34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும் திட்டமில்லை: உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி தகவல்
தமிழகத்தில் உள்ள ஆறு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட மொத்தம் 34 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் அங்கீகாரத்தை ரத்து செய்யும்
திட்டமில்லை என்று உச்ச நீதிமன்றத்தில் யுஜிசி (பல்கலைக்கழக மானியக் குழு) வியாழக்கிழமை தெரிவித்தது.
மேலும், அடிப்படை வசதிகள் குறித்து நடத்தப்பட்ட ஆய்வு தொடர்பாக தமிழகத்தில் உள்ள மேலும் நான்கு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் உள்பட ஏழு கல்வி நிலையங்களும் முறைப்படி மனு தாக்கல் செய்து, அவற்றின் வாதத்தை வெள்ளிக்கிழமை முன்வைக்க உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்ததுபோதுமான கட்டமைப்பு வசதிகள் இல்லாத நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களின் (டீம்டு யூனிவர்சிட்டி) அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்று வழக்குரைஞர் விபலவ் சர்மா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் 2006-இல் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த 19-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, சில நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் காணொலி காட்சி (விடியோ கான்ஃபரன்சிங்) மூலம் ஆய்வு நடத்திய விவரத்தை யுஜிசி விளக்கியது. ஆனால், அதை ஏற்க மறுத்த நீதிபதிகள், "அனைத்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களிலும் நேரில் ஆய்வு செய்ய வேண்டும்' என்று அறிவுறுத்தியது.
இதைத் தொடர்ந்து, இந்த வழக்கு மீண்டும் அதே நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, யுஜிசி சார்பில் வழக்குரைஞர் மணீந்தர் சிங் ஆஜராகி முன்வைத்த வாதம்:
44 நிகர்நிலைப் பல்கலைக்கழங்களில் இரண்டு கல்வி நிறுவனங்கள் நிகர்நிலைப் பல்கலைக்கழக அந்தஸ்தை திரும்ப ஒப்படைத்து விட்டன. ஒரு கல்வி நிறுவனம் யுஜிசி விதிகளைப் பூர்த்தி செய்ததால் அதற்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டது.
மீதமுள்ள 41 நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் யுஜிசி ஆய்வு மேற்கொண்டது. அதில், 34 கல்வி நிறுவனங்களில் (தமிழகத்தில் வேல்ஸ், வேல்டெக், மீனாட்சி, கலசலிங்கம், நூரு இஸ்லாம், சவீதா) எந்தப் பிரச்னையும் இல்லை. அவை முறையாக யுஜிசி விதிகளைப் பூர்த்தி செய்து தரத்தை மேம்படுத்தியுள்ளன. எனவே, அந்த 34 நிகர்நிலை பல்கலைக்கழகங்களுக்கு அளிக்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்யும் திட்டம் யுஜிசிக்கு இல்லை.
ஆனால், மீதமுள்ள ஏழு நிகர்நிலைப் பல்கலைக்கழங்கள் (தமிழகத்தில் உள்ள பாரத், ஏஎம்இடி, விநாயகா மிஷன், ப்ரீஸ்ட்) முறையாக விதிகளைப் பின்பற்றாதது ஆய்வில் தெரிய வந்துள்ளது. அதனால், அவற்றின் அங்கீகாரத்தை ரத்து செய்ய யுஜிசி பரிசீலித்து வருகிறது' என்றார்.
இதற்கு தமிழகத்தில் உள்ள பாரத் நிகர்நிலைப் பல்கலைக்கழகம் சார்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் ஹரீஷ் சால்வே ஆட்சேபம் தெரிவித்தார். "யுஜிசி அறிவுறுத்தியபடி நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் தரம் மேம்படுத்தப்பட்டுள்ளது.
ஆனால், விடியோ கான்ஃபரன்சிங் மூலம் நடத்திய ஆய்வு அடிப்படையில் அங்கீகாரத்தை ரத்து செய்ய யுஜிசி பரிசீலிப்பது தவறு. இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட பிறகும் நேரில் ஆய்வு நடத்த யுஜிசி ஆர்வம் காட்டவில்லை.
எனவே, நேரில் ஆய்வு நடத்த யுஜிசி நடவடிக்கை எடுத்தால், அதற்கு முழு ஒத்துழைப்பு அளிக்கத் தயார். அந்த ஆய்வுக்குப் பிறகே அங்கீகாரம் தொடர்புடைய விவகாரத்தில் யுஜிசி முடிவெடுக்க வேண்டும்' என்று ஹரீஷ் சால்வே வலியுறுத்தினார்.
இதையடுத்து, நீதிபதிகள் "நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் நேரில் ஆய்வு நடத்தாமல் இருப்பது ஏன்? இந்த விவகாரத்தில் மீதமுள்ள ஏழு நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் ஒரு பல்கலைக்கழகம் மட்டும் நேரடி ஆய்வுக்குத் தயார் என்று கூறுகிறது. மற்ற கல்வி நிறுவனங்களின் நிலை என்ன? அவை உச்ச நீதிமன்றத்தில் தனது நிலையை முறைப்படி மனு தாக்கல் செய்து தெரிவிக்க வேண்டும். அதற்கு ஏதுவாக இந்த வழக்கை வெள்ளிக்கிழமைக்கு (செப்டம்பர் 26) ஒத்திவைக்கிறோம்' என்று தெரிவித்தனர்.
இதற்கிடையே, உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரியில் பிறப்பித்த உத்தரவின்படி, நாடு முழுவதும் உள்ள நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களில் யுஜிசி நடத்திய இறுதி ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை அளிக்கப்பட்ட அவகாசம், பின்னர் செப்டம்பர் 23 வரையும், அதன் தொடர்ச்சியாக செப்டம்பர் 30-ஆம் தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டது. இந்நிலையில், மீதமுள்ள ஏழு பல்கலைக்கழகங்களில் நேரில் ஆய்வு செய்ய யுஜிசி திட்டமிட்டால், அதன் இறுதி அறிக்கை தாக்கல் செய்ய மேலும் அவகாசம் கோரப்படும் எனத் தெரிகிறது