Skip to main content

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை

மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை என, சாகித்ய அகாதெமி விருதுபெற்ற எழுத்தாளர் ஜோ டி குரூஸ் தெரிவித்தார்.

மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழில் புத்தகப் பண்பாடு என்ற தலைப்பிலான பன்னாட்டு அரங்கின் 2-ம் நாள் அமர்வுகள் ஞாயிற்றுக்கிழமை
நடைபெற்றன. கல்லூரி முதல்வர் மற்றும் செயலாளர் எம்.தவமணி கிறிஸ்டோபர் தலைமை வகித்தார்.

இதில், நாவலாசிரியர் ஜோ டி குரூஸ் மேலும் பேசியதாவது: எழுத்தாளர்கள் தாங்கள் எதிர்கொண்ட உண்மை நிகழ்வுகளைப் பதிவு செய்கிறார்கள். தங்கள் காலத்து நிகழ்வுகளை, தற்கால நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தி வெளிக்கொணரும்போது நல்ல வரவேற்பு கிடைக்கும். வாசிக்கும் திறன் முன்பைவிட அதிகரித்திருந்தாலும், மாணவர்களிடம் மிகக் குறைவாகவே இருக்கிறது. இதற்கு மாணவர்களைக் குறை கூறுவதிலோ, எழுத்தாளர்கள், பதிப்பகத்தார்களை குறை கூறுவதிலோ அர்த்தமில்லை. பெரும்பாலான கல்லூரிகளில் பேராசிரியர்களும், பள்ளிகளில் ஆசிரியர்களும் மாணவர்களிடம் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை வளர்க்க வேண்டிய கடமையைச் செய்யத் தவறுவதே அடிப்படைக் காரணம். மாணவர்களிடம் வாசிக்கும் திறனை வளர்க்க வேண்டியது ஆசிரியர்களின் கடமை என்றார்.

எழுத்தாளர் தொ.பரமசிவன் பேசியது: பாரதியார் இறக்கும் தருவாயில் தன்னுடைய படைப்புகளை எல்லாம் புத்தகங்களாக வெளியிட ரூ.40 ஆயிரம் தேவைப்படுவதாகவும், இதற்காக தனது படைப்புகளை எட்டணாவுக்கு விற்பதாகவும் கூறினார். அத்தோடு ரூ.100 பங்களிப்பு செய்பவர்களுக்கு தன்னுடைய கடிதத்துடன், படைப்புகளையும் அனுப்பி வைப்பதாக அறிவித்தார். அந்தளவுக்கு மகாகவியான அவரது படைப்புகளை புத்தகங்களாகக் கொண்டு வருவதற்கு பெரிதும் சிரமப்பட்டார்.

அந்தக் காலத்தில் புத்தகத்தை வெளியிடுவது என்றால் மிகவும் சிரமம். ஆனால், இன்றைக்கு புத்தகங்களை வெளியிட ஏராளமான பதிப்பகத்தார்கள் இருக்கின்றனர். புத்தகங்கள் இன்றைக்கு சமூக மாற்றத்தை உருவாக்கியுள்ளன. ஆனாலும், ஜாதிய ரீதியான சமூக சூழல்தான் இருக்கிறது. இந்த நிலை மாறி, தனி மனித உரிமையைப் போற்றக்கூடிய சமுதாய நிலை உருவாக புத்தகக் கலாசாரத்தின் மூலமே முடியும்.

சமீப காலமாக தமிழ் கலாசார ரீதியான தேடுதல்கள் மாணவர்களின் ஆய்வுகளில் குறைந்துள்ளன. இது மாற வேண்டும் என்றார்.

புத்தகப் பண்பாடும் இலக்கியமும் என்ற தலைப்பில் நடைபெற்ற உரையாடலை சுகுமாரன் ஒருங்கிணைத்தார். எழுத்தாளர் சுரேஷ்குமார் இந்திரஜித் பேசுகையில், புத்தகத்துக்கும், தமிழ் மொழிக்கும் நெடிய வரலாறு உண்டு. புத்தகங்களையும் மக்களையும் இணைப்பது நூலகங்கள். புத்தகங்களும், நூலகங்களும் பொக்கிஷம். அவற்றை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

சிறுகதை எழுத்தாளர் யுவன் சந்திரசேகர் பேசுகையில், நவீன இலக்கியத்துக்குள் செல்வதற்கு இன்றைய இளம் எழுத்தாளர்கள் அச்சப்படுகின்றனர். ஒரு சிறுகதை படித்தாலே போதும். அதைப் பலரிடம் பகிர்ந்து கொள்ளும்போது எழுத்தாற்றல் தானாக வந்துவிடும் என்றார்.

கவிஞர் சக்தி ஜோதி பேசுகையில், முன்பெல்லாம் பெண்கள் நூலகங்களுக்கு நேரடியாகச் செல்லும் பழக்கம் இல்லை. இன்றைக்கு இதில் மாற்றங்கள் ஏற்பட்டிருந்தாலும், பெண்கள் எழுதினால் எதிர்ப்புகள் வருகின்றன. இவற்றை எல்லாம் எதிர் கொண்டு எழுதுவதற்கு பெண்கள் திரள வேண்டும், என்றார்.

Popular posts from this blog

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

Fast way math - Polynomial Factorization tricks ( SSLC Mathematics ) type 2

மாணவர்களுக்கு 'லேப்டாப்' டிசம்பருக்குள் கிடைக்கும்

இலவச, 'லேப்டாப்' வழங்கும் திட்டத்தை, டிசம்பர் மாதத்திற்குள் முடிக்கும்படி, அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டம், 2011ல் துவக்கப்பட்டது. முதல், இரண்டு ஆண்டுகள், அரசு மற்றும் அரசு உதவி

முன்னுதாரணமாக விளங்கும் வடமணப்பாக்கம் அரசு தொடக்கப் பள்ளி

எண்ம முறையில் பாடம் கற்றல், குழந்தைகள் நூல்கள் வாசித்தல், கணினிபயிற்சி பெறுதல், அறிவியல் ஆய்வகம் என பல சிறப்பு அம்சங்களுடன் சுகாதாரம், ஒழுக்கம் ஆகியவற்றுடன் சேர்ந்து கல்வி கற்பிக்கப்படுகிறது.