புதுதில்லி, ஆக.25-அரசு துறைகளும் அலுவலகங்களும் நீதிமன்றங்களில் வழக்குகள் தொடர்வதை ஒடுக்கவும் கட்டுப்படுத்தவும் புதிய கொள்கை ஒன்றை கொண்டுவர பாஜக அரசு முடிவு செய்துள்ளது என மத்திய அரசின் அதிகார வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதுதொடர்பாக, புதுதில்லியில் பத்திரிகையாளர்களிடம் பேசிய சட்டத் துறையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:அரசின் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், நீதிமன்றங்களின் சுமையைக் குறைக்கவும் தேசிய வழக்கு தொடர்தல் கொள்கை அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இக்கொள்கையானது பல்வேறு மத்திய அமைச்சர்களும் துறைகளும் என்ன மாதிரியான வழக்குகளை தொடர்வது என்பதை வரையறுத்துக் கொள்ளவும், எந்த வழக்குகளை கிடப்பில் போடுவது என்பதையும் முடிவு செய்ய அரசு துறைகளுக்கு உதவும். இந்த கொள்கையானது நல்ல வழக்குகள் தொடர்ந்து நடத்தப்படவும் மோசமான வழக்குகளை கைவிடவும் உதவும்.
இக்கொள்கையானது கடந்த 2010 ஜூன் மாதம், தொடங்கப்பட்டது. ஆனால் பல்வேறு காரணங்களுக்காக கைவிடப்பட்டது. தற்போதைய அரசு சட்ட அமைச்சகம் இக் கொள்கையை விரைவில் வடிவாக்கம் செய்து அமல்படுத்த வேண்டும். இக்கொள்கையானது மத்திய அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் கலந்தாலோசனைக்கு அனுப்பப்படும். இதுகுறித்து கருத்துகள் பெறப்பட்ட பின்னர், கொள்கை இறுதி செய்யப்படும்.இக்கொள்கையின் மூலம் இறுதியில் எதையும் நீதிமன்றங்களே தீர்மானிக்கும் என்ற எளிமையான அணுகுமுறை நிராகரிக்கப்படுகிறது.
ஏற்கெனவே, சட்ட அமைச்சகம் அனைத்து மத்திய அமைச்சகங்களுக்கும், பொதுத்துறை நிறுவனங்களுக்கும் ஒருவர் மீது மற்றொருவர் வழக்குத் தொடரக் கூடாது என்று எச்சரிக்கை செய்து சுற்றறிக்கை விடப்பட்டுள்ளது.அரசுத் துறைகளுக்குள் முரண்பாடு ஏற்பட்டால், முதலில் இரு தரப்பினரும் சட்ட அமைச்சகத்தை அணுக வேண்டும். சட்ட அமைச்சகத்தில் பிரச்சனைக்கு தீர்வு ஏற்படாதபட்சத்தில், அமைச்சக செயலர் பிரச்சனையை தீர்த்துவைக்க கேட்டுக் கொள்ளலாம். பிரதமர் அலுவலகமே பிரச்சனையை தீர்ப்பதற்கான இறுதி அதிகாரம் கொண்ட அமைப்பாகும்.இவ்வாறு அந்த அதிகாரி கூறியுள்ளார்.