம் செய்ய உள்ளனர்.

சென்னை ஐஐடியின் புதிய கண்டுபிடிப்புகளுக்கான மையம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (செப்.21) நடத்தப்பட்ட கண்காட்சியில் இந்த மாணவர்களின் கண்டுபிடிப்பும் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

இந்த கண்டுபிடிப்பு குறித்து மாணவர் சுபம் ஜெயின் கூறியது:

இந்தியாவிலேயே முதன் முறையாக, சூரிய சக்தியில் இயங்கக் கூடிய ஆட்டோ ரிக்ஷாவை நாங்கள் அறிமுகப்படுத்தியிருக்கிறோம்.

தலைநகர் தில்லியில் இப்போது பேட்டரியில் இயங்கக் கூடிய "எலெக்ட்ரிக்கல் ஆட்டோ ரிக்ஷா' இயங்கி வருகிறது. இந்த வண்டியில் பொருத்தப்பட்டிருக்கும் பேட்டரி, அவ்வப்போது நகரில் ஆங்காங்கே அமைக்கப்பட்டுள்ள சூரியசக்தி மின் பங்குகளில் ரீசார்ஜ் செய்யப்பட வேண்டும்.

ஆனால், எங்களுடைய வடிவமைப்பைப் பொருத்தவரை சூரிய சக்தியில் இயங்கக் கூடியது. ரிக்ஷாவின் கூரைப் பகுதியில் சூரியசக்தி தகடுகள் பொருத்தப்பட்டிருக்கும். அடிப் பகுதியில் பேட்டரி இணைக்கப்பட்டிருக்கும். வண்டியில் சக்கரப் பகுதியில் மோட்டார் பொருத்தப்பட்டிருக்கும். பேட்டரிக்கு, சூரிய சக்தி மூலம் மின்சாரம் கிடைப்பதால், அதை ரீ-சார்ஜ் செய்ய வேண்டியதில்லை.

இந்த வாகனம் 3 நபர்களை ஏற்றிக்கொண்டு மணிக்கு 15 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும். தனி நபர் மட்டும் சென்றால் மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.

விரைவில் இந்த வாகனம் வர்த்தக ரீதியில் தயாரிக்கப்பட்டு அறிமுகப்படுத்தப்படும். இதனுடைய சந்தை விலையை ரூ. 1.25 லட்சம் என்ற அளவிலேயே நிர்ணயிக்க முடியும் என்றார் அவர்.

இதுபோல் பேட்டரியில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் சைக்கிளையும் இவர்கள் வடிவமைத்துள்ளனர். மொத்தம் 8 கிலோ எடை கொண்ட இந்த சைக்கிள், மணிக்கு 26 கி.மீ. வேகத்தில் செல்லக் கூடியது.

மிகக் குறைந்த எடை கொண்ட இதை இரண்டாக மடக்கி, தோள்பட்டையில் சுமந்தகொண்டு செல்லும் வகையில் வடிவமைத்துள்ளோம் என்றார் சுபம் ஜெயின்.

இந்தக் கண்டுபிடிப்பையும் வர்த்தக ரீதியில் அறிமுகம் செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.



காது கேளாதோருக்கான எச்சரிக்கைக் கருவி



காது கேளாதோருக்கான எச்சரிக்கைக் கருவி, மற்றவர்களுக்குத் தொல்லைகொடுக்காத டிஜிட்டல் அலாரம் உறை, கை நரம்பைக் காட்டும் கருவி, ரோபாட்டுகள் என பல்வேறு மாணவர்களின் 30-க்கும் மேற்பட்ட கண்டுபிடிப்புகள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.

இதில் காது கேளாதோருக்கான எச்சரிக்கைக் கருவியை ஐஐடி பி.இ. சிவில் பிரிவு மாணவிகள் பிந்து, பவிதா, சமிதா, கெமிக்கல் பிரிவு மாணவி வத்சல்யா ஆகியோர் அடங்கியக் குழு வடிவமைத்துள்ளது.

கண்டுபிடிப்பு குறித்து அவர்கள் கூறியது:

காது கேட்காத தாய், வீட்டில் குழந்தையைப் பராமரிக்க இந்தக் கருவி மிகுந்த பயனுள்ளதாக இருக்கும். டிரான்ஸ்மீட்டருடன் கூடிய இரண்டு வயர்லெஸ் கருவிகள் இதில் இடம்பெற்றிருக்கும். வீட்டில் ஏதாவது பணியில் இருக்கும்போது, குழந்தை அருகில் ஒரு கருவியை வைத்துவிட்டு, மற்றொன்றை தாய் தனது கையில் அணிந்து கொள்ளலாம்.

குழந்தை அழுகின்றபோது, தாயின் கையில் அணிந்துள்ள கருவியில் இடம்பெற்றிருக்கும் விளக்கு எரிந்து எச்சரிக்கை செய்யும் வகையில் கருவி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற கருவிகள் ஏற்கெனவே சந்தையில் இருக்கின்றபோதும், அவற்றின் விலை ரூ. 3 ஆயிரம் முதல் ரூ. 4 ஆயிரம் என்ற அளவுக்கு விற்கப்படுகின்றன. ஆனால், இதை ரூ. 1,500-க்கு கிடைக்கின்ற வகையில் நாங்கள் வடிவமைத்திருக்கிறோம் என்றனர்.

இதுபோல் பி.இ. பயோ டெக்னாலஜி இரண்டாம் ஆண்டு மாணவரான குரவ் பில்லோலிக்கர், கையில் மாட்டிக் கொள்ளக்கூடிய டிஜிட்டல் அலாரம் உறை ஒன்றை கண்டுபிடித்துள்ளார்.

இது அருகிலுள்ள மற்றவர்களுக்கு தொல்லை கொடுக்காத வகையில், வைபரேட்டர் மூலம் எச்சரிக்கும் அலாரமாகும். இதில் தேவையான நேரத்துக்கு அலாரம் வைத்து, கையில் மாட்டிக்கொண்டு தூங்கலாம். உடலுக்கு கேடு விளைவிக்காத வகையில் இது வடிவமைக்கப்பட்டுள்ளது என்கிறார் பில்லோலிக்கர்.

Popular posts from this blog

ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம்

கருவூலம் மற்றும் கணக்குத்துறை முதன்மைச் செயலர் தகவல் வரும் நவம்பர் முதல் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் நாளிலேயே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது என கருவூலத்துறை முதன்மைச் செயலரும், ஆணையருமான தென்காசி சு. ஜவஹர் தெரிவித்தார்.தமிழ்நாடு கருவூலக் கணக்குத் துறை சார்பில், திண்டுக்கல் மாவட்ட ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேலாண்மைத் திட்டத்தின் மூலம் பணம் பெற்று வழங்கும் அலுவலர்களுக்கான பயிற்சிக் கூட்டம் திங்கள்கிழமை தொடங்கியது. 6 நாள்கள் நடைபெறும் இப்பயிற்சி முகாமிற்கு திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் டி.ஜி. வினய் தலைமை வகித்தார். முகாமை கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர் ஜவஹர்தொடக்கி வைத்துப் பேசியது: கடந்த 1964-ஆம் ஆண்டு முதல் தனித்துறையாகச் செயல்பட்டு வரும் கருவூலத்துறைக்கு தமிழகம் முழுவதும் 294 அலுவலகங்களும், தில்லியில் ஒரு அலுவலகமும் உள்ளன. அரசு ஊழியர்களுக்கான ஊதியம், நலத்திட்ட உதவித் தொகை, நிவாரணத் தொகை உள்ளிட்ட பல்வேறு பணிகளை கருவூலத் துறை மேற்கொண்டு வருகிறது. தமிழகம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு...

சிபிஎஸ்இ பள்ளிகளில் கட்டாய யோகா

               சிபிஎஸ்இ பள்ளிகளில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாய யோகா பயிற்சி அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுவரை ஒன்று முதல் 10ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு தினமும் 40 முதல் 45 நிமிடங்கள் கட்டாய யோகா பயிற்சி அளிக்

அரசு துறைகள் மீது புகாரா? இனி ஆதார் எண் தேவை

 'அரசுத் துறைகள் குறித்து, ஆன்லைனில் புகார்களை பதிவு செய்வோர், இனி, ஆதார் எண்ணைக் குறிப்பிட வேண்டும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள அரசுத் துறைகள் மீதான புகார்கள் மற்றும் ஆலோசனைகளை,  www.pgportal.nic.in என்ற இணையதளத்தில் பதிவு